1967- அறியாத உண்மைகள், சிக்கிம் நாட்டை காத்த இந்தியா

1967-ல் நடந்த ஒரு கடும் சண்டையில் சீன வீரர்களை கடுமையாக தாக்கிய இந்தியா, மேற்கொண்டு சிக்கிமை கைப்பற்றுவதற்கு நினைத்து கூட பார்க்க முடியாமல் செய்தது. இந்த சண்டை பற்றி அதிக தகவல்கள் இணையத்தில் இல்லை என்றாலும், நடந்த சண்டை பற்றி அங்கு பணியாற்றிய ஒரு ராணுவ அதிகாரி கொடுத்த தகவல் அடிப்படையில் இந்த தகவல்கள்.

1947 சுதந்திரத்திற்கு பின், சிக்கிம் நாட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கும் பணி இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது, 1959-இல் சீனாவிற்கு எதிரான திபெத் மக்களின் புரட்சியை சீன ராணுவம் முறியடித்தது, என்றாலும் பல திபெத்தியர்கள் சிக்கிம் நாட்டில் சென்று குடியேறினர், திபெத்தையும் சிக்கிம் நாட்டையும் இணைக்கும் இந்த வழிக்கு பெயர் தான் நாது லா. சர்வதேச நியதியின் படி இந்த வழியை பாதுகாக்கும் பணி இந்திய ராணுவத்திற்கே வழங்கப்பட்டிருந்தது. இந்திய ராணுவமும் அப்பணியை செய்து கொண்டிருந்தது.

1962-இல் இந்திய சீனப் போரின் போது, இந்த இடத்தையும் தாக்க சீனா முடிவு செய்திருந்தது, அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வழியை மூடிவிட்டது இந்தியா. அதனால் போரின் போது எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. போரில் வென்ற சீனா சிக்கிம் நாட்டை அபகரிக்க திட்டமிட்டது, ஆனாலும் அதை உடனடியாக நிறைவேற்றவில்லை.

சீனாவின் அடுத்த திட்டம், கண்டிப்பாக சிக்கிம் அல்லது அருணாச்சல் தான் என்று சர்வதேச உளவுத்துறை தகவல்கள் மூலம் இந்தியா தெரிந்து கொண்டது. இதன் மூலம் இந்த இரு இடங்களிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த துவங்கியது இந்தியா.

சிக்கிம் திபெத் எல்லையில் உள்ள, நாது லா, சோ லா, ஜெலீப் லா ஆகிய முக்கிய வழிகளை இந்திய ராணுவம் பாதுகாத்து வந்தது, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 14500 அடி உயரே அமைந்துள்ளது, இதற்கு நேர் எதிரே சீனாவும் தன் ராணுவத்தை நிறுத்தியிருந்தது. 1965-ம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் போது, நாது லா மற்றும் ஜெலீப் லா வழிகளை விட்டு விலகுமாறு சீனா எச்சரித்து கெடு விதித்திருந்தது. ஒரு சில காரணங்களால் ஜெலீப் லா வழியை பாதுகாத்த ராணுவம் அந்த இடத்தை விட்டு வெளியேறியது. வெளியேறிய அடுத்த நிமிடம் ஜெலீப் லா வழியை தன் வசம் கொண்டுவந்தது சீனா.

ஆனால் நாது லா வழியை விட்டு ராணுவத்தை வெளியேற்ற முடியாது என்று அப்பகுதிக்கான ராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனெரல் சகாத் சிங் மறுத்து விட்டார், மேலும் அப்பகுதியில் உள்ள வீரர்களை தொடர்ந்து அந்த இடத்தை காவல் காக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார். சகாத் சிங்கிற்கு உறுதுணையாக அப்பகுதியின் படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகஜீத் அரோரா மற்றும் கிழக்கு பிராந்திய படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாம் மானேக்ஷா ஆகியோர் இருந்தனர்.

கட்டளை அதிகாரி சகாத் சிங் அரசிடம் அறிக்கை தரும்போது, நாது லா பகுதியை விட்டுக் கொடுத்தால் சீனா அதை ஆக்கிரமிப்பதோடு, இந்தியாவை மிக எளிதாக தாக்க முடியும், நம் வீரர்களால் திருப்பி தாக்க கூட முடியாத நிலை ஏற்படும், மேலும் இது சர்வதேச எல்லை பகுதியில் சிக்கிம் பகுதிக்குள் உள்ளது, என்று விவரம் தெரிவித்தார்.

