டோகா லா எல்லை பிரச்னை, தற்போதைய நிலை என்ன

இந்திய சீன பூடான் எல்லையில் சீன வீரர்களுடன் மோதல் ஆரம்பித்து சுமார் 40 நாட்களுக்கும் மேல் ஆகிறது, இரு தரப்பும் தத்தமது பகுதிகளில் சிறிய அளவு படைகளுடன் எல்லை பகுதியில் நேருக்கு நேர் நிற்கின்றனர், சீனா மறுபுறம் தன்னால் முடிந்தவரை தனது நாட்டு ஊடகங்கள் மூலம் போர் பற்றி பேசி வருகிறது, இந்தியாவின் சில ஊடகங்களும், அரசும் அதற்கு பதிலளித்து வருகிறது. முன்னாள் ராணுவ கலோனல் அஜய் சுக்லா டோகா லா பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டோகா லா பகுதியில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் எந்நேரமும் நிற்பதாகவும், சீன தரப்பில் 40 வீரர்களும் இந்திய தரப்பில் 120 வீரர்களும் நேருக்கு நேர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் மட்டுமே பிரச்சனைக்குரிய பகுதியில் நின்று மேற்கொண்டு இருதரப்பும்  முன்னேறாதவாறு பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

  இந்த படைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக சீனா சுமார் 1500 வீரர்களை சிறிது இடை வெளி விட்டு நிறுத்தியுள்ளதாகவும், இந்த வீரர்கள் இந்திய வீரர்களுடன் நேருக்கு நேர் நிற்கும் வீரர்களுக்கு மாற்றாக இருப்பவர்கள் என்றும் கூறியுள்ளார். இந்த 1500 வீரர்களில் சீனா ராணுவமும் அதோடு சீனா எல்லைப்பாதுகாப்பு படையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பகுதியில் பிரச்னைக்குரிய பகுதியில் நிற்கும் வீரர்களுக்கு மாற்றாக சுமார் 600 வீரர்களும், அவர்களுக்கு உதவியாக சிறிது தொலைவில் ஒரு பிரிகேட் அளவு அதாவது 2000 வீரர்களும் இருப்பதாகவும், மேலும் ஒரு பிரிகேட் இன்னும் சிறிது தொலைவில் இருப்பதாகவும் கூறியுள்ளார், இந்த படைகள் சீனா எந்த அசம்பாவிதம் செய்ய முயன்றாலும் அதற்கு தக்க பதிலடி தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த படையின் கூடுதல் இந்த இரண்டு பிரிகேட் வீரர்களும் சீனாவின் எந்த ஒரு திடீர் தாக்குதலை சமாளித்து தடுத்து நிறுத்தவும், பிரச்னைக்குரிய பகுதிக்கு சில நிமிடங்களில் வந்து சேர தாயாராக இருப்பதாகவும், சீனாவுக்கும் இது தெரியும் என்பதால் பிரச்னைக்குரிய பகுதியில் சீனா எந்த அசம்பாவிதத்தையும் செய்ய முயற்சிக்காது என்றும் கூறியுள்ளார்.

பூடான் அரசின் வேண்டுகோளுக்கிணங்க, பூடான் நாட்டு பகுதியில் சாலை அமைத்துக்கொண்டிருந்த சீன வீரர்களை இந்தியா தடுத்து நிறுத்தியபோது, சாலை அமைத்துக்கொண்டிருந்த சீன வீரர்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காததோடு, குழப்பமும் ஆச்சர்யமும் அடைந்தனர் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார், காரணம் அவர்கள் சீனாவின்  ராணுவ வீரர்கள் இல்லை, அவர்களை விட குறைந்த சாதாரண பயிற்சி பெற்ற எல்லை காவல் படையினரே.

மலை உச்சியில் உள்ள சொகுசான ராணுவ கூடாரங்களில் தங்கும் அவர்கள் பெரும்பாலும் சிறிய ரக மோட்டார் பைக்குகளையே பயன்படுத்துபவர்கள் என்றும், அதோடு பெரும்பாலும் அவர்கள் நடப்பது கிடையாது என்றும், சாதாரண சீன வீரர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் வெறும் வேலையாட்கள் போலத்தான் என்றும் கூறியுள்ளார்,

அங்கு பணியில் இருக்கும் வேறொரு அதிகாரி கூறுகையில், சீன வீரர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய வீரர்கள் கடுமையான சூழ்நிலையினை தாங்கும் சக்தி கொண்டவர்கள் என்றும், குறிப்பிட்ட இடத்தில் தங்களது பணி நேரம் வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாகவும், சீன வீரர்களோ இடையிடையே குளிரை தாங்க புகை பிடிக்க செல்வதாகவும், சரியாக நேருக்கு நேர் நிற்க கூட அவர்கள் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்திய ராணுவம் தொடர்ந்து சீன வீரர்களின் நம்பிக்கையை குலைக்க ஜாட் மற்றும் சீக்கிய வீரர்களை சீன வீரர்களுக்கு நேரெதிர் நிறுத்தியுள்ளதாகவும், அவர்களின் உயரம் மற்றும் உடல் வலிமை சீனாவின் அளவில் சிறிய வீரர்களுக்கு மன ரீதியான உளைச்சலை கொடுக்கும் என்றும் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

எல்லையில் சம்பவம் நடந்த விஷயத்தை இந்தியாவும் பூடானும் ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் சுமார் பத்து நாட்கள் ரகசியமாக வைத்திருந்ததாகவும், சீனா தான் ஊடகங்களுக்கு முதலில் இப்பிரச்சனையை அறிவித்ததாகவும், ஆனாலும் இந்தியா தான் ஊடகம் மூலமாக பிரச்சனையை பெரிதுபடுத்தி வருவதாக சீன அறிவித்து வருவதும் குறிப்பிட தக்கது.

அதோடு பிரச்னைக்குரிய பகுதியில் சீனா படைகளை திரும்ப பெறும் வரையில் இந்தியா தனது படைகளை பின்வாங்காது என்றும், அதே நேரம் சீனா மேலதிக படைகளை குவித்தால் இந்தியாவும் பதிலுக்கு அதிகரிக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

அதே நேரம் சீனாவும் தன்னால் முடிந்த வரை தனது ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது வருகிறது.