இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் தேவைப்பாடு, தற்போதைய நிலை என்ன

இந்திய ராணுவத்தின் தேவையை உணர்ந்து 1986-இல் ராணுவத்திலேயே ராணுவ வான் பிரிவு உருவாக்கப்பட்டு, பல வகையான ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன, தற்போதைய நிலையில் ராணுவம் தன கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை வைத்துள்ளது, இது ராணுவத்தின் தனிப்பிரிவு ஆகும், மாறாக படை தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

இந்திய ராணுவம் பல ஆண்டுகளாக தாக்கும் ஹெலிகாப்டர்களை கேட்டு வருகிறது, விமானப்படை தனது பழைய Mi 24/35  தாக்கும் ஹெலிகாப்டர்களை  நீக்கி புதிய ஹெலிகாப்டர்களை வாங்க முடிவெடுத்தபோது, ராணுவத்துக்கும் விமானப்படைக்கு இடையே பல கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன, புதிதாக வாங்கும் ஹெலிகாப்டர்களை ராணுவம் வசம் ஒப்படைக்கவேண்டும் என்று ராணுவமும், புதிய தாக்கும் ஹெலிகாப்டர்கள் விமானப்படை வசம் தான் இருக்க வேண்டும் விமானப்படையும் வாதிட்டது.

பிரச்னையில் குறுக்கிட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, புதிய ஹெலிகாப்டர்கள் விமானப்படையிடமே இருக்கும் என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்தார்,

அதே நேரம் ராணுவத்திற்கு புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பெரிய ஒப்பந்தங்களை அரசு முன்னெடுத்து சென்றது, முக்கியமாக ராணுவத்தில் உள்ள பழைய சீட்டக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களை நீக்கி புதிய ஹெலிகாப்டர்களை வாங்கவும், உள்நாட்டு தயாரிப்பான துருவ் ஹெலிகாப்டர்களை அதிக அளவில் வாங்கவும், அதோடு இரு தாக்கும் ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே வடிவமைக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் படி ராணுவத்திற்கு ஏற்கனவே துருவ் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டர்களும், கூடிய விரைவில் இலகு ரக தாக்கும் ஹெலிகாப்டர்களும், நவீன Ka 226 இலகு ரக ஹெலிகாப்டர்களும் வழங்கப்படவுள்ளன. ஆனால் இவை அனைத்துமே ராணுவத்தின் தனி கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்திய ராணுவத்தில் மூன்று அதிரடி தாக்கும் படைப்பிரிவுகள் உள்ளன, அவை மதுராவை தலைமையிடமாக கொண்ட முதல் கார்ப்ஸ், அம்பாலாவை தலைமையிடமாக கொண்ட இரண்டாம் கார்ப்ஸ் மற்றும் போபாலை தமையிடமாக கொண்ட 21-ம் கார்ப்ஸ்.

இந்த ஒவ்வொரு படை பிரிவும் ஒரு லெப்டினன்ட் ஜெனரலை தலைவராக கொண்டிருக்கும், ராணுவம் தற்போது கேட்பது என்னவென்றால் மூன்று அதிரடி தாக்கும் பிரிவுக்கும் தனித்தனி ஹெலிகாப்டர் படை பிரிவு தான், செயல்பாட்டளவில் தற்போதைய காலகட்டத்தில் இது மிக முக்கியமான தேவை என்பதில் மாற்று கருத்து இருக்கப்போவது இல்லை. இந்த படை பிரிவுகளிடம் அவர்கள் கட்டுப்பாட்டில் ஹெலிகாப்டர்கள் இருந்தால் அவர்களின் தாக்கும் திறன் இன்னும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

ராணுவம் கேட்டுள்ளபடி, ஒரு அதிரடி தாக்கும் படை பிரிவுக்கு மூன்று ஸ்குவாட் ஹெலிகாப்டர்கள் தேவை, ஒவ்வொரு ஸ்குவாடிலும் பதிமூன்று ஹெலிகாப்டர்கள் இருக்கும், ஒரு ஸ்குவாட் தாக்குதலுக்கும், அடுத்த ஸ்குவாட் உளவு மற்றும் ரோந்து பணிகளுக்கும், மூன்றாவது ஸ்குவாட் ஆயுதங்கள் மற்றும் வீரர்களை எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படவுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதன் படி ராணுவத்தின் புதிய யுக்திகளுக்காக சுமார் 117 புதிய ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன, இவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து கொடுக்க முடியும் என்பதால் இது குறித்து அரசு அதிகம் கவலைகொள்ள தேவை இல்லை, தாக்கும் பணிகளுக்காக இலகு ரக தாக்கும் ஹெலிகாப்டரையும் மற்ற இரு பணிகளுக்கு துருவ்/ Ka 226 ஹெலிகாப்டரையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடதக்கது.

அது மட்டுமல்லாது நீண்டகால திட்டமாக 14-வது படைப்பிரிவின் ஒவ்வொரு தாக்கும் பிரிவுக்கும் தனித்தனி ஹெலிகாப்டர்களை கேட்டுள்ளது, இந்த 14-வது படைப்பிரிவில் மூன்று தாக்கும் பிரிவுகள் உள்ளது, ஒரு ஆர்டில்லரி பிரிவு, ஒரு காலாட்படை பிரிவு, மற்றும் மலைகளில் சண்டையிட சிறப்பு அனுபவம் வாய்ந்த இன்னொரு படைப்பிரிவு. கணக்குப்படி பார்த்தால் 14-வது படைப்பிரிவுக்கு மட்டும் தனியே  சுமார் 117 ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது.

அதோடு ராணுவத்தின் ஆறு கட்டளைப்பிரிவுக்கும் தனித்தனியாக ஐந்து விமானங்களையும் கேட்டுள்ளது ராணுவம்.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

ராணுவத்திற்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே, 2015-இல் சுமார் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும் போது அதே நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூடுதலாக 11 ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது, ஆனால் ஒப்பந்தம் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்க்கு முன்னால் கையெழுத்தாக வேண்டும், இல்லை என்றால் கூடுதல் ஹெலிகாப்டர்களை வாங்க புதிய நிபந்தனைகள் விலை குறித்து மீண்டும் பேச்சு வார்த்தை என்று முதலில் இருந்து வர வேண்டும்.

இந்த 11 ஹெலிகாப்டருக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதை ராணுவத்திற்கு தருமாறு பாதுகாப்பு அமைச்சகத்திடம் ராணுவம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, இதன் முடிவு இந்த வருடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் தெரிந்து விடும்.

அதோடு நேற்று நடந்த பாதுகாப்பு கொள்முதல் கூட்டத்தில் ராணுவத்திற்கு 39 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சர் அனுமதி அளித்தார், ஆனால் அது ஒப்பந்தமாக வர வாய்ப்புகள் குறைவே.

இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ராணுவத்திடம் வந்தால் அவை ராணுவத்தின் ஹெலிகாப்டர் படைப்பிரிவிலேயே இருக்கும். ராணுவத்தின் தரைப்படை பிரிவு போதிய இரவில் பார்க்கும் கருவிகள் (NVD) இல்லாமல் இயங்கி வருகிறது, இந்நேரத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெளிநாட்டு ஹெலிகாப்டர்களை வாங்குவதில் அவசரம் காட்டுவது வியப்பை ஏற்படுத்துகிறது.