இன்னும் செயல்பாட்டுக்கு வராத ஆகாஷ் ஏவுகணைகள், விமான தளங்களின் பாதுகாப்பு நிலை என்ன

 விமானப்படை தளங்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உச்ச கட்ட பாதுகாப்பில் இருக்கும், வெறும் போர் விமானங்கள் அன்றி, ஆயுதங்கள், மதிப்புமிக்க ரேடார்கள், எரிபொருள் கிடங்குகள், அதோடு நவீன பயிற்சி மற்றும் உதிரிபாக கூடங்களும் கொண்ட ஒரு பெரிய தளமாக விமானப்படை தளங்கள் இருக்கும், போரின் போது விமான தளங்களை குறிவைத்தே அதிக தாக்குதல் நடத்தப்படும், அதனால் தான் விமான தளங்கள் எப்போதும் உட்சபட்ச பாதுகாப்பில் இருக்கும்.

பொதுவாக விமான படை தளங்கள் மூன்று அடுக்கு வான் பாதுகாப்பு வளையத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கும், இடைப்பட்ட தூர வான்பாதுகாப்பு ஏவுகணை, உடனடி தாக்கும் வான்பாதுகாப்பு ஏவுகணை, அதோடு வான் பாதுகாப்பு ஆர்டில்லரிகள், இவை விமான தளங்களை தொடர்ச்சியான எதிரி தாக்குதலிலிருந்து பாதுகாப்பதோடு, விமான தளத்திலிருந்து போர் விமானங்களை ஏவவும் உதவி செய்யும்.

இந்திய விமான தளங்கள் இன்னும் மிக பழைய வான் பாதுகாப்பு ஏவுகணைகளையே தனது முதல் அடுக்கு இடைப்பட்ட தூர வான் பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறது, 1980-களில் சோவியத்திடமிருந்து கொள்முதல் செய்த S 125 வான் பாதுகாப்பு ஏவுகணைகளையே இன்னும் பயன்படுத்தி வருகிறது, இதன் தாக்கும் தூரம் சுமார் 35 கிலோமீட்டர்கள் தாக்கும் உயரம் சுமார் 20 கிலோமீட்டர், இந்த ஏவுகணைகள் மிக பழைய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது, இதை நவீன்ப்படுத்த பல முறை எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது,

கடைசியாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனைகளில் திறம்பட செயல்பட்டதால் சுமார் 3600 கோடி செலவில் முதல் கட்டமாக எட்டு முக்கிய விமான தளங்களில் நிறுவ முடிவு எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, வாங்கியும் ஆகிவிட்டது, இவை எல்லாம் நடந்தது 2012-வாக்கில்  ஆனால் பல காரணங்களினால் இவை இன்னும் ( அக்டோபர் 2016) செயல்பாட்டுக்கு வரவில்லை என்று தணிக்கை துறை தகவல் அளித்துள்ளது.

அதற்கான முக்கிய காரணங்களாக கீழ்கண்ட மூன்றை தெரிவித்துள்ளது,

1. விமான தளங்களில் தேவையான கட்டுமானம் இன்னும் முழுமை பெறவில்லை

2. தரமில்லாத ஏவுகணைகள்

3. கட்டிமுடிக்கப்படாத ஏவுகணை கிடங்கு

விமான தளங்களில் வான் பாதுகாப்பு ஏவுகணை நிறுவ சில கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை, முக்கியமாக ஏவுகணைகளை பாதுகாப்பாக வைக்கும் நிலவறைகள், சோதனை செய்யும் கூடங்கள், பணிமனைகள் ( workshops ) , ஏவுகணை வாகனங்களின் பராமரிப்பு கூடங்கள்  இன்னும் முழுமை பெறாமல் பணிகள் நடந்து வருவதாகவும், இரண்டு விமான தளங்களில் 90 சதவீத வேலைகள் முடிந்துவிட்டதாகவும், ஆனாலும் கட்டுமான தரத்தில் குறைபாடு உள்ளதால் அந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாது என்று விமானப்படை தெரிவித்துள்ளதாக தணிக்கை துறை கூறியுள்ளது.

