விமானப்படைக்கு மீண்டும் ஒரு சறுக்கல், அரசின் முடிவுக்கே இணங்கியது

கார்கில் போரில் மிராஜ் விமானத்தின் திறனை பார்த்து வியந்த விமானப்படை, அது போன்று விமானங்களை அதிகமாக வாங்க முடிவெடுத்து அரசிடம் கோரிக்கை வைத்தது, சுமார் 10 வருடத்திற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட இந்த திட்டம், அந்த நேரம் 12 பில்லியன்கள் டாலர் மதிப்பில் சுமார் 126 விமானங்களை 202- க்குள் இந்திய விமானப்படையில் சேர்ப்பதே, இதன் மூலம் விமானப்படையில் உள்ள பழைய MiG 27 மற்றும் MiG 21 Bis விமானங்களை மாற்றி அதி சிறந்த விமானங்களை படையில் இணைக்க முடியும்.

ஆனால் பணப்பிரச்சனை காரணமாக தொடர்ந்து பல வருடம் தள்ளிப்போன இந்த திட்டம், தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சியிலும் முற்றுப்பெறவில்லை, அப்போதும் பணம் மற்றும் டிஸ்ஸால்ட் நிறுவனம் HAL மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் தள்ளிப்போனது, அடுத்த பிஜேபி ஆட்சியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த ஒப்பந்தம், விலை அதிகம் என்ற காரணத்தால் ரத்து செய்யப்பட்டது, ஆனாலும் விமானப்படையின் நலனை கருத்தில் கொண்டு சுமார் 9 பில்லியன் டாலர் அளவுக்கு 36  ரபேல் விமானங்களையும் அதற்கான ஆயுதங்களையும் வாங்கியது.

பல ராணுவ பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட இந்த கொள்முதல், விமானப்படையின் திறனை குறைக்கும் என்றே பலராலும் கணிக்கப்பட்டது, அந்த கணிப்பை மெய்யாக்கும் பொருட்டு வேறு ஒரு திட்டத்தை அரசு முன்வைத்தது, ரபேல் விலை அதிகம் என்பதால், விலை குறைந்த ஒற்றை எஞ்சின் கொண்ட வெளிநாட்டு விமானத்தை இந்தியாவில் தயாரிக்க போவதாக அறிவித்து, சுவீடனின் கிரிப்பனையும் அமெரிக்காவின் F 16 Blk 60 விமானத்தையும் களத்தில் கொண்டு வந்தது. இந்த இரண்டு விமானங்களுமே விமானப்படையின் தகுதி சோதனையில் வெற்றி பெறாதவை என்பது குறிப்பிடதக்கது.

இந்த திட்டத்தை வெளிப்படையாகவே எதிர்த்தது விமானப்படை, முன்னாள் விமானப்படை தளபதி கூட அதிகமான ரபேல் போன்ற விமானங்கள் நூறுக்கு மேல் தேவை உள்ளது என்றார், அதோடு விமானப்படையின் குறைந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையும் குறிப்பிட்டார்.

இவ்வாறு வெளிப்படையாக அறிவித்தும் அரசு செவிமடுக்காமல், தனது சொந்த திட்டங்களை விமானப்படைக்குள் புகுத்தி வருகிறது.   ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ள அரசு, அதையும் விரைவாக நடைமுறைப்படுத்தாமல், மெத்தனமாக இருந்து வருகிறது, இதன் அடுத்தகட்டமாக ஏற்கனவே MMRCA திட்டத்தில் தகுதி பெறாத இரு விமானங்களை மீண்டும் விமானப்படை மூலமாக சோதனைக்கு அழைத்துள்ளது அரசு.

இதில் வேடிக்கை என்னவென்றால், மொத்தம் 120 ஒற்றை எஞ்சின் கொண்ட விமான கொள்முதல் திட்டத்திற்கு சுமார் 20 பில்லியன் டாலர் அளவு பணம் தேவைப்படும் என்று அறிவித்துள்ளது, இது அதிகம் என்பது மட்டுமல்லாது இதே தொகையில் கூடுதலான ரபேல் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க முடியும் என்று பிரெஞ்சு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.   அரசின் இந்த திட்டம் முழு பைத்தியக்கார திட்டமாகவே தெரிகிறது,

விமானப்படை தனது தாக்குதலுக்கேற்ப விமானங்களை தேர்ந்தெடுத்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் அதன் கொள்முதல் திட்டத்தில் தலையிட்டு விமானப்படையின் நிலையை கேலிக்கூத்தாக்கிக்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.

கிரிப்பன் அல்லது F 16 Blk 60 போன்ற விமானங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒத்து வராது என்பது பல ராணுவ பார்வையாளர்களின் கருத்து, அதனால் தான் பிந்தைய காலங்களின் கொள்முதல் அனைத்துமே இரட்டை எஞ்சின் கொண்ட பல்திறன் விமானங்களாக வாங்கப்பட்டது.

இந்திய பாகிஸ்தான் அல்லது சீனப்போரின் போதோ இந்த ஒற்றை எஞ்சின், குறைந்த திறன் கொண்ட விமானங்கள் எதிரிகளின் எளிதான இலக்குகளாக மட்டுமே இருக்கும், மாறாக சண்டையிடும் அல்லது தாக்கும் விமானமாக இருக்கும் வாய்ப்பு மிக குறைவு.

எளிதான உதாரணம் என்றால் பாகிஸ்தானின் F 16 விமானத்தையும் இந்தியாவின் Su 30 MKI விமானத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே எளிதாக தெரியும். இந்திய விமானப்படையும் போர் என்று வந்தால் எதிரியை நோக்கி இந்த இலகு ரக ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்களை தான் சீனா மீது செலுத்துமா என்ற எளிதான கேள்விக்கு கூட அரசால் பதிலளிக்க முடியாது என்பதே உண்மை.

இது போன்ற ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்கள், மூன்றாம் தர அல்லது எதிரிகள் குறைந்த நாடுகளுக்கு மிகப்பொருத்தமானதாக இருக்குமே தவிர, சீனா போன்ற எதிரியைக்கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இல்லை.