டிஜிட்டல் இந்தியா சீனாவின் கைகளில், விழிக்குமா அரசு,

 சர்வதேச பார்வையாளர்களின் ஆராய்ச்சி அமைப்பு (ORF) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் மொத்த மின்னணு பரிவர்த்தனைகள், தகவல் தொடர்புகள் அனைத்தையுமே சீனாவால் கண்காணிக்க முடியும் என்றும், சுருக்கமாக சொல்லப்போனால் இந்தியாவின் மின்னணு தகவல் தொடர்புகள் அனைத்துமே சீனாவின் கைகளில் தான் என்று கூறியுள்ளது.

  இந்தியா உலகின் மிக வேகமான மின்னணு பொருட்களின் சந்தை மையமாக மாறியுள்ளது, 2020-ம் ஆண்டுக்குள் சுமார் $400 பில்லியன் அளவு மின்னணு பொருட்களை இறக்குமதி செய்யவுள்ளது. இந்திய அரசு ஒரு சில முயற்சிகள் எடுத்தும் இந்தியாவின் மின்னணு தேவைகளை உள்நாட்டு உற்பத்தியினால் சிறிதளவு கூட பூர்த்தி செய்ய முடியவில்லை, இதனால் 75% தேவைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த இறக்குமதி, வணிகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும்.

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். அதோடு உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக இந்தியா மாறியுள்ளது, இது இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனங்களின் தயாரிப்பு அவசியத்தை காட்டுகிறது. அது மட்டுமல்லாது அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் தொலைத்தொடர்பு கருவிகளின் தேவைப்பாடு மிக அதிகம் உள்ளது,

இந்தியா மின்னணு இறக்குமதிக்காக அதிக அளவு தொகையை செலவிடுகிறது, சுருக்கமாக சொல்லப்போனால் அதிகளவு இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையில் மூன்றாவது இடம் தொலை தொடர்பு சாதனங்களுக்கே, 2016- வது வருடம் மட்டுமே சுமார் 2,25,000 கோடி ரூபாய் மின்னணு சாதனங்கள் வாங்க செலவிட்டுள்ளது, இது இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை, கடந்த வருடங்களை காட்டிலும் இது வெகுவாக அதிகரித்து வந்துள்ளது. இன்னும் துல்லியமாக, இதன் தேவைப்பாடு பெட்ரோலிய பொருட்களை விடவும் அதிகம் உள்ளது, வரும் காலங்களில் பெட்ரோலிய பொருட்களை விட அதிக அளவு தொகைக்கு மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்யப்படலாம்.

வரிக்கொள்கை மற்றும் ஒழுங்காக திட்டமிடாத வணிக முறைகளால் உள்நாட்டு உற்பத்தி சோர்வடைந்த நிலையில் உள்ளது, Make in India திட்டத்தாலும் ஒரு பயனும் ஏற்படவில்லை,

ஆனால் சீனாவோ இதை நல்ல ஆதாயமாக பயன்படுத்தி இந்தியாவின் மின்னணு தேவைப்பாட்டை பூர்த்தி செய்து வருகிறது, சீனாவின் மின்னணு பொருட்களுக்கு இந்திய சந்தை நல்ல இடமாக காணப்படுவதால் சீனா தொடர்ந்து இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது. 2016-இல் மட்டுமே சீனா சுமார் 2,40,000 கோடி ரூபாய் அளவு பெறுமானமுள்ள மின்னணு பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மேலும் பல திட்டங்களில் இந்திய நிறுவங்களோடு கைகோர்த்துள்ளது, இதனால் வரும் நாட்களில் இந்த தொகையின் அளவு இன்னும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

மின்னணு பொருட்களின் முதுகெலும்பாக உள்ள, குறை கடத்திகள், IC சிப்புகள் பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில், தற்போது இந்தியாவில் மேற்கண்ட பொருட்களை தயாரிக்க எந்த நிறுவங்களும் இல்லை எனவும், 2014-இல் திட்டமிடப்பட்ட இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் போதிய முதலீடுகள் இல்லாததால்  இன்னும் ஆரம்பிக்கபடவில்லை என்றும் ஆனாலும் அரசு இதை துவங்க போதிய நடவடிவக்கை எடுத்துவருவதாகவும் கூறியுள்ளது,

2020 வாக்கில், குறைக்கடத்திகளின் தேவைப்பாடு இந்திய சந்தையில் சுமார் 3,00,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை ஒரு நிறுவனங்களாலும் இதை இந்தியாவில் தயாரிக்க முடியவில்லை, மொத்த தேவைப்பாட்டிற்கும் சீனாவையே நம்பியுள்ளது இந்தியா,

