ஓங்கி வளர்ந்துவிட்ட பாகிஸ்தானின் அணு ஆயுதம், வளர விட்ட இந்தியா

 

வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதலை குறித்து விவாதிக்கும் பலர் பாகிஸ்தானை பற்றி சிந்திக்க மறந்துவிட்டனர் என்றே தெரிகிறது, ஏன் இந்தியாவும் இஸ்ரேலும் கூட இது குறித்து திட்டமிட மறந்துவிட்டது என்றே கூற முடியும், சமீபத்திய கணக்கு படி 2020 வாக்கில் பாகிஸ்தானிடம் சுமார் 400 அணு ஆயுதங்கள் இருக்கும், அதை இந்தியா மற்றும் இஸ்ரேல் மீது வீசும் என்பதிலும் ஐயமில்லை.

முன்னாள் இந்திய ராணுவத்தின் கலோனல் விநாயக், தற்போது செயற்கைகோள் படங்களை ஆராய்ந்து வருகிறார், முக்கியமாக பாகிஸ்தானின் அணு ஆயுத முன்னேற்றங்கள், மற்றும் இந்திய எல்லை அருகே சீனாவின் படை குவிப்புகள் பற்றி, கடந்த வருடம் செயற்கைகோள் படங்களை ஆராய்ந்து இந்திய எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் குஜ்ரன்வலா பகுதியில் நாசர் ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ளதை உலகுக்கு வெளிக்கொணர்ந்தார்.

அதை மேலும் ஆராய்ந்த அமெரிக்காவின் FAS ( Federation of American Scientists )  நிறுவனம் ( https://fas.org/blogs/security/2016/11/pakistan-nuclear-infrastructure/) பாகிஸ்தானின் அணு ஆயுத குவிப்பு உண்மை என்றும் இந்தியா இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் கட்டுரைகள் வெளியிட்டு அமெரிக்க காங்கிரசுக்கும் பென்டகனுக்கும் அறிக்கை வழங்கியது,

கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள பீர்தான் மலைப்பகுதியை ஆராய்ந்து செயற்கைகோள் படங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தானின் அதி நவீன ஏவுகணை வீசும் குகைகளை தற்போது வெளிக்கொணர்ந்த்துள்ளார் கலோனல் விநாயக், இந்த பாதுகாக்கப்பட்ட ஏவுகணை வீசும் தளம் எதிரி தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் சிறப்பாக மலைகளுக்கிடையே வடிவமைக்கப்பட்டுள்ளது, இங்கு தான் தனது அதி நவீன ஷாஹீன் ஏவுகணைகளை நிலை நிறுத்தவுள்ளது பாகிஸ்தான், இவை இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகளை அவை வீசுமுன் அழிக்கலாம் என்றே பல காலமாக நம்பவைக்கப்பட்டிருந்தது, ஆனால் நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது, இந்தியாவாலோ ஏன் இஸ்ரேலாலோ கூட அழிக்கமுடியாதபடி பாதுகாக்கப்பட்ட முறைகளை கடைபிடித்து வருகிறது பாகிஸ்தான்.

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலை பார்க்கும் உலக நாடுகள் பாகிஸ்தானை கண்டு கொள்ளாததற்கும் காரணம் உள்ளது, இந்தியா போன்ற சாந்த சொரூப நாடு இருக்கும் வரை பாகிஸ்தான் தனது அணு ஆயுத வலிமையை பெருக்கிக்கொண்டு மிரட்டல் விடுக்கத்தான் செய்யும், இந்தியா பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்காத வரை மற்ற நாடுகள் அதில் தலை இடாது.

ஜப்பானோ அல்லது தென் கொரியாவோ அப்படி அல்ல, வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலை பெரிதுபடுத்தி, உலக நாடுகளின் பார்வை முழுவதையும் அங்கே விழ செய்துள்ளது, மாறாக இந்தியாவோ எல்லையில் நடக்கும் அத்து மீறல்களுக்கு கூட பதிலடி கொடுக்க முடியாமல் வீர வசனம் மட்டுமே பேசி வருகிறது.

உண்மையில் தற்போது நிலைமை கைமீறி போய் விட்டது என்றே கூறலாம், பாகிஸ்தானை தாக்கவோ அழிக்கவோ முடியாத நிலை தான் தற்போது உள்ளது,

2001 பாராளுமன்ற தாக்குதல் ஆகட்டும் 2008 மும்பை தாக்குதல் ஆகட்டும், இந்தியா வீர வசனங்களை மட்டுமே பேசி வருகிறது, அப்போது இந்தியா மீது  உலக நாடுகளின் பார்வை இருந்தது அதோடு போர் என்று வந்தால் உலக நாடுகள் இந்தியாவிற்கு மட்டுமே ஆதரவு தரும் நிலையும் இருந்தது, வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு பாகிஸ்தானை இவ்வளவு வளர்த்துவிட்டது இந்தியா தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

தற்போதைய கணக்குப்படி பார்த்தல் பாகிஸ்தானிடம் சுமார் 250 முதல் 300 அணு குண்டுகள் இருக்கலாம், பாகிஸ்தான் மீது பெரிய அளவு போர் தொடுத்தால் கண்டிப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு பலியாகும் என்பதிலும் ஐயமில்லை, பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை இந்தியாவிடம் இல்லை என்பதும் கூடுதல் தகவல்.

ஜப்பானையோ, தென் கொரியாவியோ எடுத்துக்கொண்டால் மூன்று அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை செயல்பாட்டில் வைத்துள்ளது, இருந்தாலும் வட கொரியாவின் அணு ஆயுதங்களை முறியடிக்க உலக நாடுகளுடன் உதவியோடு குரல் கொடுத்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை எல்லைப்பாதுகாப்பை மட்டுமாவது உறுதி செய்யுமாறு பாகிஸ்தானுக்கு ஒரு அடி கொடுத்திருக்கலாம், அதற்கு கூட இந்தியாவால் முடியவில்லை என்பது வருத்தமே.

பாகிஸ்தானுக்கு எதிரான கன்வென்ஷனல் போரில் முழு பலத்தை பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தானை தாக்க ஏன் இவ்வளவு பயப்படுகிறது என்பது தெரியவில்லை, இந்தியாவால் பாகிஸ்தானுக்குள் சென்று ஒரு பெரிய போரை தற்போது நடத்த முடியாது என்றாலும் எல்லைச்சண்டையை நிறுத்தும் அளவு பெரும் பலம் இருக்கிறது.

அணு ஆயுத போரில் வளர்ந்துவிட்ட பாகிஸ்தானை இன்னும் வளர்த்துவிட்டால், பிற்காலத்தில் இந்தியாவை கூட மிரட்டும் ஒரு பெரும் சக்தியாகும் என்பதில் மாற்று கருத்து இருக்கப்போவது இல்லை.

Thanks Col. Vinayak Bhut