234 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க டெண்டர் வெளியிட்டது கப்பல் படை

இந்திய கப்பல் படையில் உள்ள பழைய ஹெலிகாப்டர்களை நீக்கி விட்டு புதிய நவீன ஹெலிகாப்டர்களை சேர்க்க பல முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஒரு முறை புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது கப்பல் படை. இம்முறை இரண்டு அலகுகளாக பிரிக்கப்பட்டு தனி தனி டெண்டராக வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண வேலைகளுக்காக சுமார் 111 இலகு ரக ஹெலிகாப்டர்களும், கடல் பாதுகாப்பு, தாக்குதல் மற்றும் உளவு வேலைகளுக்காக சுமார் 123 ஹெலிகாப்டர்களையும் வாங்க முடிவெடுத்துள்ளது. அதே நேரம் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்மூழ்கி தேடி அழிக்கும் ஹெலிகாப்டர் வாங்கும் திட்டமும் அரசுடன் பேச்சுவார்த்தை வடிவில் உள்ளது என்றும் கப்பல் படை தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 250 ஹெலிகாப்டர்களுக்காக சுமார் 6 பில்லியன் டாலர் அளவு தொகையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் செலவிடவுள்ளது கப்பல் படை.

கப்பல் படையின் ஹெலிகாப்டர் தேவைப்பாடு நீண்ட நாட்களாக பூர்த்தியாகாமல் கிடப்பில் உள்ளது. புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பல முறை எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தற்போதும் ஏன் இன்னும் சில ஆண்டுகள் கூட பழைய ஹெலிகாப்டர்கள் வைத்து தான் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது கப்பல் படை.

கப்பல் படையிடம் தற்போது சுமார் 30  முதல் 50  வரை சீட்டாக் இலகு ரக ஹெலிகாப்டர்கள், சுமார் 10  சீ கிங்க் போக்குவரத்துக்கான ஹெலிகாப்டர், சுமார் 22  மார்க் 42  சீ கிங்க் நீர்மூழ்கி தேடி அழிக்கும் ஹெலிகாப்டர். மேலும் சுமார் 14  Ka 28 நீர்மூழ்கி தேடி அழிக்கும் ஹெலிகாப்டர், சுமார் 14 ராடார்களை கொண்ட Ka 31 ஹெலிகாப்டர்கள், அதோடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர்கள் சிலவற்றையும் கப்பல் படை பயன்படுத்தி வருகிறது.

1970-களிலிருந்து வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஹெலிகாப்டர்கள் தங்கள் வாழ்நாள் அளவையும் தாண்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இவற்றை தகுந்த நேரங்களில் நீக்கி புதிய ஹெலிகாப்டர்களை பணியில் சேர்த்திருக்க வேண்டும். தவறிய காரணத்தினாலேயே இப்போது மொத்த ஹெலிகாப்டர்களையும் ஒரே நேரம் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கப்பல் படை.

தற்போது கப்பல் படையில் உள்ள எல்லா போர் கப்பல்களுமே ஒன்று அல்லது இரண்டு ஹெலிகாப்டர்களை சுமக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கப்பல் படையின் தொழில்நுட்பமும் தாக்கும் சக்தியும் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக புதியவகை தாக்கி அழிக்கும் கொல்கத்தா வகை கப்பல்கள், தற்போது கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் வகை கப்பல்கள், காமோர்தா நீர்மூழ்கி அழிக்கும் கப்பல்கள், அதோடு ஷிவாலிக் மற்றும் தல்வார் ரக பாதுகாப்பு கப்பல்கள் ஆகிவை நவீன ரக ஹெலிகாப்டர்கள் இல்லாமல் பணியில் உள்ளது. புதிய ஹெலிகாப்டர்களை இந்த கப்பல்களோடு சேர்த்து பயன்படுத்தினால் அவற்றின் தாக்கும் சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

  பொதுவாக ஒரு போர் கப்பலுக்கு, நீர்மூழ்கி தேடி அழிக்கும் ஹெலிகாப்டர் மற்றும் உதவி கப்பல் என இரண்டு வகை கப்பல்கள் தேவை. போர் கப்பல்கள் பொதுவாக சுமார் 30  நாட்டிக்கல் மைல் வேகத்தில் தான் செல்லும், ஆனால் ஹெலிகாப்டர்களோ சுமார் 200 முதல் 250 நாட்டிக்கல் மைல் வேகத்தில் முந்தி சென்று பிரச்சனைகளை குறித்து ஆராயும், தேவைப்பட்டால் கமாண்டோ வீரர்களை கடலிலோ கப்பலிலோ அல்லது கடற்கரையிலோ இறக்கி வேலையை முடிக்கும். மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கும், ஆபத்தில் இருக்கும் கப்பல்களுக்கு உதவியாகவும் ஹெலிகாப்டர்கள் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெரிய போர்கப்பல்களின் உற்ற நண்பன் போல இந்த ஹெலிகாப்டர்கள் செயல்படும்.

இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் டெண்டர். வெவேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது. பல்திறன் செயல்பாட்டுக்கு வாங்கப்படும் ஹெலிகாப்டர்,

1. நீர்மூழ்கிகளை தேடி அழிக்கவும்.

