கேலிக்கூத்தாக்கப்படும் விமானப்படை

ஒரே நேரத்தில் சீன விமானப்படையையும் பாகிஸ்தான் விமானப்படையையும் சமாளிக்க சுமார் 45 ஸ்குவாட் போர் விமானங்கள் இந்தியாவுக்கு தேவை, அதுவும் நவீன விமானங்கள், அதோடு கூட போர் விமானங்களை திறம்பட செயல்பட வைக்கும் உதவி விமானங்களான பறக்கும் ராடார் (AEWCS) மற்றும் கட்டுப்பாட்டு விமானம், வானிலே ஏரி  பொருள் நிரப்பும் விமானங்களும் ( Air Refulers)  தேவை, ஆனால் இன்றய கால கட்டத்தில் விமானப்படை வெறும் 20 முதல் 25 ஸ்குவாட் போர் விமானங்களை மட்டுமே வைத்துள்ளது, வரும் நாட்களில் இது இன்னும் குறையப்போவதில் ஆச்சர்யம் இல்லை.

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், தேஜாஸ் விமானத்தையும், வெறும் வாய் வார்த்தைகளையும் வைத்து இதுவரை காய் நகர்த்தி வந்த அரசு, சமீபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை தளபதியின் பேச்சையும் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை, விமானப்படைக்கு நடுத்தர பல்திறன் வேலை செய்யும் விமானங்கள் சுமார் 200-கும் மேல் தேவை இருந்த பின்னரும் 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்தார் முன்னாள் தளபதி ராஹா.

கார்கில் போரில் விமானப்படையின் தாக்கும் முறைகள் வெகுவாக மாற்றியமைக்கப்பட்டது, வெறும் வான் பாதுகாப்பு என்பது மட்டுமல்லாது, தரை இலக்குகளை துல்லியமாக தாக்குவதோடு மட்டுமின்றி எதிரிகளின் வான் பாதுகாப்பு ராடார் மற்றும் ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யும் பல்முக விமானங்கள் தேவைப்பட்டது. அப்போது புதிதாக வாங்கப்பட்டிருந்த மிராஜ் 2000 விமானங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து சிறப்பாக செயல்பட்டது.

போருக்கு பின்பு எடுக்கப்பட்ட தீர்மானங்களில், மிக முக்கியமாக நடுத்தர பன்முக விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டு, தரை இலக்குகளை மட்டுமே தாக்கும் MiG 27 விமானங்களை மாற்றி 2005 முதல் பன்முக மிராஜ் 2000 விமானங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால்  அந்த கொள்முதல் திட்டத்தை அரசு ரத்து செய்தது, ஆனாலும் பன்முக விமானங்கள் வாங்கும் திட்டத்தை விமானப்படை கைவிடாமல் தொடர்ந்து உறுதியாக இருந்தது.

பின் வந்த காலங்களில், மேற்கத்திய நாடுகள் அதி சிறந்த இரட்டை எஞ்சின் கொண்ட கூடுதல் திறன் வாய்ந்த விமானங்களை தயாரிக்கவே, இந்திய விமானப்படையும் ஒற்றை எஞ்சின் கொண்ட பல்முக விமானங்கள் கொள்முதல் திட்டத்திலிருந்து இரட்டை எஞ்சின் கொண்ட நவீன விமானங்களை வாங்க முடிவெடுத்தது, அப்போதைய அரசும் அதற்கு அனுமதி வழங்கவே டெண்டர் விடப்பட்டு ரபேல் விமானங்கள் வாங்க முடிவெடுக்கட்டது.

பின்னர் வந்த அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வெறும் 36 விமானங்களை வாங்கியது, விமானப்படையோ சுமார் 200 ரபேல் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டிருந்தது.

அதோடு கூடவே, MiG 21 விமானங்களை நீக்கி புதிய விமானங்களை படையில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது விமானப்படை, தேஜாஸ்  திட்டம் படு தோல்வி அடையவே, அதற்கும் வெளிநாட்டு விமானங்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது விமானப்படை.

உண்மையில் தற்போது விமானப்படைக்கு, சுமார் 10 ஸ்குவாட் இரட்டை எஞ்சின் கொண்ட பன்முக விமானங்களும், மேலும் ஒரு 10 ஸ்குவாட் ஒற்றை எஞ்சின் கொண்ட குறைந்த பராமரிப்பு மற்றும் பறக்கும் செலவு கொண்ட விமானங்களும் தேவைப்படுகிறது, இவை இரண்டுமே நவீன போர்க்களத்தில் சண்டையிட தகுதியுடையதாக இருக்க வேண்டும்.

ஆக மொத்தம் சுமார் 400 முதல் 450 விமானங்கள் அடுத்த 10 ஆண்டுக்குள் விமானப்படையில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, இருந்தாலும் நவீனப்படுத்தப்பட்ட மிராஜ் ஜாகுவார் மற்றும் MiG 29 விமானங்களை வைத்து சுமார் 8 முதல் 10 ஸ்குவாட் வரை சமாளிக்க முடியும்.

இவற்றை கருத்தில் கொண்டே சமீபத்தில் ஓய்வு பெற்ற தளபதி ராஹா, விமானப்படைக்கு 200 முதல் 250 ரபேல் விமானங்கள் தேவை என்றார், அதுவும் அடுத்த 10 ஆண்டுக்குள். அதற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 முதல் 25 விமானங்கள் புதியதாக படையில் இணைக்கப்பட வேண்டும், அதை செய்ய நாட்டில் இரண்டு விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தேவை.

இதை அரசு சாதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நேரமும் மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறது, முதலில் அமெரிக்காவின் போயிங் லாக்ஹீட் மார்ட்டின், பிரெஞ்சு டிஸ்ஸால்ட், சுவீடனின் சாப் நிறுவனங்களிடம் கருத்து கேட்டு அவர்களின் விமானம் தயாரிக்கும் திட்டத்தையும் பெற்ற அரசு, தற்போது ஒற்றை எஞ்சின் கொண்ட வெளிநாட்டு விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் உள்ளதாக தெரிவித்துள்ளது, அதனால் சுவீடனின் கிரிப்பன் விமானமோ  அல்லது லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் F 16 விமானமோ தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் அரசின் இந்த திட்டங்களுக்கு சிறிதும் செவி மடுக்காத விமானப்படையோ இரட்டை எஞ்சின் கொண்ட ரபேல் விமானங்களை அதிகளவில் இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஆனால் அரசோ எதற்கும் குரல் கொடுக்காமல் தொடர்ந்து வெவேறு கருத்துகளை கூறி வருவது, விமானப்படையின் திறனை கேலிக்கூத்து ஆக்குவது போலவே உள்ளது.

இதோடு மட்டுமல்லாது உதவி விமானங்கள் வாங்கும் ஒப்பந்தங்களிலும் இதே வேலையை தான் காட்டி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது, மொத்தத்தில் விமானப்படையை புறந்தள்ளும் வேலையை அரசு நேரடியாக செய்வதாகவே தோன்றுகிறது.