தேஜாஸ் விமானத்தை கைவிட்டது இந்திய கப்பல் படை

சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த கப்பல் படை தளபதி, தேஜாஸ்
விமானம் எடை அதிகமாக இருப்பதால் கப்பல் படையின் விமானம் தாங்கி
கப்பல்களிலிருந்து செலுத்த முடியாது என்றும், இதனால் வேறு நாடுகளின்
விமானத்தை வாங்க பரிசீலித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்தார், இதனால்
தேஜாஸ் விமானத்திற்கு கப்பல் படை அளித்து வந்த ஆதரவு முற்றிலுமாக
நீங்கிவிட்டதாக தெரிகிறது.

இருந்தாலும் தேஜாஸ் நேவி வகையை ஆராய்ச்சி செய்வதற்கு கப்பல் படை முழு
ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கப்பல் படை தளபதி குறிப்பிட்டார். தேஜாஸ்
விமானத்திற்கு அதிக அளவு ஆதரவு வழங்கி கொண்டிருந்த கப்பல் படை திடீரென
இதை அறிவித்திருப்பதாக பலர் கூறினாலும், தேஜாஸ் விமானத்தின் திறன்
ஏற்கனவே பல முறை விமானப் படையாலும் மற்ற ஆராய்ச்சியாளர்களாலும் கடும்
விமர்சனத்துக்குளாகியிருந்தது.

விமானப்படை,  அதிக எடை, குறைந்த தாக்கும் தூரம் மற்றும் வேறு சில
காரணங்களுக்காக தேஜாஸை உதறி தள்ளியது. இருந்தாலும் அரசு மற்றும் பலரின்
வற்புறுத்தல் காரணமாக சுமார் 40 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது, முதல் 2௦
தொடக்க செயல்முறை வடிவ அமைப்பிலும் (IOC) அடுத்த 20 முழுமையான செயல்முறை அமைப்பிலும் (FOC) வழங்கப்படவுள்ளது. தேஜஸ் விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக பயன்படுத்த முடியாத காரணத்தால் அது தமிழ்நாட்டில்
கோவையில் உள்ள சூளூர் விமான தளத்தில் சேர்க்கப்பட உள்ளது.

தேஜாஸை மேம்படுத்தி Mark 1A என்ற பெயரில் அதி நவீன ராடார் மற்றும்
ஏவுகணைகளை பொருத்தி தருவதாக ADA விமானப்படைக்கு வாக்கு கொடுத்துள்ளது,
இருந்தாலும் அதை உருவாக்கி பரிசீலனை செய்த பின்பே அதை குறித்து பேச
முடியும் என்று விமானப்படை கையை விரித்து விட்டது.

தேஜாஸ் நேவி வகையை உருவாக்க கப்பல் படை அதிக ஆதரவு கொடுத்து வந்தது, அது
மட்டுமல்லாது மார்க் 2 வகை தேஜாஸ் விமானத்தை உருவாக்கவும் கப்பல் படையே
ஆதரவு அளித்து வந்தது.

குறிப்பாக பார்க்கப்போனால், தளபதியின் கருத்து நியாயமாகவே தோன்றுகிறது,
STOBAR வகை விமானம் தாங்கிகளிலிருந்து விமானங்களை செலுத்தி அதன் திறனை
எதிர்பார்ப்பது முட்டாள்தனமே, காரணம் குறைந்த ஓடுபாதை. அதனால் லெகுவான
அல்லது நடுத்தர எடை கொண்ட விமானங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

உதாரணமாக விக்ரமாதித்தியா கப்பலிலிருந்து செலுத்தப்படும் MiG 29K விமானத்தில் முழு எரிபொருளாயோ அல்லது குறிப்பிட்ட அளவு ஆயுதங்களையோ எடுத்து செல்ல முடியாது, ரஷ்யாவின் குஸ்னெட்சோவ் விமானம் தாங்கி கப்பலிலும் இதே MiG 29K  விமானங்கள் உள்ளன, இதே பிரச்சனையால் தான் கப்பலை சிரிய போர் முனைக்கு கொண்டு சென்றும் அதனால் எவ்வித பயனும் இல்லை. சீனாவின் லியோனிங் கப்பலில் உள்ள J 15 B விமானத்தின் நிலையும் இது தான்.

மேற்கு மற்றும் அமெரிக்காவின் விமானம் தாங்கிகள் CATOBAR ரக விமானம்
தாங்கிகளை வைத்துள்ளன, இவற்றின் மூலம் அதிக எடை உள்ள விமானங்களை அதன்
முழு திறனோடு வானின் ஏவ முடியும், உதாரணமாக இரண்டு கப்பல்களை அழிக்கும்
ஏவுகணை நான்கு வான் பாதுகாப்பு ஏவுகணை மற்றும் முழு அளவு எரிபொருளோடு ஒரு
இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தை CATOBAR மூலம் செலுத்தினால் அது சுமார்
800 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கி விட்டு திரும்பி
வரும்,

அதே ஆயுதங்களோடு ஒரு விமானத்தை STOBAR கப்பலிலிருந்து செலுத்தினால்
அதனால் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல முடியாது, இது
விமானம்தாங்கி கப்பலின் தாக்கும் சக்தியை அதிகமாக குறைத்து விடும்.

அதே STOBAR விமானத்திலிருந்து ஒரு F 35B விமானத்தை செலுத்தினால் அது 800
-கிலோமீட்டருக்கு மேல் சென்று இலக்கை தாக்கி விட்டு திரும்ப வரும்,

தற்போது உள்ள கடின சூழ்நிலையில் எல்லா நாடுகளுமே இரட்டை எஞ்சின் கொண்ட
விமானங்களையே தங்களது விமானம் தாங்கிகளில் பயன்படுத்துகின்றன, இந்தியாவும் இதில் அடக்கம், காரணம் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் கூடுதல்
நம்பகத்தன்மை வாய்ந்ததே,

ஆனால் தேஜாஸ் விமானத்தை விமானம் தங்கியிலிருந்து செலுத்துவது என்பது
கொஞ்சம் வேடிக்கையே, மேற்கண்ட பிரச்சனைகள் இருக்கும் சூழலில் எந்த ஒரு
கப்பல் படையும் இதை முயற்சிக்காது,

விக்ரமாதியா மற்றும் விராட் கப்பலிலிருந்து சுமார் 30 F 35 B விமானங்களை
செலுத்த முடியும் என்பது குறிப்பிட தக்கது, இந்த B ரக F 35 செங்குத்தாக
மேலெழும்பும் அதோடு செங்குத்தாக தரை இறங்கும், ஒற்றை எஞ்சின் என்றாலும்
அதன் நம்பகத்தன்மை மிக அதிகம், அதோடு 5-ம் தலை முறை விமானம் என்பதால்
நிச்சயம் இந்த சாதாரண விமானம்தாங்கிகளை அதி நவீன விமானம்தாங்கிகளாக மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கப்பல் படை மறைமுகமாக F 35 B விமானங்களை வாங்க முயற்சி எடுத்து வருவது பலரும் அறிந்ததே, அதன் காரணத்தால் தான் தேஜாஸ் விமானத்தை வாங்க வில்லை
என்று விமர்சிப்பது முட்டாள்தனமே.