நக்சல்கள், மீண்டும் ஒரு கொடூர தாக்குதல்

 

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு சுமார் 11 CRPF காவலர்கள் உயிரிழந்து அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள் பேரிடியாக 25 உயிர்களை இழந்துள்ளது. நக்சல் பாதித்த பகுதிகளை செம்மைப்படுத்துகிறேன் என்ற பெயரில் அரசு செய்யும் முட்டாள்தனமான வேலையில் உயிரைக் கொடுப்பது ஏனோ CRPF காவலர்கள் தான்.

100 பேர் கொண்ட CRPF குழு ஒன்று சத்திஷுகர் மாநிலம் கலபதார் பகுதியில் ரோடு வேலை செய்யும்  ஆட்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருந்தது, அது நக்சல்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் கூடுதலாகவே CRPF காவலர்கள் பணியில் இருந்தார்கள்.  ஆனால் திடீரென்று வந்த சுமார் 300-க்கும் மேலான நக்சல் தீவிரவாதக்குழு காவலர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தியதோடு நாட்டு வெடிகுண்டுகளையும் வீசி தாக்கியது, காவலர்கள் சுதாரிப்பதற்குள் தீவிரவாதிகள் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர், இருந்தாலும் சுமார் 12 நக்சல்களை சுட்டுக்கொன்றுள்ளது CRPF .

இரண்டு அல்லது மூன்று குழுவாக பிரிந்திருந்த காவலர்களில் ஒரு பிரிவை மட்டுமே தாக்கிய நக்சல்கள் மேற்கொண்டு வீரர்கள் வருவதற்குள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். சில வீரர்கள் காட்டுக்குள் சென்று தேடியும் ஒரு நக்சலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.   இதில் தவறு எங்கு நிகழ்ந்துள்ளது என்று கண்டுபிடிப்பது எளிது, அரசும் அந்த CRPF காவலர் குழுவின் கமாண்டரும் தான் காரணமாக இருக்க வேண்டும்,

பொதுவாக ராணுவம் போல் அல்லாது CRPF அதிகாரிகள் சாதாரண IPS முடித்த அதிகாரிகள் தான், என்ன கொஞ்சம் கூடுதலாக ஆயுதப்பயிற்சி எடுத்திருப்பார்கள் அவ்வளவே , மற்ற படி அவர்களுக்கும் சாதாரண காவல்துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  இதே போல ஒரு மின்னல் வேக தாக்குதலை ராணுவத்தின் மீது தொடுத்திருக்க முடியாது, ஏனென்றால் அவர்களின் தாக்கும் மற்றும் பாதுகாப்பு வழங்கும் முறைகளே காரணம், இங்கும் CRPF காவலர்கள் இரண்டு அல்லது மூன்று குழுவாகவே பிரிந்து இயங்கியுள்ளனர், ஆனாலும் தகுந்த பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது, அதனால் பழி கண்டிப்பாக அந்த குழுவை தலைமை தாங்கியவரை தான் சேரும்.

ஒரு இடத்தில பாதுகாப்பு கொடுக்கிறோம் அல்லது பாதுகாக்கிறோம் என்றால் அந்த இடத்தை பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பதோடு, எதிரியால் எளிதில் மறைந்திருந்து தாக்க முடியும் என்ற பகுதியில் கூடுதல் காவலர்களோ அல்லது அந்த இடத்தையோ அழித்திருக்க வேண்டும்.   காயமடைந்த ஒரு வீரர் கூறும்போது, எங்களால் திருப்பி தாக்க கூட முடியவில்லை, காரணம் நக்சல்கள் மறைவான பாதுகாப்பான இடத்திலிருந்து தொடர்ச்சியாக சுட்டுட்டுக்கொண்டிருந்ததால் தான் என்று,

ஆக இதன் மூலமே தெரிகிறது ஒரு நல்ல பாதுகாப்பு வளையம் அமைக்காமல் ஏனோ தானோவென்று தான் காவல் இருந்துள்ளனர், அலட்சியமே இதற்கு காரணாமாக இருக்கும்.   இதே ராணுவத்தில் நடக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை, இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தாலும் சில வீரர்களின் உயிர் போயிருந்தாலும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் திரும்பி போக முடியாது, காரணம் அவர்களின் பாதுகாப்பு வளையம் தான்.

இரண்டாவதாக இங்கே பார்த்தால், வீரர்களின் கவச வாகனங்கள், CRPF படைக்கு குண்டு துளைக்காத கவச வாகனங்கள் வேண்டும் என்று வருட கணக்கில் கேட்டு கொண்ட பின்னரும் இன்னும் அவர்களுக்கு போதிய அளவில் அது கிடைக்கவில்லை அல்லது தரம் குறைந்த கவச வாகனங்களே உள்ளன. தற்போது CRPF பயன்படுத்திவரும் கவசவாகனம் நக்சல்களின் கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்காது, ஆனாலும் துப்பாக்கி சூட்டிலிருந்து வீரர்களை பாதுகாக்கும்.

[நக்சல்களின் கண்ணி வெடியில் சிக்கி மீதமுள்ள 407 டெம்போவின் பகுதி ]
இன்று வரை CRPF அதிகம் பயன்படுத்துவது சாதாரண 407 டெம்போ தான், அதில் தான்  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வார்கள், ஏற்கனவே இது போன்ற டெம்போக்களை தாக்கி பல காவலர்களை கொன்றுள்ளனர் நக்சல்கள் என்பது மற்ற கதை.