நாது லா பகுதியை விட்டு வெளியேற முடியாது என்று என்று அறிவித்ததும், சீனா சுமார் ஒரு பிரிகேட் அளவு வீரர்களை சிக்கிம் நாட்டிற்கு அருகே நகர்த்த துவங்கியது. அதோடு நாது லா பகுதிக்கு அருகே மிக பெரிய ஒலி பெருக்கிகளை அமைத்து இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு அறிவுறுத்தியது, இல்லை என்றால் மறுபடியும் ஒரு 1962-ஐ இந்தியா சந்திக்க வேண்டி வரும் என்றும், இந்திய வீரர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்றும், வீரர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு என்றும் தொடர்ந்து ஒலி பெருக்கி வாயிலாக அறிவித்து வந்தது. அதே நேரம் தொடர்ந்து எல்லை தாண்டி தாக்கியும் வந்தது.

1967 ஆகஸ்ட் மாதம் இப்பகுதியை காவல் காத்து வந்த ராணுவத்தின் 18-ம் ராஜபுத்திர வீரர்கள் இப்பகுதியை ராணுவத்தின் 2-ம் கிரனேடியர் பிரிவிற்கு கொடுத்தனர், இது ஒரு சுழற்சி முறை. 2-ம் கிரனேடியர் பிரிவிற்கு கமாண்டராக லெப்டினன்ட் கலோனல் ராய் சிங் இருந்தார். நாது லா பகுதியை காக்கும் பொறுப்பை தன் கீழ் உள்ள மேஜர் பிஷான் சிங்கிடம் இவர் ஒப்படைத்தார். அவருக்கு உறுதுணையாக இரண்டாம் நிலையில் கேப்டன் தாகர் இருந்தார்.

இவர்கள் கீழ் நாதுலா பகுதியோடு, காமெல்ஸ் பேக், தெற்கு சோல்டர், மத்திய பம்ப் மற்றும் செபு லா ஆகிய இடங்களும் இருந்தன. ஒவ்வொரு பகுதியும் ஒரு பிளாட்டூன் அளவு வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஒரு பிளாட்டூன் என்பது 32 வீரர்கள் மற்றும் இவர்களுக்கு தலைவராக ஒரு 2nd லெப்டினன்ட் இருப்பார். இப்படைகளுக்கான தலைமையகம் கோலே கார் என்னும் பகுதியிலும், படைகளுக்கான ஆர்டிலாரி ஷீரபதங் பகுதியிலும் இருந்தது.

நாது லா பகுதியிலும் சுமார் 32 வீரர்கள் இருந்தனர், 2-ம் கிரனேடியர் பிரிவில் இருந்த வீரர்கள் ஜம்மு காஷ்மீர் துப்பாக்கி படை பிரிவை சேர்ந்த வீரர்கள் ஆவர். நாது லா பகுதியில் இருந்த வீரர்கள், அப்பகுதிக்கு எதிரே இருந்த சீனர்கள் தங்கள் பதுங்கு இடங்களை புதிப்பதையும், மேலும் புதிய பங்கர்களை கட்ட ஆயத்தம் செய்வதையும் கண்டறிந்து தங்கள் தலைமைக்கு தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 13-ம் தேதி, செபு லா பகுதியில் இருந்த வீரர்கள், சீன வீரர்கள் சர்வதேச எல்லை தாண்டி சிக்கிம் பகுதிக்குள் நுழைந்து பள்ளங்கள் தோண்டி பதுங்கு குழி அமைக்க துவங்கியதை கண்டனர். சீன வீரர்களின் இந்த வேலையை தடுத்த இந்திய வீரர்கள் தோண்டிய பள்ளங்களை நிரப்பவும் சீன வீரர்களை நிர்பந்தித்தனர், பள்ளங்களை மூடி விட்டு தங்கள் பழைய இடத்திற்கே திரும்பினார் சீனர்கள்.

அதே நாள், தெற்கு சோல்டர் பகுதியில், சுமார் எட்டு புதிய ஒலி பெருக்கிகளை நிறுவினார்கள் சீனர்கள் , ஏற்கனவே இந்த பகுதியில் சுமார் 21 ஒலிபெருக்கிகள் இருந்தது. புதியவற்றுடன் சேர்ந்து அதிக சத்தம் வந்ததால் இந்தியாவும் ஒலி பெருக்கிகளை நிறுவ முடிவு செய்தது. அதே பகுதியில் இந்தியா சுமார் ஆறு மிகப்பெரிய ஒலி பெருக்கிகளை நிறுவியது.

