மிரட்டும் இந்திய அமெரிக்க படைகள், கையறு நிலையில் சீனா

  சற்றும் எதிர்பாராத நிலையில் பூடானுக்குள் நுழைந்து சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம் சீனாவுக்கு ஒருவித அதிர்ச்சியையே கொடுத்திருந்தது. தனது எல்லையை விரிவாக்கும் பணிகளில் இருந்த சீனா, அமெரிக்கா ஜப்பான் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தென் சீன கடலை கைப்பற்றி மாபெரும் ராணுவ தளத்தை செயற்கை தீவில் உருவாக்கி விட்டது. எதிர்ப்புகளை துச்சமென எண்ணி தொடர்ந்து எல்லை விரிவாக்க வேலையை மேற்கொண்ட சீனாவுக்கு இந்திய ராணுவம் திடீரென கடிவாளம் போட்டது பெரும் அதிர்ச்சி தான்.

முதலில் சீனா தான் படைகளை குவித்தும், போர் பயிற்சி செய்தும், தனது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் மிரட்டல் விடுத்த நிலையில், இந்தியா தற்போது ஒரு படி மேலே சென்று தனது மாபெரும் படைகளை எல்லை அருகே குவித்து வருவதோடு, விமானப்படையையும் உஷார் நிலையில் வைத்துள்ளது.

மறுபுறம் சீனாவின் செல்லப்பிள்ளை வட கொரியாவை அமெரிக்கா எந்த நேரமும் தாக்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. வல்லரசு நாடு என்ற போர்வையை போர்த்தியுள்ள சீனாவால் வட கொரியாவை அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து தடுக்க முடியவில்லை என்றால் சீனா எப்படி அமெரிக்காவுடன் போட்டி போடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த கொடி அமர்வு பேச்சுவார்த்தை கொஞ்சம் காரசாரமாகவே நடந்துள்ளது. இந்தியா தனது படைகளை பூடான் பகுதியிலிருந்து விலக்கி கொள்ள வேண்டும் என்று சீன அதிகாரிகள் கூற, முதலில் சீனா தனது சாலை அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆட்களுடன் அப்பகுதியை விட்டு செல்ல வேண்டும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இரு தரப்பும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கும் நிலையில், எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது.

சீனா ஒரு படி மேலாக, திபெத் பகுதியில் ராணுவத்தை குவித்து வருவதோடு, போர் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறது, சமீபத்தில் ஏவுகணைகளை கொண்டு அமெரிக்காவின் தாட் ஏவுகணைகளை எவ்வாறு அழிப்பது என்ற பயிற்சியையும் மேற்கொண்டுள்ளது. அதோடு தனது ஏவுகணைகள் வீசும் விமானங்களையும் திபெத் அருகே நிறுத்தியுள்ளது.

இது அனைத்துமே, மொத்த சீனாவும் போருக்கு தயாராக இருப்பது போல ஒரு பிம்பத்தை உண்டாக்குகிறது. ஆனால் உண்மையில் போரில் எதிரி எவ்வாறு தாக்குவான் என்று யூகிக்க முடியாது,அதிலும் அமெரிக்கா எவ்வாறு தாக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது.

மறுபுறம் இந்தியா சீனாவின் தாக்கும் திட்டங்களை ஓரளவு யூகித்து விட்டது. ஏவுகணை தாக்குதல்கள், ராக்கெட் தாக்குதல்கள், அருணாச்சல பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல், ஹிமாச்சல் பகுதியில் அணைகளை உடைத்து வெள்ளத்தை ஏற்படுத்தி தாக்குதல் போன்ற சில தாக்கும் முறைகளை இந்திய ராணுவம் யூகித்துள்ளது.

இதனால் வடகிழக்கு நகரங்களான டெஸ்பூர், டார்ஜீலிங்க், கொல்கத்தா வரை கடும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும், போர் துவங்கிய ஒரு வாரத்தில் இந்திய ராணுவம் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட சீன வீரர்களை கொன்று எல்லையின் பல பகுதிகளை தாண்டி சீனாவுக்குள் சென்று தாக்கும்.

ஓரளவு யூகிக்கபட்ட நிலையில், சீனாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாவிட்டாலும், இந்தியாவின் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்கள் சீனாவின் அனுபவமில்லாத வீரர்களை எதிர்த்து போரிட்டு எல்லையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, சிறப்பு படையான SFF வீரர்கள் சீனாவிற்குள் ஊடுருவி முடிந்தவரை சீனாவின் முக்கிய ராணுவ தளங்களை அழிப்பதோடு, சீன படைகளுக்கு பல இடங்களில் குழி தோண்டவும் செய்வர். SFF படையானது இந்திய உளவுத்துறையின் கட்டுப்பட்டில் உள்ள மிக ரகசிய படை ஆகும். SFF படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை கூட வெளியில் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா சீனாவை எதிர்த்து போரிட மூன்று படை பிரிவுகளை வட கிழக்கு பகுதியில் நிலை நிறுத்தியுள்ளது. 3-வது 4-வது மற்றும் 33-வது படை பிரிவுகள். ஒவ்வொரு படை பிரிவிலும் சுமார் மூன்று டிவிஷன் படைகள் உள்ளது. ஒவ்வொரு டிவிஷனிலும் சுமார் 15,000 வீரர்கள் வரை இருப்பார்கள். அதோடு அவர்களின் ஆயுத மற்றும் ஆர்டில்லரி பலம். இவர்களுக்கு உதவியாக விமானப்படையின் சில தளங்களும் உதவும்.

சில நாட்களுக்கு முன்பு சுக்னாவை தலைமையையிடமாக கொண்ட 33-வது படையின் மொத்த வீரர்களும் சீன எல்லை அருகே குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  அதோடு மற்ற இரு படை பிரிவின் வீரர்களும் அதிக உயரத்தில் வாழ தேவையான முன் பயிற்சியை நிறைவு செய்துவிட்டனர். இது எந்நேரமும் சுமார் ஒன்றரை லட்சம் படைகளை சீன எல்லைக்கு அருகே இந்தியா கொண்டு வந்து விடும் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

அது மட்டுமல்லாமல் விமானப்படையும் வான் ரோந்து பணிகளை துவங்கிவிட்டதாகவும் எல்லையை சுகோய் விமானங்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு படை நகர்வு குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இவை இந்தியா சீனாவுடன் ஒரு உறுதியான போரை முன்னெடுக்க தயார் என்பதையே காட்டுகிறது.

சீனாவுக்கு இந்தியாவின் இந்த உறுதியான நிலை ஒரு பின்னடைவு மட்டுமல்லாது, இந்தியாவுடன் போர் புரிய சீனாவுக்கு கொஞ்சம் தயக்கமும் உள்ளது உறுதிபட தெரிகிறது.

ஒரே வாரத்தில் சுமார் பத்தாயிரம் வீரர்களை பலி கொடுத்து இந்தியாவுடன் போர் புரிய வேண்டுமா, தன் எல்லை நாடான வட கொரியாவை அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியுமா,  தன் வல்லரசு ஆதிக்கத்தை எவ்வாறு பறை சாற்றுவது, இது போன்ற கையறு நிலையிலேயே சீனா தற்போது உள்ளது.