அதோடு கடந்த அக்டோபர் வரை மற்ற ஆறு தளங்களில் 45% வேலைகளே முடிந்துள்ளதாக தணிக்கை துறை கூறியுள்ளது,  இதற்கு முக்கிய காரணமாக விமானப்படைக்கும் பெல் நிறுவனத்துக்கும் இடையே நடந்த பணத்தகராறு என்றும், பெல் நிறுவனம் கட்டுமான பணிகளுக்கு  104 கோடி கேட்டதாகவும் விமானப்படை 99 கோடி தான் தர முடியும் என்று கூறியதாகவும், கடைசியில் 20 மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு பெல் நிறுவனம் 99 கோடிக்கு ஒத்துக்கொண்டதாகவும் தணிக்கை துறை கூறியுள்ளது. வெறும் 5 கோடிக்கு இருதரப்பும் 20 மாத காலத்தை வீணடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெல் நிறுவனம் கட்டுமான பணிகளுக்கு விமான தளத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக அளிக்க கேட்டிருந்தது, ஆனால் இதுவரை வெறும் நான்கு தளங்களை மட்டுமே விமானபப்டை அளித்துள்ளதாகவும், அதுவும் இரண்டு வருட காலதாமத்திற்கு பிறகே என்றும் தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது.

பெல் நிறுவனம் தயாரித்த ஏவுகணைகள் தரமில்லாதவை என்றும் தணிக்கை துறை கூறியுள்ளது, உதாரணமாக, 2014 நவம்பர் வரை சுமார் 60 ஏவுகணைகள் விமானப்படைக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதில் 20 ஏவுகணைகளை தகுதி சோதனை செய்துள்ளது விமானப்படை, அதில் ஆறு ஏவுகணைகள் சோதனையில் தோல்வியடைந்துள்ளது, இது 30% தோல்வி ஆகும், இது பெரும் பின்னடைவே, இருந்தாலும் ஓரளவு சகித்து கொள்ளும் நிலை தான்.

Untitled(1)

இந்த தோல்விக்கு காரணங்களாக ஏவுகணையை திசைதிருப்பும் அமைப்பில் உள்ள கோளாறு மற்றும் தீ வெளியேறும் அமைப்பில் உள்ள பிரச்னை என்று விமானப்படை தெரிவித்துள்ளது, இந்த கோளாறுகள் பெரிய அளவில் இல்லை என்றாலும், ஏவுகணைகளை செய்யும் போது கொஞ்சம் கவனத்தோடு செய்தால் இந்த குறைகளை எளிதாக நிவர்த்தி செய்யலாம்.  பெல் நிறுவனத்தில் இந்த ஏவுகணைகள், சாதாரண ஒரு மெக்கானிக் ஷெட்-இல் செய்வது போல தான் தயாரிக்கப்படுகிறது, மேலை நாடுகள் ஏன் தனியார் கார் உற்பத்தி ஆலைகளில் கூட நவீன CNC கருவிகள் கொண்டு தான் வேலைகளை செய்யப்படுகிறது. ஆனால் பெல் நிறுவனம் இன்னும் அது போன்ற நவீன கருவிகளை பயன்படுத்த துவங்கவில்லை.

S 125 Neva Pechora

ஆகாஷ் ஏவுகணைகள் ஏமாற்றினாலும், இந்திய விமான தளங்களின் பாதுகாப்பு ஓரளவு நம்பும்படியாவே இருக்கும், மேற்கு மற்றும் கிழக்கு எல்லையில் உள்ள விமானதளங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்பாக S 125 ஏவுகணைகள், இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட ஸ்பைடர் வான்பாதுகாப்பு ஏவுகணைகள், அதோடு L40 மற்றும் ZSU 23mm வான்பாதுகாப்பு  ஆர்டிலரிகள் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அனைத்து முன்னணி விமான தளங்களும் இடைபட்ட தூர பாரக் 8 ஏவுகணைகள் மூலம் பாதுகாக்கப்படும் , ஆனால் இந்த ஏவுகணைகள் 2020-ம் ஆண்டுக்கு பின்பே செயல்பாட்டுக்கு வரும், அதுவரை பழமையான S 125  மற்றும் தரமில்லாத ஆகாஷ் ஏவுகணைகளை தான் முதல் அடுக்கு பாதுகாப்புக்கு விமானப்படை நம்பியுள்ளது.