எதிரி நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்க திணறும் நவீன போர் கப்பல்கள்,

எதிரி நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்க திணறும் நவீன போர் கப்பல்கள், நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கும் ஹெலிகாப்டர்களை வாங்காத அரசு

நீர்மூழ்கிகளை தேடி கண்டுபிடிக்கும் ஹெலிகாப்டர்கள் இல்லாத காரணத்தால், அதி நவீன போர்க்கப்பல்கள் மிக எளிதில் எதிரி நீர்மூழ்கியிடம் மாட்டும் ஆபத்தில் உள்ளது, கப்பல் படை பல முறை இதை அரசுக்கு எடுத்து சொல்லியும் இதுவரை அது பற்றி எதுவும் கண்டுகொள்ளாத அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கண்டன வடிவில் கடிதம் எழுதியுள்ளது கப்பல் படை

இதில் கப்பல் படையின் நவீன போர் கப்பல்கள் நவீன நீர்மூழ்கிகளை தேடி அழிக்கும் ஹெலிகாப்டர்கள் இல்லாததால் எதிரி கடல் பகுதியில் பயிற்சி அல்லது ரோந்து செல்ல முடியாததாக உள்ளது, மேலும் கண்ணி வெடிகள் போன்றவற்றை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கொல்கத்தா மற்றும் ஷிவாலிக் ரக நவீன போர் கப்பல்களை படையில் இணைக்கும் போது அதன் சக்தியை அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவின் சிக்கோர்ஸ்கி லாக்ஹீட் நிறுவனத்தின் S 70B நீர்மூழ்கியை தேடி அழிக்கும் ஹெலிகாப்டரை வாங்க திட்டமிட்டு அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்தது கப்பல்படை, அதன் படி முதற்கட்டமாக 16 ஹெலிகாப்டர்களையும், தேவைப்பட்டால் கூடுதலாக 8 ஹெலிகாப்டர்களையும் வாங்க அரசும் ஒத்துக்கொண்டது.

ஆனால் விலை அதிகமாக உள்ளது என்று கடந்த ஆறு ஆண்டுகளாக இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது அரசு, இடையில் சிக்கோர்ஸ்கி நிறுவனத்தை லாக்ஹீட் நிறுவனம் வாங்கியதால் சிறுது தேக்கம் ஏற்பட்டாலும், 2014-ம் ஆண்டு நிர்ணயித்த அதே தொகையை கொடுத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று லாக்ஹீட்நிறுவனம் இந்திய அரசிடம் அறிவித்தது. அது மட்டுமல்லாது பல வருடங்கள் ஆனதால் விலையை உயர்த்தப்போவதாகவும் லாக்ஹீட் நிறுவனம் இந்திய கப்பல் படையிடம் அறிவித்துள்ளது.

இதனாலேயே விரக்தியடைந்த கப்பல் படை கண்டனத்துடன் கூடிய கடிதத்தை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறிப்பாக போர் கப்பல்களின் சோனார் ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே செல்லும், அதுவும் கடுமையான கடல் சீற்றங்களின் போது அதன் திறன் இன்னும் குறையும், இந்த சோனார்கள் தான் எதிரி நீர்மூழ்கிகளையும் கண்ணி வெடிகளையும் கண்டுபிடித்து போர் கப்பலை ஆபத்திலிருந்து விலக்கி நல்ல வழியில் பயணிக்க செய்யும்.

இந்த சோனாரின் கண்காணிக்கும் தூரத்தை மேலும் சில கிலோ மீட்டர்கள் அதிகரிக்கவும் கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கட்டி இழுக்கும் சோனார்கள் பயன்படுத்தப்பட்டன, இவை போர் கப்பல்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டோ அல்லது தனக்கு பின்னால் வரும் எதிரி நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கவோ பயன்படுத்தப்படும்,

ஆனால் பிரத்யேக நீர்மூழ்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களோ, கப்பலுக்கு முன்னே சென்று தனது சோனாரை கடலில் போட்டு எதிரி நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கும், அது மட்டுமல்லாது ஏவுகணைகளையோ அல்லது டார்ப்பீடோக்களையோ ஏவி எதிரியை அழிக்கவும் செய்யும்.

தற்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நீர்மூழ்கிகள் தொலை தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்களது நீர்மூழ்கியில் வைத்துள்ளன, இவை போர் கப்பல்களுக்கு மிக பெரிய ஒரு ஆபத்தே

இந்திய கப்பல் படையிடம் சுமார் 17 Sea King ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன, இவை 1970- களில் வாங்கப்பட்டு இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது, இவற்றையும் தயாரித்தது சிக்கோர்ஸ்கி நிறுவனம் தான், இவைகள் டார்ப்பீடோக்கள் மற்றும் Sea Eagle ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்தவை.

அதோடு கப்பல் படை சுமார் பத்து காமோவ் Ka 28 நீர்மூழ்கிகளை தேடி கண்டு பிடித்து அழிக்கும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது, இவற்றை வாங்கியும் பல ஆண்டுகள் ஆகிறது, கப்பல் படையின் நிர்பந்தத்தின் காரணாமாக இதை நவீனப்படுத்த சுமார் 294 மில்லியன் டாலர்கள் செலவில் ரஸ்சியாவிடம் கடந்த வருடம் ஒப்பந்தம் போட்டுள்ளது இந்தியா.

இது மட்டுமல்லாது கப்பல்படையின் தேவைக்கு அதி நவீன பல்திறன் ஹெலிகாப்டர்களையும் வாங்குமாறு நிர்பந்தித்து வருகிறது, இதற்காக வெளியிடப்பட்ட டெண்டரில் ஏர்பஸ் நிறுவனத்தின் EC 725 ஹெலிகாப்டர் வெற்றிபெற்றது, அது சுமார் 123 ஹெலிகாப்டர்களை இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது, இருந்தாலும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இதுவரை இழுத்தடித்துவருகிறது மத்திய அரசு