ராணுவத்துக்கு புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை வாங்க அரசு திட்டம்

இந்திய ராணுவத்தின் குறி பார்த்து  சுடும் வீரர்களுக்கு புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராணுவத்தில் ஏற்கனவே உள்ள ட்ராக்நாவ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக புதிய நவீன துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் நடந்த எல்லை பிரச்னையில் பாகிஸ்தான் நாட்டு ஸ்னைப்பர்களால் சுமார் 10-க்கும் மேல் இந்திய வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவம் 1980-களில் சோவியத் நாட்டிடமிருந்து ராணுவத்திற்கு ட்ராக்நாவ் என்னும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை அதிகளவில் வாங்கி ராணுவத்திற்கு கொடுத்தது. இவை அந்த நேரம் மிக உதவியாக இருந்தது. இதனால் சுமார் 600 மீட்டர் தூரம் வரை சரியாக இலக்கை சுட முடியும். மேலும் இதை எடுத்துச்செல்வதும் மிக எளிது. ஆனாலும் இவற்றால் உண்மையான ஸ்னைப்பர் செய்யும் வேலையை செய்ய இயலாது. காரணம் இதன் குறுகிய தாக்கும் தூரம் தான். ஆகவே இந்த துப்பாக்கி DMR- Designated Marksman Rifle என்றே அழைக்கப்பட்டு வந்தது.

உலகின் எல்லா ராணுவத்தின் சிறப்பு பிரிவிலும் சிறந்த ஸ்னைப்பர் வீரர்கள் இருப்பார்கள், ஆனால் இந்திய ராணுவத்தில் அப்படி ஒரு பிரிவு இதுவரை கிடையாது. ஆனால் பாகிஸ்தானோ தொடர்ந்து தனது குறிபார்த்து சுடும் ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது.

தற்போது நடந்துவரும் எல்லை பிரச்னையின் போது, பாகிஸ்தான் தொடர்ந்து ஸ்னைப்பர் மூலம் இந்திய வீரர்களை தொலைவிலிருந்து தாக்கி வருகிறது. இந்திய வீரர்களின் DMR துப்பாக்கி மூலம் பதிலடி தருவது சாத்தியமற்றது. காரணம் பாகிஸ்தானின் ஸ்னைப்பர்கள் சுமார் 1000 மீட்டருக்கு அப்பால் இருந்து சுடுவார்கள், இந்திய ராணுவத்திடம் அவ்வளவு தூரம் வரை சுடும் ஆயுதங்கள் எதுவும் இல்லை.

ராணுவத்திடம் AMR வித்வான்ஸாக் துப்பாக்கி உள்ளது, இது சுமார் 25 கிலோ எடை உள்ளது, அதோடு துப்பாக்கியை பொருத்தி தயாராவதற்குள் எதிரி அந்த இடத்திலிருந்து சென்று விடுவான். ஆதலால் அதையும் பயன்படுத்தமுடியாத நிலையில் ராணுவம் உள்ளது.

ராணுவத்திற்கு புதிய நவீன ஆயுதங்கள் வழங்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்னைப்பர் துப்பாக்கிகளும் வாங்க வலியுறுத்தப்பட்டது, ஆனாலும் இத்தனை வீரர்கள் எல்லையில் மடிந்த பின்பே அரசுக்கு அது உறுத்தப்பட்டுள்ளது.

2008 மும்பை தாக்குதலின் போது NSG வீரர்களிடமும் ட்ராக்நாவ் துப்பாக்கிகள் இருந்தன, சமீபத்தில் பதான்கோட் விமான தளத்தில் நடந்த தாக்குதலின் போது NSG வீரர்களிடம் நவீன .338  லாப்புவா மேக்னம் தோட்டாக்களை சுடும் M98B துப்பாக்கிகள் இருந்தது. ஆனால் ராணுவத்தின் சிறப்பு படைகளிடம் இதுவரை அது போன்ற நவீன துப்பாக்கிகள் இல்லை என்பது வருத்தமே.

ராணுவத்திற்கும் இது போன்ற லாப்புவா மேக்னம் தோட்டாக்களை சுடும் துப்பாக்கிகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சுமார் 5000 துப்பாக்கிகளை நேரடியாக வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வாங்கப்படும் இவை எல்லையில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும். பின்பு படிப்படியாக அனைத்து ராணுவத்தின் மார்க்ஸ்மான் வீரர்களுக்கும் வழங்கப்படும்.

இருப்பினும் இதன் முதல்கட்ட ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜூன் மாதமே வெளியிடப்படும்,எல்லாம் தயாராகி ராணுவத்தின் கையில் கிடைக்க இன்னும் மூன்று வருடம் ஆகும் என்பது வருத்தமே, அதற்குள் எத்தனை இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் ஸ்னைப்பர்களின் தோட்டாக்களுக்கு பலியாவார்கள் என்பது தெரியவில்லை

ராணுவம் லாப்புவா மேக்னம் தோட்டாக்களை சுடும் துப்பாக்கிகளை தேர்ந்தெடுக்க அதிக காரணம் உள்ளது, முதலாவது அதன் எடை, சில வருடங்கள் முன்பு வரை .50 Cal  தோட்டா தான் குறி பார்த்து சுடும் தோட்டா-வின் வரிசையில் முதலிடத்தில் இருந்தது, ஆனால் துப்பாக்கியின் எடை மற்றும் அதன் எதிர்ப்பு திறன் வீரர்களின் இருப்பிடத்தை எளிதாக காட்டுவதோடு, வீரர்களால் எளிதில் துப்பாக்கியை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு செல்லவும் முடியாது.

ஆனால் லாப்புவா மேக்னம் தோட்டாக்களை சுடும் துப்பாக்கிகள், எடை குறைவு மட்டுமின்றி, குறைந்த சத்தம், அதோடு எளிதில்  எடுத்து செல்லவும் முடியும், ஏறத்தாழ உலகின் அனைத்து முன்னணி  சிறப்பு படை வீரர்களும் இந்த துப்பாக்கிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த தோட்டா சுமார் 1400 மீட்டர் தூரம் வரை சிறப்பாக சுடும் என்றாலும், அதை விடவும் தூரம் சென்று கொல்லும் ஆற்றல் உடையது. இரண்டு தாலிபான் தீவிரவாதிகளை சுமார் 2400 மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து இதே லாப்புவா மேக்னம் தோட்டாவை பயன்படுத்தி சுட்டுக் கொன்றார் ஒரு இங்கிலாந்து நாட்டு வீரர்.

 

 பதான்கோட் தாக்குதலின் போது Barrett M 98 மும்பை தாக்குதலின் போது டிராக்நாவ்
பதான்கோட் தாக்குதலின் போது Barrett M 98 மும்பை தாக்குதலின் போது டிராக்நாவ்