உலக அளவில் பார்க்கப்போனால், மொத்த உலக சந்தையில் சீனாவின் குறைக்கடத்திகளின் பங்கு வெறும் 16.2% சதவீதம் தான், இருந்தாலும் சீனா தனது குறைக்கடத்தி தயாரிப்பின் வேகத்தை அதிகரித்து வருகிறது, அதற்கு இந்திய சந்தையே முதல் முழு முக்கிய காரணம். சீனா குறை கடத்திகள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக சுமார் 6,00,000 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ இரண்டு தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வெறும் 64,000 கோடி தான் செலவிட்டுள்ளது.

குறை கடத்திகளின் திறனை அதிகரிக்கவும், சீன பொருட்களின் சந்தை மதிப்பை அதிகரிக்கவும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறது சீனா , அதோடு ஒருசில மேற்கு நாட்டு நிறுவனங்களை வாங்கவும்  முனைப்பு காட்டி வருகிறது. உதாரணமாக சீனாவின் சின்குவா குறைக்கடத்தி நிறுவனம் இங்கிலாந்தின் டயலாக் குறை கடத்தி நிறுவனத்துடன் சேர்ந்து நவீன தொலை தொடர்பு கருவிகளில் பயன்ப்டுத்தப்படும் குறைக்கடத்திகளை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. சின்குவா நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையை கட்ட அந்நாட்டு அரசு சுமார் 1,80,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

இருந்தாலும் பல மேற்கு மற்றும் உலக நாடுகள் சீனாவுடன் கை கோர்க்க தயங்கி வருகின்றன, இதற்கு முக்கிய காரணமாக அந்நாடுகளின் பாதுகாப்பு சீனாவால் உளவு பார்க்கப்பட்டு விடுமோ என்று தான்.  கடந்த வருடம் டிசம்பரில் அமெரிக்கா பாதுகாப்பு துறைக்கு குறை கடத்திகள் சப்பை செய்து கொண்டிருந்த நிறுவனமான ஆக்ஸ்டரானை மற்ற நிறுவனங்கள் வாங்கவோ அல்லது அதனுடன் கூட்டு சேரவோ தடை விதித்தது அமெரிக்கா. இதற்கு முழு முக்கிய காரணமாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் குறை கடத்திகள் மற்றும் IC-க்கள் குறித்த தகவல்கள் வேறு நாட்டுடன் பகிரப்பட்டு விடுமோ என்ற அச்சமே.

அது மட்டுமல்லாது, சீனாவின் குறை கடத்திகள் சந்தை உலக நாடுகளை மெதுவாக வசப்படுத்தி வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் குரல் எழுப்பப்பட்டது, அதனால் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் குறை கடத்தி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக அளவு சலுகைகளை அறிவித்து அவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது, அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே கடைசியில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கடினக் கண்ணாடிகளுக்கு ( Tampered Glass ) தடை விதித்தது இந்தியா. ஸ்மார்ட்போன்களின் திரைகளில் பயன்படுத்தப்படுவது இந்த கண்ணாடிகள் தான்.

ஸ்மார்ட் போன்களில் விலையில் 25% அதன் குறை கடத்திகள் மற்றும் IC-க்கு தான் செலவிடப்படுகிறது , இந்த மொத்த தொகையும் சீனாவுக்கு தான் செல்கிறது. இந்திய ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் போன் வாங்கும் தொகையில் 25%-ஐ சீனாவுக்கு கொடுக்கிறார்கள், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முதல் 5 ஸ்மார்ட்போனிகளில் மூன்று இடம் சீன தயாரிப்பு போன்களுக்கே, சியோமி ஒப்போ மற்றும் விவோ (Xiomi, Oppo, Vivo ) மற்ற இரண்டும் இடங்களும் கூட வெளிநாட்டு நிறுவங்கள் தான் ( Samsung and Lenovo )

சீனாவின் BBK நிறுவனம் இந்த வருட முதல் காலாண்டில் அதிக அளவு மொபைல் போன்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒப்போ, விவோ மற்றும் One Plus மொபைல் போன்கள், BBK நிறுவனத்தின் தயாரிப்பு தான். இவற்றின் விளம்பரங்களுக்கு மட்டுமே சுமார் 1500 கோடி ரூபாயை இந்த வருடம் மட்டும் செலவிட்டுள்ளது இந்நிறுவனம். இது இந்தியாவின் விளம்பர செலவு மட்டுமே.

