சோதனைகளில் அசத்திவரும் ATAGS ஆர்டில்லரி துப்பாக்கி

இந்திய ராணுவத்தின் தாக்கும் திறனை அதிகரிக்க நவீன ஆர்டில்லரிகளை வாங்க ராணுவம் திட்டமிட்டிருந்தது, அரசின் அனுமதியோடு கடந்த சில வருடங்களாக அதற்கான வேலைகள் நடைபெற்று தற்போது சோதனை நிலையில் அவை உள்ளன, அதன் ஒரு பகுதியாக டிரக்குகளின் பின்னால் கட்டி இழுத்து செல்லப்படும் தொலை தூரம் வரை சுடும் நவீன ஆர்டில்லரி துப்பாக்கியை DRDO- வின் தலைமையின் கீழ் டாட்டா நிறுவனமும், கல்யாணி நிறுவனமும் தனித்தனியே தயாரித்துள்ளன.

இவை இரண்டும், டிசம்பர் மாதம் ஒடிஸாவிலுள்ள DRDO-வின் சோதனை தளத்தில் வைத்து தொடர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, சோதனையில் இரண்டுமே மிக சிறப்பாக செயல்பட்டதாக DRDO தெரிவித்துள்ளது, இந்த சோதனைகள் ராணுவத்தின் முன்னிலையில் நடை பெற்றதாகவும் DRDO தெரிவித்துள்ளது.

ATAGS- Advanced Towed Artillery Gun System  அல்லது நவீன கட்டி இழுக்கும் துப்பாக்கி, DRDO- வின் ஒரு முன்னணி திட்டம், ஆனாலும் திட்ட தலைவராகவும் ஆலோசனை வழங்கும் ஒரு அமைப்பாகவும் மட்டுமே DRDO இருந்தது, துப்பாக்கி தயாரிப்பு போன்ற அனைத்து வேலைகளையுமே தனியார் நிறுவனங்கள் தான் மேற்கொண்டன, குறிப்பாக வடிவமைப்பு வேலையை புனேயிலுள்ள ARDE நிறுவனமும், துப்பாக்கி குழலை OFB நிறுவனமும், சுடும் அமைப்பை மஹிந்திரா நிறுவனமும், துப்பாக்கி குழலின் முன்பகுதியை பூஞ்ச் லாயிட் நிறுவனமும் தயாரிக்கின்றது.

துப்பாக்கியின் மற்ற வேலைகளையும் ஒருங்கிணைப்பையும், டாட்டா நிறுவனமும், கல்யாணி நிறுவனமும் தனித்தனியே செய்கின்றன. சோதனைகளின் அடிப்படையில் ராணுவம் ஒரு நிறுவனத்தையோ அல்லது இரண்டையுமே தேர்வு செய்ய வாய்ப்புள்ளது, காரணம் ராணுவத்திற்கு குறைந்த காலத்திற்குள் சுமார் 2000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் தேவைப்படுவதே.

இந்த ATAGS பார்ப்பதற்கு போபார்ஸ் துப்பாக்கி போலவே இருந்தாலும், அதை விட அதிக திறன் வாய்ந்தது, இந்த ஆர்டில்லரி ஒரு ஹோவிட்ஸர் போலவும், துப்பாக்கி போலவும் செயல்படும், அதாவது ஹோவிட்ஸர் போன்று அதிக கோணத்தில் சுடவும்( அதிக தூரம் ) துப்பாக்கி போன்று குறைந்த கோணத்திலும் ( குறைந்த தூரம் ) சுடும்.

இந்த துப்பாக்கி குழலின் சுற்றளவு 155mm மீட்டர், குழாயின் நீளம் 52 காலிபர்  ( 155×52 )  ஆகும். துப்பாக்கி  அதிக நீளம் இருப்பதால் தொலை தூரம் வரை உள்ள இலக்கை சரியாக அதிக சக்தியுடன் தாக்க முடியும். அது மட்டுமல்லாது சுமார் 25 லிட்டர் கொள்ளளவுள்ள குண்டு வைக்கும் இடம் இதில் உள்ளது, அதனால் மிகப் பெரிய குண்டுகளைக் கூட இதில் வைத்து சுட முடியும். இதன் மூலம் சுமார் 45  கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கை கூட சரியாக தாக்க முடியும்.

அது மட்டுமல்லாது, இதில் தானியங்கி குண்டு ஏற்றும் அமைப்பு உள்ளது, சாதாரண துப்பாக்கி மேகஸின் வடிவில் இது இருக்கும், ஒரு மேகசினில் ஆறு குண்டுகளை வைத்து இந்த துப்பாக்கியில் லோட் செய்யலாம். இதன் மூலம் ஆறு குண்டுகளை தொடர்ச்சியாக சுட முடியும். உலகில் தற்போதுள்ள மற்ற வகை ஆர்டில்லரிகளில் மூன்று குண்டுகளை தான் ஒரே நேரத்தில் லோட் செய்ய முடியும்.

அதோடு மட்டுமல்லாது, இந்த ஆறு குண்டுகளையும், அவசர நேரத்தில் 30 வினாடிகளுக்குள் சுட முடியும், ஆனாலும் நிமிடத்திற்கு மூன்று குண்டு சுடுவதே இதன் பராமரிப்பு செலவை கட்டுப்படுத்தும், பொதுவாக ராணுவம் போரின் போது ஆர்டில்லரி தாக்குதல் நடத்த திட்டமிட்டால், சுமார் 100 முதல் 200 துப்பாக்கிகளை சுமார் ஒரு மணி நேரம் எதிரி இலக்குகளை நோக்கி சுட உத்தரவிடும், அப்போது ஒரு துப்பாக்கிக்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு குண்டு மட்டுமே சுட அனுமதி வழங்கும்.

மேலும் இதை தயார்படுத்த குறைந்த வீரர்களே போதும், காரணம் இதன் லோடிங் மற்றும் மற்ற சில வேலைகளை கணினி மற்றும் ஆட்டோ லோடிங் இயந்திரமே செய்து விடும்.

தற்போது துவக்க சோதனைகள் மட்டுமே நடந்துள்ளது, தாக்கும் தூரம், குறி பார்த்து சுடும் சோதனைகள், கால நிலை சோதனைகள், பராமரிப்பு சோதனைகள், இவை அனைத்தும் முடிந்த பின்னரே, துப்பாக்கியை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கும். இவை அனைத்தையும் முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கியின் எடை சுமார் 16 டன், இதை இழுக்க மற்றும் உதவிக்கு ஒரு டிரக் தேவைப்படும், அதை தனியார் நிறுவனமான அசோக் லேலண்ட் தயாரித்து கொடுக்கவுள்ளது, ஆக மொத்தம் ஒரு துப்பாக்கியின் மொத்த விலை சுமார் 20  கோடி ரூபாய் ஆகும், ராணுவம் சுமார் 2000 துப்பாக்கிகளை வாங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது