டோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்

டோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

ஐந்து மாதங்களுக்கு முன்பு டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இரு நாட்டு படைகளும் எல்லையிலிருந்து படைகளை விலக்கி கொள்ள சம்மதித்தன, பெயரளவில் மட்டுமே நடந்த இந்த படை விலக்கும் திட்டம், குறுகிய காலத்திலேயே மீண்டும் தொடர்ந்தது. சீனாவின் படை குவிப்பு குறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. இருப்பினும் ராணுவம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவு படைகளை சீனாவுக்கு எதிராக அப்பகுதியில் தற்போதும் நிலை நிறுத்தியுள்ளத்தியது. இது சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு.

வடக்கு டோக்லாம் பகுதியின் ஒவ்வொரு முக்கிய தாக்கும் பகுதியையும் சீனா இப்போது பலப்படுத்தியுள்ளது. புதிய கட்டமைப்புகள், தாக்கும் நிலைகள், அதோடு பதுங்கு குழிகள், சென்று வர சாலை வசதிகள் மற்றும் இருப்பிடத்தை மறைக்கும் வலைகள் என முழு அளவு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளது.

ZBL 09 IFV

அப்பகுதியில் சுமார் ஒரு ரெஜிமண்ட் அளவு சண்டையிடும் நவீன ZBL-09 டாங்கிகளை குவித்துள்ளது. அதோடு மேலும் ஒரு ரெஜிமென்ட் அளவு சண்டையிடும் டாங்கிகளை வலைகள் கொண்டு மூடி வைத்துள்ளது, ஒரு ரெஜிமென்ட் டாங்கி பிரிவில் சுமார் 45-50டாங்கிகள் இருக்கும். இலகு ரக சண்டையிடும் இந்த டாங்கிகள் மலைப்பகுதியில் போரிட சிறந்தவை, எதிரி படைகளையும், பாதுகாப்பு நிலைகளையும் தாக்கி சொந்த படைகளை எதிரி நிலத்திற்குள் ஊடுருவ உதவி செய்யும்.

அதன் அருகே நிலத்தை சமப்படுத்தி, மேலதிக டாங்கிகளை நிலை நிறுத்தவும், சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து டாங்கிகளோ கவச வாகங்களோ வந்தால் அவற்றை அங்கு நிறுத்தவும் தயார் படுத்தி வைத்துள்ளது. இது இழப்புகள் ஏற்பட்டாலும் அடுத்த நொடி மேலதிக படைகளை எளிதில் குவிக்க சீனா திட்டமிட்டுள்ளதை உணர்த்துகிறது.

அந்த பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட லாரிகளும் தென்படுகிறது, இவை வீரர்களை கொண்டு வரவும், உணவு மற்றும் ஆயுதங்களை கொண்டு வரவும் உதவும், இவ்வளவு பெரிய அளவு போக்குவரத்து ஊர்திகள் அங்கு இருப்பது, சுமார் 2000-க்கும் மேல் சீனப்படைகள் அங்கு இருக்கலாம் என்ற ஊர்ஜிதத்தை தெளிவாக்குகிறது.

மேலும் அங்கு நான்கு புல்டோசர்கள் மற்றும் நான்கு பெரிய டிப்பர்களும் இருப்பது செயற்கைகோள் படத்தில் தெரிகிறது. இது சீனா தொடர்ந்து அந்த இடத்தை சமப்படுத்தவும் இந்திய மற்றும் பூடான் எல்லைக்குள் சாலை அமைக்க முயற்சிக்கும் என்பதையும் காட்டுகிறது.

அதன் அருகே சுமார் 30 மீட்டர் உயரத்தில் கான்கிரீட்டால் கண்காணிக்கும் கோபுரம் ஒன்றயும் அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரத்திற்கும் அதன் அருகில் இருக்கும் இந்திய ராணுவ பதுங்கு குழிக்கும் உள்ள தொலைவு வெறும் பத்து மீட்டர் தான். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு அசைவையும் சீனாவால் உடனுக்குடன் எளிதில் கண்டுகொள்ள முடியும். முக்கியமாக டோக்லாம் பகுதியின் குபுக் பகுதிக்கு மேல் எந்த வித அசைவுகள் இருந்தாலும் சீனாவால் எளிதில் கண்டறிய முடியும்.

அதன் அருகே மேலும் ஒரு பெரிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க சீனா பெரிய அளவில் நிலத்தை தயார் செய்து வருகிறது.

அதோடு இந்திய சீன எல்லைக்கு அருகில் ஏராளமான தாக்கும் நிலைகளை சீனா அமைத்து வருகிறது கடினமான கான்கிரீட் சுவரால் கட்டப்பட்டுள்ள இந்த நிலைகள் துப்பாக்கி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளிலிருந்து சீன படைகளை காக்கும். அதோடு அனைத்து தாக்கும் நிலைகளும் நவீன தொலை தொடர்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் தலைமை மற்றும் அடுத்த நிலைகளை தொடர்பு கொள்ள வழி செய்யும்.

இதே பகுதியில் ஒரு சிறிய அளவு வான் தாக்குதல் படைகளையும் நிலை நிறுத்த சீனா முடிவு செய்து முதல் கட்டமாக சுமார் ஏழு  ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை அமைத்துள்ளது, இவைகள் சீனாவின் தாக்கும் ஹெலிகாப்டர்கள் முதல் பெரிய போக்குவரத்து ஹெலிகாப்டர்களை கையாளும் வகையில் மிக பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது.

வெறும் ஐந்து மாதங்களில் ஒரு பெரிய அளவு பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுவி, இந்தியாவின் ஒரு கடும் தாக்குதலை சமாளிக்கவும் அதோடு தேவைப்பட்டால் இந்திய நிலைகள் மீது ஒரு தொடர்ந்த கடும் தாக்குதலை தொடுக்கவும் தயார் நிலையில் உள்ளது.

சீனா கட்டியுள்ளவை நிரந்தர கட்டுமானங்கள், அதுவும் எல்லைக்கு அருகே 100 மீட்டர் தூரத்திற்குள். ஆக சீனா அங்கு நிரந்தரமாக படைகளை குவித்து சண்டைக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பது தெளிவாகிறது.

செயற்கை கோள் படங்களை ஆராய்ந்து இது குறித்து கூறியவர் முன்னாள் ராணுவ கர்னல் விநாயக். லிங்க்

இந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் பகுதிக்கு அருகே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தை பிரென்ச் நாட்டு உதவியுடன் மிக வேகமாக நவீனப்படுத்தி வருகிறது, இங்கு தான் தனது முதல் ரபேல் போர் விமான ஸ்குவாடை 2019-இல் நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதுவரை சுழற்சி முறையில் அருகில் உள்ள விமான தளங்களிருந்து சுகோய் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

எல்லைக்கு அருகில் பார்த்தால், இந்திய தரப்பு குறைவான எண்ணிக்கையிலும், போதிய கனரக ஆயுதங்களோ அல்லது சண்டையிடும் ஊர்திகளோ இல்லாமல் உள்ளது, ஹெலிகாப்டர் உதவிக்கும் அருகில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தையே நம்பியுள்ளது..