பாதுகாப்பு துறை பட்ஜெட் 2017-18, மீண்டும் ஏமாற்றமே

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 3,59,854 கோடி ருபாய் ( $ 52.91 Billion ) ஒதுக்கினார், இது கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் 14,748 கோடி ருபாய்  ( $ 2.1 Billion ) அதிகம் ஆகும், இது சுமார் 3.5 % அதிகம் என்றாலும் விலைவாசி உயர்வை கணக்கிடும் போது மிக குறைவே, இந்த தொகை மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2.14 % ஆகும்.

அது மட்டுமல்லாது, கடந்த வருடம் ஆயுதங்கள் வாங்க கொடுத்த தொகையில் சுமார் 7000 கோடி ரூபாயை  ( $1 billion)  திரும்ப கொடுக்கவுள்ளது பாதுகாப்பு துறை, இது ஆயுதங்கள் வாங்க அளித்த தொகையில் சுமார் 8 % ஆகும், முப்படைகள்- தேவைகள் அதிகம் இருப்பதாக கூறி வந்த போதும் பலரின்  அலட்சிய போக்கினால் இந்த தொகையை திரும்ப அளிக்கிறது பாதுகாப்பு அமைச்சகம், 2015 ஆண்டு பட்ஜெட்டின் போதும் சுமார் 13,000 கோடி ரூபாயை ( $2 billion) பயன்படுத்தாமல் திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இது பல கேள்விகளை எழுப்பினாலும், பாதுகாப்பு அமைச்சகம், ஒப்பந்தங்கள் உருவாக்கும் குழுவினரின் அலட்சிய போக்கும் அரசின் மெத்தன போக்குமே காரணம் என்று கூறி வருகிறது, இது ஏற்புடையது என்பது மட்டுமல்ல, இந்த தொகையை வைத்து ராணுவத்தின் ஒவ்வொரு வீரருக்கும் குண்டு துளைக்காத ஆடையும் தலைக்கவசமும் கண்ணாடிகளும் மற்ற சில சாதனங்களையும் வாங்க இயலும்.

கடந்த மாதம் தான் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்துக்கு தலைக்கவசம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது, சுமார் 1,50,000 தலைக்கவசம் வாங்க வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே ஆனது. சுமார் 16 லட்சம் வீரர்கள் உள்ள பாதுகாப்பு துறையில் 80% வீரர்களுக்கு நல்ல தலைக்கவசமும் குண்டு துளைக்காத ஆடையும் இல்லை என்பது வருத்தமே, வெறும் 6000 கோடி ரூபாயில் இதை வாங்கி அனைத்து வீரர்களுக்கும் கொடுத்து விட முடியும், அதாவது செலவிட முடியாமல் திருப்பி அளித்த 7000 கோடியில் இதை செய்ய முடியும், ஆனாலும் அரசு இதை செய்யவில்லை.

பாதுகாப்பு துறையின் இந்த பட்ஜெட்டில் பாதிக்கு மேல் வீரர்களின் ஊதியத்திற்கும், ஓய்வூதியத்திற்குமே செல்லும், மீதி தொகையே பராமரிப்பு செலவிற்கும் புது ஆயுதங்கள் வாங்கவும் செலவிடப்படும், இந்த பாதுகாப்பு துறை பட்ஜெட்டிலிருந்து தான் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பிற்கும் (DRDO) பணம் செல்லும் என்பதும் குறிப்பிட தக்கது.

இந்த வருட பட்ஜெட்டில் சுமார் 86,488  கோடி ருபாய் ( $12.7 Bilion )ஆயுதம் வாங்க செலவிடப்பட உள்ளது, இதில் ராணுவத்திற்கு 25,175  கோடியும் ( $3.7 Billion) , கப்பல் படைக்கு 19,348  கோடியும் ( $2.8 Billion ), விமானப்படைக்கு 33,546 கோடியும் ( $ 4.9 Billion ) பிரித்து வழங்கப்படவுள்ளது,  இந்த பணத்தை ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கும் புதிதாக போடும் ஒப்பந்தத்திற்கும் பாதுகாப்பு துறை பயன்படுத்தும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆயுதங்கள் வாங்க ஒவ்வொரு ஆண்டும் அதிக தொகை ஒதுக்கி வந்தது, ஆனால் தற்போதைய ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடதகுந்த அளவு அதிக தொகை அளிக்கப்படவில்லை. காங்கிரசின் 2013-14 பட்ஜெட்டில் ஆயுதங்கள் வாங்க சுமார் 79,128  கோடி ( $12.5 Billion )  அளிக்கப்பட்டது, பின்னர் வந்த பிஜேபி அரசு அதே அளவு தொகையை தான் இதுவரை அளித்து வருகிறது என்பது ஆச்சர்யமே, பொதுவாக வெளிநாட்டிலிருந்து வாங்கப்படும் ஆயுதங்கள் எல்லாமே டாலர் கொடுத்து தான் வாங்கப்படும், காங்கிரசின் 2013-14ம் ஆண்டு  79,128  கோடி என்பது சுமார் 12.5  பில்லியன் டாலர்கள், அதே இந்த வருட பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள 86,488  கோடி என்பது 12.7 பில்லியன் டாலர் தான்.

இந்த அளவு தொகையைக் கொண்டு ராணுவத்தை நவீனப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை, அதோடு இந்த தொகையை வைத்துக்கொண்டு அதி நவீன விமானங்கள் கப்பல்கள் ஏவுகணைகள் வாங்குவது என்பது முடியாத காரியமே.

மொத்தத்தில் இந்த வருட ராணுவ பட்ஜெட்டும் குறிப்பிட தகுந்த மாற்றத்தகை கொண்டு வரவில்லை, சுமார் $15-$17 பில்லியன் வரை ஆயுதங்கள் வாங்க செலவிடப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது

1 டாலர் = 68 ருபாய் என்ற 2017 பெப்ரவரி மாத எக்ஸ்சேஞ் ரேட்