பிரச்னையில் வீரியத்தை அறிந்த கட்டளை கமாண்டரும், படை தளபதியும் கூடி ஆலோசித்து அடுத்த முடிவிற்கு வந்தனர். அதாவது நாது லா பகுதியிலிருந்து சீனாவின் வடக்கு சோல்டர் வரை முள் வேலி அமைப்பது தான். ஆகஸ்ட் 20-ம் தியதி வேலையை ஆரம்பித்து ஒரே நாளில் முள் வேலி அமைத்தனர் வீரர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனர்கள் இதை நீக்கவும் நிர்ப்பந்தித்தது. ஆனால் இந்திய ராணுவம் மேலும் இரண்டு அடுக்குகள் முள் வேலி அமைக்க முடிவெடுத்து அடுத்த இரண்டு நாளில் வேலையை முடித்தது.

அடுத்த நாள், மதியம் 2 மணி அளவில் 75 சீன வீரர்கள் ஆயுதங்களுடன் நாது லா பகுதிக்கு முன்னேறி வருவதாக மேஜர் பிஷான் சிங்கிற்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த சீன வீரர்கள் குழு எல்லை பகுதிக்கு மிக அருகே வந்து ஒரு சில கம்யூனிச கருத்துகளை தொடர்ந்து சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தது. இந்திய வீரர்களும் ஆயுதங்களுடன் அவர்களுக்கு எதிரே நின்று கொண்டிருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் சீன வீரர்கள் குழு அந்த இடத்தை விட்டு சென்று விட்டது.

நாது லா பகுதியை ஆராய, செப்டம்பர் 1-ம் தேதி ராணுவ கட்டளை அதிகாரி சகாத் சிங், பகுதியின் படை தளபதி அரோரா ஆகியோர் சென்றனர். அன்று வழக்கத்திற்கு மாறாக மேகமூட்டம் அதிகமாக இருந்தது, நாது லா-விற்கு செல்லுமுன் அருகிலுள்ள மத்திய பம்ப் மற்றும் தெற்கு சோல்டர் பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து நாது லா வரும்போது தவறுதலாக சீன எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அங்கிருந்த சீன அதிகாரி ஓடி வந்து இது சீன இடம் என்று உரக்க கத்தினார். இரண்டு ஜெனரல்களும் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறி விட்டனர்.

இரண்டு முக்கிய ராணுவ படை தளபதிகள் சீன எல்லைக்குள் நுழைந்தது மிக பெரிய விஷயமாக சீனாவில் பேசப்பட்டது, தளபதிகளின் காலடித்தடமும் போட்டோ எடுக்கப்பட்டது.

மறு நாள் நாது லா பகுதிக்கு மீண்டும் வந்த கட்டளை அதிகாரி சகாத் சிங், அங்கிருந்த படை தலைவர் மேஜர் பிஷான் சிங்குடன் நிலைமையை கலந்தலாலோசித்தார், அதோடு நாது லா பகுதியிலிருந்து மத்திய பம்ப் பகுதி வரை தினமும் ரோந்து சொல்லவும் முடிவெடுக்கப்பட்டது.

மறு நாள் காலை, நாது லா பகுதி படை தலைவர் மேஜர் பிஷான் சிங்க் தனது தலைமையில் சுமார் 15 வீரர்களுடன் ரோந்து செல்ல துவங்கினார், மத்திய பம்ப் பகுதிக்கு மிக அருகே இவர்களை குறுக்கிட்டது சீனப் படை, இரண்டு நாள் முன்பு இந்திய ராணுவ ஜெனரல்கள் இதே இடத்தில வைத்து தான் சீன பகுதிக்கு சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. இருந்தாலும் எவ்வித சலசலப்புமின்றி ரோந்தை முடித்து மீண்டும் நாது லா சென்றது இந்திய ராணுவ குழு.

செப்டம்பர் 4-ம் தேதி மீண்டும் நாது லா சென்று நிலைமையை ஆராய்ந்த சகாத் சிங்க், அங்கிருந்த முள்வேலியின் பாதுகாப்பை வலுப்படுத்த முடிவெடுத்தார். மூன்று அடுக்கு முள்வேலிக்கு இடையே சுற்றப்பட்ட இரும்பு முள் வளையங்களை வைக்க உத்தரவிட்டார். இந்த வேலையை செய்ய மேஜர் பிஷான் சிங்க் மற்றும் அவரின் கீழ் உள்ள வீரர்களுடன் சுமார் ஒரு பிளாட்டூன் அளவுள்ள ராணுவத்தின் பொறியியல் பிரிவு மேஜர் சீமா தலைமையில் வந்தது.

