தேஜாஸ் விமானம் ஒன்றுக்கும் உதவாது , அரசிடம் அறிக்கை அளித்தது விமானப்படை

தேஜாஸ் விமானம் அதனுடன் ஒத்த மற்ற விமானங்களுடன் போட்டியிட தகுதி இல்லை எனவும், அதனால் இந்திய வான் எல்லையை காக்க முடியாது எனவும், அதனால் அதை படையில் இணைப்பது கடினம் என்றும் பாதுகாப்பு கேபினட் முன்பு இந்திய விமானப்படை விளக்கம் கொடுத்துள்ளது. இது தேஜாஸ் விமான தயாரிப்பு திட்டத்திற்கு பெருத்த பின்னடைவு ஆகும், ஏற்கனவே கப்பல் படையும் தேஜாஸ் விமானத்தை தரம் குறைந்தது எனக் கூறி அதை பயன்படுத்த முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேஜாஸுடன் ஒப்பிடுகையில் மற்ற நாட்டு விமானங்களான கிரிப்பன் மற்றும் F 16 மிகவும் முன்னணியில் உள்ளதாகவும், தேஜாஸ் விமானம் அதன் அருகில் கூட செல்ல முடியாது எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது, அதற்கான தரவுகளையும் கூடவே அளித்துள்ளது.

தேஜாஸ் விமானத்தால் தொடர்ந்து வெறும் 60 நிமிடங்கள் தான் பறக்க முடியும், ஆனால் அதன் போட்டியாளர்கனான கிரிப்பன் விமானத்தால் மூன்று மணி நேரமும், F 16 விமானத்தால் நான்கு மணி நேரமும் தொடர்ந்து பறக்க முடியும்,  அதோடு ஆயுதங்களை தங்கி செல்லும் திறனை ஒப்பிடுகையில், தேஜாஸ் விமானத்தால் வெறும் 3000 கிலோ தான் தூக்கி செல்ல முடியும், ஆனால் கிரிப்பன் மற்றும் F 16 முறையே 6000  மற்றும் 7000  கிலோ வரை ஆயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டவை.

உதாரணமாக ஒரு இலக்கை தாக்கி அழிக்க 36 குண்டுகள் தேவைப்படும் எனில், விமானப்படைக்கு ஆறு தேஜாஸ் விமானங்கள் தேவைப்படும், ஆனால் அதே இலக்கை வெறும் மூன்று கிரிப்பன் அல்லது மூன்று F 16 விமானங்கள் தாக்கி அழித்து விடும். இதனால் செலவும் குறைவு, அதோடு வெகு தூரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்க முடியும்.

அதோடு ஒரு மணி நேரம் தேஜாஸ் வானில் பறந்த பிறகு அதற்கு பராமரிப்பு வேலைகள் செய்ய சுமார் 20 மணி நேரம் தேவைப்படும், ஆனால் மற்ற விமானங்களுக்கோ வெறும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் தான் தேவைப்படும். இதனால் தேஜாஸ் விமானத்தை அதிக அளவில்  பயன்படுத்த முடியாததோடு மட்டுமல்லாது, அதோடு பராமரிக்கவும் அதிக அளவு மனித வளம் தேவைப்படும். இதனால் பராமரிப்பு செலவும் அதிகம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் தேஜாஸ் விமானத்தில் அதிக அளவு வெளிநாட்டு உபகரணங்கள் இருப்பதும் குறைவானாக எண்ணிக்கையில் விமானங்கள் இருப்பதுமே ஆகும்.

அதோடு தேஜாஸ் விமானத்தின் வாழ் நாளும் மிகக் குறைவு, தேஜாஸ் விமானதால் வெறும் 20 ஆண்டுகள் தான் படையில் இருக்க முடியும், ஆனால் கிரிப்பன் மற்றும் F 16 விமானத்தால் 40 ஆண்டுகளுக்கும் மேல் படையில் இருந்து செயலாற்ற முடியும். ஒரு சில தருணங்களில் மிகப்பழைய MiG 21 விமானம் தேஜாஸ் விமானத்தை விட சிறந்து செயல்படும் திறன் வாய்ந்தது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானப்படை அதிக அளவு ரபேல் விமானங்கள் வேண்டும் என்று தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தது, ஆனால்அதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால் முடியாது என்று மறுத்து விட்டார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், அதோடு விலை குறைந்த ஒற்றை எஞ்சின் கொண்ட கிரிப்பன் அல்லது F 16 விமானத்தை தேர்வு செய்யுமாறும் விமானப்படையை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.  இதற்கு தொடர்ந்து விமானப்படை மறுப்பு தெரிவிக்கவே, இந்த ஒற்றை எஞ்சின் கொள்முதல் திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வந்தது. இதனால் விமானப்படையின் தாக்கும் திறனும் மெதுவாக குறைந்து வருகிறது.

  இந்நிலையில் பாதுகாப்பு ஆலோசகர் தோவல் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து பேசி முடிவெடுக்க கேட்டுக்கொண்டுள்ளார். அதன் படியே விமானப்படையிடம் அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் கேட்டுள்ளார். அந்த அறிக்கையில் தான் தேஜாஸ் குறித்து விமானப்படை மேற்கண்டவாறு கூறியுள்ளது..