  இந்தியாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவின் இந்த வேலைகளை இந்திய அரசுக்கு பல முறை தெரிவித்தும், அரசு பதில் எதுவும் அளிக்கவில்லை,

அது மட்டுமல்லாது சீன மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான அலி பாபா இந்தியாவின் Paytm பண பரிவர்த்தனை செயலியின் பங்குதாரராக உள்ளது, அதோடு இன்னும் சில நாட்களில் இந்த செயலியின் மொத்த கட்டுப்பாட்டையும் சீனா எடுத்துக்கொள்ளும் என்பதிலும் ஐயம் இல்லை, தற்போதைய தகவல் படி paytm செயலின் 70 % பங்குகள் சீன நிறுவனங்களிடமே உள்ளது. நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு paytm செயலியை அதிக அளவு இந்தியர்கள் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்திகின்றனர்.2017  பிப்ரவரியில் paytm செயலியில் சுமார் 20 கோடி இந்தியர்கள் பண பரிவர்த்தனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அலிபாபா நிறுவனத்தின் UC  செயலியை சுமார் 10  கோடி இந்தியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் பெரும்பான்மையான கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்கள் சீனாவின் ZTE மற்றும் ஹுவாவேய் நிறுவனங்களின் பொருட்களையே பயன்படுத்தி வருகின்றன, அதோடு அதன் சேவைகளை விரிவாக்கவும் சீன அரசின் உதவியோடு இந்தியாவில் பல முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றது, இந்தியாவில் இரண்டாவது பெரிய மொபைல் நெட்ஒர்க் நிறுவனமான வோடபோன் நிறுவனம் தனது சேவைகளின் பராமரிப்புக்கு சீனாவின் ஹுவாவை-யுடன்  ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வோடபோன் பயனர்களின் மொத்த தகவலையும் சீனாவால் ஒட்டுக்கேட்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

அதோடு ஏர்டெல் நிறுவனமும் தனது  ப்ராட்பாண்ட் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஹுவாவை நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த சேவைகளை மேற்கண்ட நிறுவனங்களுக்கு நோக்கியாவும், எரிக்சனும் செய்து கொடுத்துவந்தன, ஆனால் தற்போது அவைகளை முந்தி ஹுவாவை மற்றும் ZTE ஒப்பந்தங்களை கைப்பற்றியுள்ளன. இந்திய நிறுவனங்களால் இவற்றை செய்து கொடுக்க முடியாததால் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைப்பாடு வேண்டியுள்ளது,.

  சீன தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களோடு கை கோர்க்க 2010 ஏப்ரல் மாதம் அரசு தடைவிதித்தது, ஆனாலும் இது 3G சேவையை வெகுவாக பாதிக்கும் என்பதால் ஜுன் மாதமே அந்த தடையை விலக்கி விட்டது அரசு. பிறகு இதுவரை எந்த தடையோ அழுத்தமே அரசால் சீனாவுக்கு கொடுக்கப்படவில்லை.

அது மட்டுமல்லாது CCTV துறைகளிலும் சீன நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்து உலக சந்தையையும் இந்திய சந்தையையும் கைப்பற்றிவருகிறது, வரும்காலங்களில் அதிகரிக்கும் இந்த சந்தைக்கு போட்டியாக இந்திய நிறுவனங்கள் ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், அரசு நிறுவனமான BSNL வெளியிட்ட சர்வதேச டெண்டரில் சீனாவின் ஹுவாவை நிறுவனமும் கலந்துகொண்டு ஒப்பந்தத்தை கைப்பற்ற போட்டி போட்டுகொண்டு வருகிறது. அந்தமான் தீவை இந்தியாவுடன் இணைக்க கடலடியில் நெட்ஒர்க் ஒயர்களை பதிக்கும் இந்த திட்டத்தில் இதே ஒயர்கள் மூலம் தான் பாதுகாப்பு குறித்த தகவல்களும் பரிமாறப்படும், ஒருவேளை சீன நிறுவனமோ அல்லது சீன நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த மற்ற ஏதேனும் நிறுவனமோ இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றினால், இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அனைத்து தகவல்களும் சீனாவுக்கு எளிதில் கிடைத்துவிடும்.

  ORF தளத்தில் இதன் முழு கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளது, அதோடு பல குறிப்புகள் மற்றும் விளக்கங்களுடன், ஆர்வமிருந்தால் சென்று படிக்கலாம்.