செப்டம்பர் 5-ம் தேதி காலை 5 மணி அளவில் வேலை ஆரம்பமானது, இதை அப்பகுதிக்கான கமாண்டர் கலோனல் ராய் மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார். சில மணி நேரங்களிலேயே வந்த சீனப் படை கலோனல் ராயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, மேலும் பணியை நிறுத்துமாறும் நிர்ப்பந்தித்தது. இதனால் வேலை காலை 8 மணி அளவில் நிறுத்தப்பட்டது.

ஆனால் சீனர்களோ, இதே போன்ற பாதுகாப்பு முறைகளை தங்கள் பகுதியில் மும்முரமாக கட்டிக்கொண்டிருந்தனர்.

செப்டம்பர் 7-ம் தேதி இந்த பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது, பணியை தடுத்து நிறுத்த சுமார் 100- க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் வந்தனர், வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது, ஒரு சில இந்திய வீரர்கள் சீனர்களை கடுமையாக அடித்து உதைத்தனர். கைகலப்பை விரும்பாத சீன வீரர்கள் பின்வாங்கினர், பின் வாங்கியதும் கற்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது எறிந்தனர். இந்திய வீரர்களும் கற்களை கொண்டு சீனர்கள் மேல் வீசினர். இதனால் இந்திய தரப்பில் இரு வீரர்களுக்கும் சீன தரப்பில் பலருக்கும் கடும் காயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையால் வேலியை வலுப்படுத்தும் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டது.

வேலியை வலுப்படுத்தும் நோக்கில் உறுதியாக இருந்த கட்டளை அதிகாரி சகாத் சிங், தான் 12-ம் தேதி முதல் விடுப்பில் செல்லவுள்ளதால், அதற்கு முன் பணியை முடிக்க வேண்டும் என்று கூறினார். 10-ம் தேதி இரவு சங்கு ராணுவ தளத்தில் நடந்த கூட்டத்தில் இதை கூறி, மேலும் அதிகப்படியான வீரர்களை நாது லா பகுதிக்கு அனுப்பினார்.

ஒரு கம்பெனி அளவிலான கூடுதல் படை நாது லா-வுக்கு அனுப்பப்பட்டது, இதற்கு மேஜர் ஹர்பஜன் சிங் தலைமை தாங்கினார். ஒரு கம்பெனி என்பது சுமார் 90-120 வீர்கள் வரை இருக்கும், அதற்கு தலைவராக ஒரு மேஜர் அல்லது கேப்டன் இருப்பார். மேலும் வேலையை துரிதப்படுத்த ஒரு பிளட்டூன் பயோனீர் பொறியாளர்களும் அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் செப்டம்பர் 11-ம் தேதி காலை நாது லா வந்தனர். அன்று காலையே வேலை மீண்டும் தொடங்கப்பட்டது.

செப்டம்பர் 11 காலை வேலை துவங்கியது, உடனடியாக ஆயுதங்களுடன் வந்த சீன வீரர்கள் வேலை செய்து கொண்டிருந்த வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேலையை நிறுத்த உத்தரவிட்டனர். சீன வீரர்கள் அதிகாரிகளுடன் சீன அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர். நிலைமை கை மீறியதை அறிந்த மேஜர் பிஷான் சிங், கட்டளை அதிகாரி ஜெனரல் சகாத்தை தொடர்பு கொண்டார்.

எக்காரணத்தைக் கொண்டும் மேஜர் பிஷான் சிங் பங்கரை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினார் ஜெனரல் சகாத், மேலும் பங்கருக்குள் பிரிகேட் கமாண்டர் பிரிகேடியர் பக்ஷியும் இருந்தார்.

ஒருகட்டத்தில் தாங்காத கலோனல் ராய், வெளியே வந்து சீன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருபக்கமும் கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சீன வீரர்கள் திடீரென சுட துவங்கினர். வேலி அமைக்கும் பணியில் இருந்த வீரர்கள் சிலர் உயிரிழந்தார், ஒரு குண்டு கலோனல் ராய் நெஞ்சில் பாய்ந்தது, தங்களது கமாண்டர் சுடப்பட்டு கீழே சாய்வதை பார்த்த வீரர்கள் ஆக்ரோஷத்துடன் சீன வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். இந்த அதிரடியை கேப்டன் தாகர் தலைமையில் வீரர்கள் தங்கள் பங்கரிலிருந்து நடத்தினர்.

