2030-ல் INS விஷால் விமானந்தாங்கியை களமிறக்க திட்டம்

இந்திய கப்பல் படையின் தேவைக்காக, அதி நவீன மிகப் பெரிய விமானம் தங்கி போர் கப்பலை கட்ட அரசு முதற்கட்ட அனுமதி அளித்திருந்தது, அதனடிப்படையில் அமெரிக்க கப்பல் கட்டும் மற்றும் அமெரிக்க கப்பல் படையுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். அதில் முக்கியமாக விமானங்கள், செலுத்தும் அமைப்பு, இயங்கு விசை, மற்றும் வடிவம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தியா தற்போது INS விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலை கட்டி வருகிறது என்றாலும், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கியதே, காரணம் அதன் வரையறுக்கப்பட்ட செயல்பாடு மற்றும் அதன் விமானம் செலுத்தும் அமைப்பு ஆகியவையே காரணம் ஆகும்.

உலகின் வல்லரசான அமெரிக்கா உலகையே ஆள சுமார் 11 அணு சக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளது, அதற்கு அடுத்தப்படியாக பிரெஞ்சு கப்பல்படையும் இது போன்ற விமானம் தாங்கி கப்பல் ஒன்றை வைத்துள்ளது. இந்தியாவின் தேவையை அறிந்து இது போன்ற அதி சிறந்த விமானம் தாங்கியை
உருவாக்க திட்டமிடப்பட்டு அமெரிக்காவின் உதவியுடன் அது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதித்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது கப்பல் படை.

அதன் படி, INS விஷால் போர்க்கப்பல், அணு உலையால் இயங்குமாறும், மேம்படுத்தப்பட்ட மின்காந்த இயக்கு விசை மூலம் விமானங்களை செலுத்துமாறும், அதோடு 55 விமானங்களை தன்னகத்தே வைத்திருக்குமாறும் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகின் அதி நவீன விமானம் தாங்கி போர் கப்பலை வைத்திருக்கும் 3- வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும், ஆனால் இதற்கு இன்னும் சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகக் கூடும். கப்பலின் கட்டுமானத்தை முடித்து முடித்து 2030-க்குள் வெள்ளோட்டம் விட்டு அடுத்த சில ஆண்டிலேயே படையில் சேர்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏற்கனவே அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை வைத்துள்ளது, மேலும் சிலவற்றை கட்டி வருகிறது. இந்தியாவின் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை 83 மெகாவாட் திறனுள்ள அணு உலை இயக்குகிறது, என்றாலும் பெரிய விமானம் தாங்கி கப்பலை இயக்க இதை விட அதிக சக்தி கொண்ட அணு உலை தேவை,

பொதுவாக இது போன்ற ராணுவ தேவைக்கான அணு உலைகளை ஒரு நாடு அடுத்த நாட்டுக்கு விற்பனை செய்வது கிடையாது, ஆனால் அதை உள்நாட்டிலேயே செய்ய உதவி செய்யும், அரிஹந்த் நீர்மூழ்கியின் அணு உலை வடிவமைக்க ரஷ்யா உதவி செய்தது. ஆனால் தற்போது INS விஷால் கப்பலின் அணு உலையை வடிவமைக்க அமெரிக்கா உதவி செய்ய முன்வந்துள்ளது.

கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே அணு சக்தியை சேர்க்க கப்பல் படை முடிவு செய்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அதன் பராமரிப்பு செலவு தான், இங்கிலாந்து தற்போது காட்டி வரும் ராணி எலிசபெத் ரக விமானம்தாங்கிகள் சுமார் 65000 டன் எடை உள்ளவை, ஆனாலும் அவை அணு சக்தியை பயன்படுத்தாமல் காஸ் டர்பைன் எஞ்சின்களையே பயன்படுத்துகிறது.

இந்தியாவின் விஷாலும் சுமார் 65000 டன் எடை வரை இருக்கும் என்றாலும், அதன் இயக்கு விசைக்கு மட்டுமல்லாது, விமானம் செலுத்தும் அமைப்பிற்கும் அதிகளவு சக்தி தேவை, அதனால் அணு சக்தியையே பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானத்தை கப்பலிலிருந்து செலுத்த அதி நவீன மின்காந்த அமைப்பு முறை பயன்படுத்தப்படவுள்ளது, உலகிலேயே அமெரிக்கா மட்டுமே இந்த செலுத்து முறையை பயன்படுத்தி வருகிறது, அதுவும் அதன் புதிய விமானம் தாங்கி கப்பலான போர்ட் ரகத்தில் மட்டுமே. இந்த நவீன செலுத்தும் அமைப்பை இந்தியாவிற்கு வழங்க ஜெனெரல் அட்டாமிக்ஸ் நிறுவனமும் அமெரிக்கா அரசும் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தன.

இந்த மின்காந்த விமானம் செலுத்தும் அமைப்பு மூலம் எடை குறைந்த ஆளில்லா விமானங்கள் முதல் அதிக எடை உள்ள F 35 போன்ற போர் விமானங்களை செலுத்த முடியும். இதன் மூலம், கப்பல் படையின் போர் விமானங்கள் அதிக தூரம் சென்று தாக்கவும், அதிக ஆயுதங்களை எடுத்து செல்லவும் முடியும். பொதுவாக அமெரிக்காவின் F 18 சூப்பர் ஹார்னெட், F 35 C மற்றும் பிரெஞ்சு நாட்டின் ரபேல் போர் விமானங்களும், E2D என்னும் பறக்கும் ராடார் விமானம், C2 என்னும் போக்குவரத்து விமானம் ஆகியவற்றையும் இதன் மூலம் செலுத்த முடியும்.

மேலும் கப்பலில் சுமார் 55 போர் விமானங்கள் இருக்குமாறு விமானம் பெரியதாக வடிவமைக்கப்படவுள்ளது, குறிப்பாக இரண்டு ஸ்குவார்டன் அளவு போர் விமானங்கள், அதாவது சுமார் 42 முதல் 50 போர் விமானங்கள், சுமார் நான்கு உதவி விமானங்கள், மேலும் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களையும் இதில் நிறுத்துமாறு வடிவமைக்கப்படவுள்ளது.

பொதுவாக பார்த்தல் பிரஞ்சு நாட்டின் சார்ல்ஸ் டி கல்லி-யை விட கொஞ்சம் பெரியதாகவும், அமெரிக்காவின் போர்ட் ரக கப்பலை விட சிறியதாகவும் இருக்கும்.

இனி அடுத்த கட்டமாக கப்பலை வடிவமைக்கும் திட்டத்தை அரசு அனுமதி அளித்ததும் துவங்கவுள்ளது கப்பல் படை.