2. எதிரி போர் கப்பல்களை/ படகுகளை தாக்கி அழிக்கவும்

3. எதிரிகளின் சிக்னல்களை இடை மறிக்கவும்

4. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காகவும்

5. 2500 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லவும்.

6. கமாண்டோ வீரர்களை எதிரி கப்பல் அல்லது நிலத்தில் தரை இறக்கவும்.

6. பேரழிவு நேரங்களில் உதவி செய்யவும், பயன்படுத்தப்படும்

இந்த ஹெலிகாப்டர்களை கப்பல் படையின் முன்னணி போர் கப்பல்களில் பயன்படுத்த கப்பற்படை திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துடன் பிரெஞ்சு நாட்டின் ஏர்பஸ் நிறுவனம் தனது H225 ஹெலிகாப்டரை தர ஆயத்தமாக உள்ளது. மேற்கூறிய அனைத்து பணிகளையும் அந்த ஹெலிகாப்டர் சிறப்பாக செய்யும் என்றும் ஏர் பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது, அதோடு ஹெலிகாப்டர் தயாரிக்கும் அனைத்து தொழில்நுட்ப முறைகளையும் மஹிந்திரா நிறுவனத்துக்கு தரவும், இந்தியாவிலேயே எல்லா ஹெலிகாப்டர்களை செய்யவும் ஒத்துக்கொண்டுள்ளது. இந்த H225 ஹெலிகாப்டர்களை உலகின் பல்வேறு நாடுகள் தங்களது கப்பல் படையில் பயன்படுத்தி வருகின்றன.

Airbus H 225M

ஏர்பஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அமெரிக்காவின் சிகோர்ஸ்கி நிறுவனம் தனது பிரபலமான பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரித்து கப்பல்படைக்கு கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனாலும் பிளாக் ஹாக்கின் நவீன வடிவமான S 70 அல்லது S 92-வையே இந்த டெண்டரில் சிகோர்ஸ்கி முன்வைக்கும் என்று கருதப்படுகிறது.

  இவ்விரு ஹெலிகாப்டர்களில் ஏதாவது ஒன்றை தான் கப்பல் படை தேர்வு செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் HAL  நிறுவனம் இது போன்ற ஹெலிகாப்டரை தயாரிப்பது மிக கடினம், அதனால் வெளிநாட்டிடமிருந்து அதிக விலை கொடுத்து தொழில்நுட்பத்தையும் உபகரணங்களையும் வாங்கி அதை உள்நாட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கப்பல் படை.

அடுத்ததாக இலகு ரக ஹெலிகாப்டர் ஒப்பந்தம். இதை இலகு ரகத்தில் சேர்க்க முடியாது என்றாலும் கப்பல் படை அந்த நிலையில் தான் இந்த ஒப்பந்தத்தை பார்க்கிறது, காரணம் இரட்டை எஞ்சின்கள் மற்றும் 5-6டன் எடை கொண்ட ஹெலிகாப்டர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 111 ஹெலிகாப்டரை கப்பல் படை வாங்கவுள்ளது.

மேலும் அது கீழ்கண்ட பணிகளை செய்யுமாறும் கப்பல் படை கேட்டுள்ளது.

1. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள்

2. காயம்பட்டவர்களை மீட்டல்

3. தகவல் தொடர்பு வேலைகள்

4. கடல் கொள்ளை தடுப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பணிகள்

5. பேரிடர் மீட்பு பணிகள்

H145
Airbus H 145

6. உளவு மற்றும் இலக்குகளை கண்டறிதல்

குறிப்பாக இதற்காக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற யூகம் புலப்படவில்லை, அமெரிக்காவின் பெல் மற்றும் பிரெஞ்சு நாட்டின் ஏர்பஸ் நிறுவனங்கள் இதுபோன்ற பணிகளை செய்யும் வகையில் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளன. குறிப்பாக ஏர்பஸ் நிறுவனத்தின் H145 ஹெலிகாப்டர் மேற்கூறிய பணிகளை சிறப்பாக செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பல நாடுகளின் ராணுவம் மற்றும் கப்பல் படையில் பணியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவம் ரஷ்யாவின் Ka 226T ஹெலிகாப்டரை சமீபத்தில் தேர்வு செய்திருந்தது, அதை HAL நிறுவனம் தான் இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக தேர்வு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் கிடப்பில் உள்ளது. கப்பல்படை HAL நிறுவனத்திடமிருந்து இந்த Ka 226T ஹெலிகாப்டரை தனது இலகு ரக தேவைப்பாட்டிற்காக வாங்கி வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டது. ஆனாலும் இந்த ஹெலிகாப்டர்கள் கப்பல் படையின் பணிகளை பூர்த்தி செய்யுமளவிற்கு உகந்தது இல்லை என்பதால் அந்த பரிந்துரையை நிராகரித்துவிட்டது கப்பல் படை.

மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் துருவ் ஹெலிகாப்டரை அதிகளவில் வாங்கி இலகு ரக பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து எந்த கருத்தையும் கப்பற்படை இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..