சீனர்களும் தங்கள் பங்கரிலிருந்து மெஷின் கன் மூலம் சுட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு நடுவில் வேலி அமைக்கும் பணியில் மேஜர் ஹர்பஜன் சிங்க் மற்றும் அவர் கீழ் உள்ள வீரர்கள், வேலை அமைத்துக்கொண்டிருந்த பயோனீர் பொறியாளர்கள் அனைவரும் நடுவில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் மாட்டிக்கொண்டனர்.

நடுவில் மாட்டிய வீரர்கள் பலர் சீன குண்டுகளால் கொல்லப்பட்டனர், வேறு வழி இல்லாததால் மேஜர் ஹர்பஜன் சிங்க் தன் வீரர்களுக்கு சீன பங்கர்கள் நோக்கி முன்னேறி அவர்களை தாக்க உத்தரவிட்டார். பங்கரை நோக்கி முன்னேறிய வீரர்கள் பலர் உயிரிழந்தனர், இதில் மேஜர் ஹர்பஜன் சிங், கேப்டன் தாகர் ஆகியோரும் அடக்கம்.

நிலைமையை அறிந்த கட்டளை அதிகாரி சகாத் சிங், ஆர்டில்லரி துப்பாக்கி கொண்டு சீனர்களை தாக்குமாறு உத்தரவிட்டார். இந்திய ஆர்டில்லரிகள் சீன பகுதியை கடுமையாக தாக்கியது, ஜெனரல் சகாத் முன்னெச்சரிக்கையாக நிறுவிய இந்தியா ஆர்டிலரி துப்பாக்கிகள் சீன பங்கர்களை தாக்கி அழித்தது. சீனாவும் தனது ஆர்டில்லரி மூலம் தாக்கியது என்றாலும், அவற்றின் குண்டுகள் இந்திய எல்லையில் விழவில்லை.

தொடர் ஆர்டில்லரி உதவியால் இந்திய வீரர்கள் சீன நிலைகள் மீது நேர்த்தியான தாக்குதலை தொடுத்தனர். இது எல்லையில் சோ லா பகுதியிலும் நடந்தது.

ஆர்டில்லரிகளின் அதிரடியால் நிலை குலைந்த சீனா, தாக்குதலை நிறுத்துமாறும், அப்படி இல்லை என்றால் சீனா விமானப் படையை களத்தில் இறக்கவும், மேலும் ஒரு மிகப் பெரிய அளவிலான போரை சீனா நடத்தவும் தயார் என்று கூறியது.

மேலும் நிலைமையை கடினமாக்க விரும்பாத இந்தியா ஆர்டில்லரி தாக்குதலை நிறுத்துமாறு ஜெனெரல் சகாத்தை கேட்டுக்கொண்டது.

ஒரு வார சண்டையின் முடிவில் சுமார் 300-கும் மேற்பட்ட வீரர்களை சீனா இழந்திருந்தது, இந்தியா சுமார் 100-கும் குறைவான வீரர்களை இழந்தது. அதோடு சீனாவின் சிக்கிமை கைப்பற்றும் கனவும் அகன்றது.

இந்த சண்டையில், இந்தியாவின் சிக்னல் பிரிவு வீரர்களின் அளப்பரியது, சோ லா, நாது லா முதல் அங்கிருந்த அனைத்து ராணுவ காவல் பங்கர்களையும் ஒன்றோடொன்று தகவல் தொடர்பில் இணைத்திருந்தார் இவர்கள். இதன் மூலம் சீன வீரர்களின் நகர்வு துல்லியமாக கணிக்கப்பட்டு ஆர்டில்லரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவை துல்லியமாக தாக்கி எதிரியை நிலை குலைய செய்தது.

இப்போரின் போது சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்திற்கு சீனா ஆளானாலும், இந்திய வீரர்கள் தான் அவர்களை தாக்கியதாக கூறி, அதற்கு ஆதாரமாக எல்லை தாண்டி சென்று உயிர் நீர்த்த மேஜர் ஹர்பஜன் சிங், கேப்டன் தாகர் ஆகியோரின் உடல்களை சர்வதேச சமூகத்திற்கு காட்டியது.

சீனா நடத்திய 1962 போர் அவர்களுக்கு சாதகமாகவும், 1967-இல் ஆரம்பித்த சண்டை இந்தியாவுக்கு சாதகமாகவும், 1987-இல் அருணாச்சல் அருகே நடந்த படைக்குவிப்பு இந்தியாவுக்கு சாதகமாகவும் அமைந்தது.