கவச வாகனங்கள் கூட இல்லாமல் வெட்ட வெளியில் நின்று காவல் காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது CRPF, 100 பேர் கொண்ட இந்த காவல் குழுவுக்கு 5 அல்லது 6 கவச வாகனகங்களை கொடுத்திருந்தால் கூட இவ்வளவு உயிர் போயிருக்காது ஏன்  தாக்குவதற்கு கூட நக்சல்கள் தயங்கியிருப்பார்கள், இது  கண்டிப்பாக அரசின் தவறு தான், எத்தனை வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்த பிறகும் இன்னும் தேவையான அளவு கவச வாகனங்களை அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வீரர்களுக்கு குண்டுதுளைக்காத உடைகள் மற்றும் நல்ல தரமான குண்டு துளைக்காத தலைக்கவசம் இருந்ததா என்றால் இல்லை என்ற பதில் தான் தெரிகிறது, காயம்பட்ட வீரர்களை ஹெலிகாப்டரில் ஏற்றும் போது ஒருவரிடம் கூட நல்ல ஹெல்மட்டுகளோ கவச உடைகளோ இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது, மனித உயிரை கேடயமாக வைத்து தான் நக்சல்களை எதிர்த்து சண்டை போட  கட்டாயப்படுத்தியுள்ளது அரசு, மீண்டும் பழி அரசின் மீது தான்.

[கவச வண்டியையே புரட்டி போட்ட நக்சல்களின் கண்ணி வெடியின் சக்தி ]
சாதாரண உளவு விமானங்கள், கூட இல்லாமல் தான் இவர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று பாதுகாப்பு கொடுக்கின்றனர், அது சரி ராணுவத்துக்கே இன்னும் சிறிய உளவு விமானங்கள் இல்லாத போது CRPF காவலர்களுக்கு மட்டும் வாங்கி கொடுத்து விடுமா அரசு.

நக்சல்கள் மீது இரக்கம் காட்டும் வரை இது போன்று மேலும் பல உயிர் பலிகளை கொடுக்க வேண்டியது தான், ஓட்டு வங்கி, கம்முனிசம் எல்லாவற்றையும் கொஞ்சம் புறம்தள்ளி வைத்துவிட்டு ராணுவத்தையோ அல்லது CRPF படையையோ அந்த இடங்களில் குவித்து கடும் தேடுதல் வேட்டை நடத்தி சந்தேகப்படும்படியான எல்லோரையும் கைது செய்து விசாரித்தால் மட்டுமே இந்த நக்சல் என்னும் புற்று நோயை அழிக்க முடியும்  அல்லது இன்னும் பெண்கள், இந்திய மக்கள் என்று கூவிக்கொண்டும், ஊடகங்களின் மகுடிக்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தால் இது தான் தொடரும்.

நக்சல்கள் மக்களுக்கு செய்வது என்ன,

ரோடு போட வந்தால், அவர்களை கொல்வது, அதனால் மலைப்புறங்களில் வாழும் மக்கள் காட்டுக்குள்ளே அடங்கி கிடந்தது நக்சல் தீவிரவாதிகளுக்கு அடிபணிந்து நடப்பது, மின்சாரம் வழங்க போஸ்ட் நட்டு டிரான்ஸ்பார்மர் வைத்தால் அன்று இரவே அதை குண்டு வைத்து தகர்த்து மீண்டும் இருட்டையே காட்டி, மக்களுக்குள் மீண்டும் பிரிவினையை விதைப்பது.

பள்ளிகளை குண்டு வைத்து தகர்த்து, மலைப்புற  மக்களுக்கு படிப்பறிவே இல்லாமல் செய்து கடைசி வரை கம்யூனிசத்தை கற்று கொடுத்து ஆயுத பயிற்சி கொடுத்து தங்களின் அடிமைகளாக வைத்திருப்பது, போதா குறைக்கு  அரசின் சாதாரண வேலைகளில் கூட பிற்படுத்தப்பட்டவரைகளை நுழையவிடாமல் தடுப்பது,[அரசின் எந்த வேலைக்கு செல்ல வேண்டுமென்றாலும் 10-ம் வகுப்பு வரை கல்வி பயின்றிருக்க வேண்டுமென்பது கட்டாயம்]

முழு படையுடன் இவர்களை எதிர்த்து தாக்கினால் மட்டுமே அழிக்க முடியும். இல்லை என்றால் இது தொடர் கதையாகும் என்பதில் ஐயமில்லை.

நேற்று நடந்த தாக்குதலில் விமானப்படையின் செயல்திறன் பாராட்டப்படவேண்டியது அவசியம். தாக்கப்படுகிறோம் என்று தனது தலைமைக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் CRPF தலைமை அருகில் உள்ள விமானப்படை தளத்துக்கு தகவல் கொடுத்து உதவி செய்ய சொல்லியது.  விமானப்படையும் ஒரு சில கமாண்டோக்களுடன் உடனடியாக சுமார் நான்கு ஹெலிகாப்டர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது. முதலில் காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு மீண்டும் வந்து இறந்தவர்களின் உடல்களை ஏற்றி சென்றுள்ளது.