முப்பரிமாண ராடர் கொள்முதல், முடிவு எடுக்க தயங்கும் அரசு

இந்திய ராணுவத்தில் உள்ள பழைய Flycatcher ராடார்களுக்கு மாற்றாக நவீன முப்பரிமாண ராடார்களை வாங்க ராணுவம் கேட்டிருந்தது, அதற்கு சம்மதித்த அரசு 2008 -இல் முதல் முறையாக அதற்கான டெண்டரை வெளியிட்டது, எந்த நிறுவனமும் அதற்கு பதிலளிக்காததால், 2012-இல் வேறொரு டெண்டர் வெளியிடப்பட்டு இஸ்ரேல் நாட்டின் ரபீல் நிறுவனம் வெற்றி பெறும் நிலையில்  உள்ளது, சுமார் 3600 கோடி ருபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் விலை அதிகமாக இருப்பதால் இதை விட விலை குறைவான ராடரையே வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய ராணுவ மற்றும் விமான தளங்களை எதிரி ஏவுகணைகளிடமிருந்தும் போர் விமானங்களிடமிருந்தும் பாதுகாக்க வான் பாதுகாப்பு ஆர்டில்லரிகள் பயன்படுத்தப்படும், இந்தியா சுவீடனின் L 70 மற்றும் சோவியத்தின் ZSU 23mm ஆர்டில்லரிகளை பயன்படுத்தி வருகிறது, இந்த ஆர்டில்லரிகளுக்கு சரியான தகவலையும் இலக்கையும் கொடுக்க நெதர்லாந்து நாட்டின் Fly Catcher என்னும் ராடர் 1980-களில் வாங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் பெல் (BEL) நிறுவனம் அதை இந்தியாவில் தயாரித்து விமானப்படைக்கும் ராணுவத்துக்கும் கொடுத்தது.

நவீன போர் முறைகள் மற்றும் மின்னணு தாக்கும் முறைகளால் இந்த பழைய ராடார்களை மிக எளிதில் செயலிழக்க செய்ய முடியும், அதோடு இதனால் துல்லியமான முப்பரிமாண தேடுதலை செய்ய முடியாது, ராணுவமும் தன்னிடம் உள்ள L 70 மற்றும் ZSU 23 ஆர்டில்லரிகளை தனியார் நிறுவனம் மூலம் மேம்படுத்தும் திட்டத்தில் மும்முரமாக உள்ளது, இவற்றை  நவீனப்படுத்தி மற்றும் நவீன ராடார்களின் உதவியோடு இந்திய ராணுவ நிலைகளை எதிரிகளின் தாக்குதலிலிருந்து தடுக்க முடியும்.

இதற்காக வெளியிடப்பட்ட முதல் டெண்டரில் பிரெஞ்சு நாட்டின் தேல்ஸ் நிறுவனமும் ஜெர்மனியின் ரெய்ன்மெட்டல் நிறுவனமும் கலந்து கொண்டன, ஆனால் ரெய்ன்மெட்டல் நிறுவனத்தின் ராடர் சரியில்லை என்பதாலும், தேல்ஸ் நிறுவனம் தனது ராடாரை சோதனைக்கு கொடுக்காததாலும் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் சில திருத்தங்களோடு 2012-இல் இரண்டாவது முறையாக இந்த டெண்டர் வெளியிடப்பட்டது, இதில் வெளிநாட்டு நிறுவனங்களோடு இந்தியாவின் பெல் மற்றும் L&T நிறுவனங்கள் கலந்து கொண்டன. தேர்வின் முடிவில் பிரெஞ்சு நாட்டின் தேல்ஸ் நிறுவனத்தின் ராடரும் இஸ்ரேலின் ரபீல் நிறுவனத்தின் ராடரும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு 2015-இல் இந்தியாவில் வைத்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டின் திறனும் சரி சமமாக இருப்பதால், மேற்கொண்டு குறைந்த விலைக்கு தரும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டது.

முடிவில் இஸ்ரேல் நாட்டின் ரபீல் நிறுவனம் சுமார் 66 ராடார்களை $500 மில்லியன் தொகைக்கு தருவதாகவும் அதோடு 30% தொகையை இந்தியாவில் முதலீடு செய்வதாகவும் மேலும் இந்த தொழில் நுட்பத்தை இந்திய நிறுவனத்தோடு பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. இதனால் இஸ்ரேலுடன்  இந்த ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொள்ளும் என்று தெரிகிறது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 60% ராடார்கள்  இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கப்பட்டது அல்லது அவர்களின் உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதே ஆகும், இஸ்ரேல் நாட்டின் ராடாரின் திறனில் அதீத நம்பிக்கையுள்ளதால் அவர்களிடமிருந்தே வாங்க ராணுவமும் திட்டமிட்டுள்ளது.

ஆனால் அரசோ இந்த விலையும் அதிகமாக இருப்பதால், இது போன்ற முப்பரிமாண ராடார்களை இந்தியாவில் சொந்தமாக தயாரிக்க முயற்சி மேற்கொள்ள LRDE-யை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

1980-இல் Flycatcher ராடார்களை ஹொலண்ட்ஸி நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் தயாரித்த பெல் நிறுவனம் அதைவிட நவீனமான ஒன்றை இதுவரை தயாரிக்காமல் திணறி வருகிறது.

DRDO-வின் ராடர் தயாரிக்கும் மற்றும் ஆராய்ச்சி பிரிவான LRDE அதுல்யா என்ற பெயரில் முப்பரிமாண ராடர் ஒன்றை தயாரித்து சோதித்து வருவதாக கூறியுள்ளது. ஆனால் அதற்கான காலம் மற்றும் திட்ட மதிப்பீட்டை கூற மறுத்துள்ளதால் எப்போது எந்த விலைக்கு LRDE நிறுவனம் அதை ராணுவத்திற்கு தரும் என்ற ஐயப்பாடும் கிளம்பியுள்ளது.

3D ராடார் என்பது தேடுதல், பின்தொடர்தல் மற்றும் ஆயுதங்களை இலக்கை நோக்கி தாக்க உதவி செய்யும் அமைப்பு ஆகும், பொதுவாக ஒரு 3D ராடார் இலக்கின் தொலைவு, புவி அமைப்பில் அது இருக்கும் இடம் மற்றும் உயரத்தையும் துல்லியமாக காட்டும், அளவின் அடிப்படையில் அதன் கண்காணிக்கும் தூரம் இருக்கும்.

இந்தியா இது போன்ற 3D ராடார்களை ஏற்கனவே படையில் இணைத்து பயன்படுத்தி வருகிறது, முக்கியமாக இஸ்ரேலின் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1500 கிலோமீட்டர் வரை கண்காணிக்கும் LRDE ராடர்.

மேற்கண்ட ராணுவத்தின் இந்த ராடர் அமைப்பு ஒரு வாகனத்தின் பின்னல் வைக்கப்பட்டு எளிதாக ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இருக்கும் சிறிய ராடர்.

படத்தில் முதலில் இருப்பது Fly Catcher ராடார், இது போன்ற ஒன்று தான் இந்திய ராணுவத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது