1500 புதிய கவசங்களை ஊடுருவும் துப்பாக்கிகளை வாங்க ராணுவம் டெண்டர் வெளியீடு

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள புதிய டெண்டரில் சுமார் 1500 கவசங்களை ஊடுருவும் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது, இந்த துப்பாக்கிகள் கவசங்களை ஊடுருவி செல்லும் .50 BMG ( Browning Machine Gun)  அல்லது 12.7mm குண்டுகளை  சுடும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்திய ராணுவம் தற்போது தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட டெனல்  NTW 20 மற்றும் இந்தியாவில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட வித்வன்சாக் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இந்த துப்பாக்கிகள் 2005 ஆம்  ஆண்டு வாக்கில் வாங்கப்பட்டு படையில் இணைக்கப்பட்டவை, சுமார் 31 கிலோ எடை உள்ளவை, ஒரு துப்பாக்கியை எடுத்து செல்ல இரண்டு வீரர்கள் தேவை அதை நிறுவி சுட தயாராக சில நிமிடங்கள் ஆகும், அதோடு அங்கிருந்து துப்பாக்கியோடு தப்பி செல்லவும் நேரம் ஆகும், ராணுவத்தில் தற்போது சுமார் 1000-கும் குறைவான வித்வன்சாக் அல்லது டெனல்  NTW 20 துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த டெனல் ரக துப்பாக்கிகள் 20mm அளவுள்ள குண்டுகளை சுடும் திறன் வாய்ந்தவை, அளவில் பெரிய இந்த குண்டுகள் சுமார் 1600 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை கூட சரியாக சுடும் திறன் வாய்ந்தவை, ஆனால் எடை மற்றும் அளவினால் இதன் செயல்பாடு போர் காலங்களில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆகவே தான் அதே திறனுடைய எடை குறைந்த துப்பாக்கிகளை வாங்க ராணுவம் முடிவெடுத்துள்ளது.

2011-இல் முதல் முதலாக வெளியிடப்பட்ட இந்த டெண்டர் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது, ராணுவத்தின் அதீத நெருக்கடிக்கு பிறகு அரசின் ஒப்புதலோடு மீண்டும் அதே தெண்டரை வெளியிட்டு மே 15-க்குள் இதற்கான சோதனைகளை ஆரம்பித்து விரைவில் இந்த துப்பாக்கிகளை வாங்கவுள்ளது ராணுவம். ஆரம்பக்கட்டமாக 1500 துப்பாக்கிகளையும் தேவைப்பட்டால் மேலதிக துப்பாக்கிகளை வெளிநாட்டு உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது ராணுவம்.

தற்போதைய டெண்டரில் புதிய துப்பாக்கிகள் 15 கிலோ மட்டுமே இருக்க வேண்டும் என்றும் .50 BMG அல்லது 12.7mm குண்டுகளை சுடும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது ராணுவம்,

தற்போது பார்க்கும் போது அமெரிக்காவின் மெக்மில்லன் நிறுவனத்தின் TAC  50 மற்றும் இங்கிலாந்தின் அக்குரசி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் AW 50 துப்பாக்கிகள் சிறந்தவையாக பார்க்கப்படுகின்றன. இந்த துப்பாக்கிகளை தான் உலகின் அதி சிறந்த சிறப்பு படைகள் பயன்படுத்தி வருகின்றன, உதாரணமாக அமெரிக்காவின் நேவி சீல், இங்கிலாந்தின் SAS மற்றும் இஸ்ரேலின் சயீதெத் வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவை குறைந்த எடை மற்றும் அதிக சக்தி கொண்டதால் ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களை கூட சேதப்படுத்தி அதை செயலிழக்க செய்யும் வலிமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஆன்டி மெட்டீரியல்  துப்பாக்கி என்பது, எதிரியின் கவச வாகனங்கள், தாக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட சுவர்களை துளைத்து சென்று தாக்கும் திறன் உள்ளது, அதற்காகவே வலிமையான பெரிய தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வகை துப்பாக்கிகள் மூலம், இந்தியாவில் எல்லைக்குள் இருந்தே பாகிஸ்தானின் ராணுவ மறைவிடங்கள் மற்றும் அவர்களின் கவச வாகனங்களை குறிவைத்து தாக்கி அவர்களை கொள்ள முடியும்.
இதே  .50 BMG குண்டில் பல ரகங்கள் உள்ளது, இலக்கின் தன்மையை வைத்து பல்வேறு ரக குண்டுகளை சுடும் போது நல்ல பலன் கிடைக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

படத்தில் மெக்மில்லன் TAC 50 துப்பாக்கி