எல்லை தாண்டிய தாக்குதலுக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திய ராணுவம்

2013-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் எல்லை தாண்டிய ராணுவம், இம்முறை மிகப் பெரிய தாக்குதலை அரங்கேற்றி மாபெரும் வெற்றியுடன் திரும்பி வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உளவுத் துறை மட்டுமின்றி இஸ்ரோவும் உதவி செய்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அடுத்த நொடி மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக சுமார் 5 பட்டாலியன் வீரர்களை எல்லை அருகே தயாராக வைத்திருந்தது ராணுவம்.

இந்திய உளவுத் துறை தன் கட்டுப்பாட்டில் மாபெரும் நவீன உளவு விமானங்களை வைத்துள்ளது, இவை பெரும்பாலும் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் பிரெஞ்சு நாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவை. இந்த விமானங்கள் எதிரி ராடார்களை செயலிழக்க செய்வது, எதிரிகளின் தொலை தொடர்பை துண்டிப்பது அல்லது ஒட்டுக் கேட்பது, போன்ற வேலைகளை வானில் பறந்த படியே செய்யக் கூடியது. அதோடு இந்திய எல்லைக்குள் இருந்த படியே பாகிஸ்தானின் சுமார் 100 கிலோமீட்டர் வரை அதன் சிக்னல்களை இடை மறிக்கவோ துண்டிக்கவோ செய்யும்

தற்போது நடந்த தாக்குதலிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் பாரா கமாண்டோ வீரர்கள் ஏழு குழுக்களாக பிரிந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து ஏழு தீவிரவாத முகாம்களை குறிவைத்தனர். சரியான சமயம் பார்த்து அனைத்துக் குழுவும் ஒரே நேரத்தில் தாக்கினர். எதிரிகளால் அவர்களது ஆட்களை தொடர்பு கொள்ளவும் முடியாது, அதே நேரம் இந்திய வீரர்களுக்கு தகவல்கள் மிக பாதுகாப்பாக இந்த விமானங்கள் மூலம் சென்று கொண்டிருந்தது.

கடும் இரவில் எதிரியின் இடத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர்கள் நடப்பது ஒன்றும் அவ்வளவு எளிது கிடையாது. உலகிலேயே அதிகம் கண்காணிக்கப்படும் எல்லைகளில் முதலில் இருப்பது வட தென் கொரிய எல்லை, இரண்டாவது இந்தியா பாகிஸ்தான் தான். அது மட்டுமல்லாது மலைகள் காடுகள் நிறைந்த எல்லை, பாகிஸ்தானின் பல பகுதிகள் கண்ணிவெடியால் பாதுகாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு நடந்து சென்று தாக்கி விட்டு பின்பு நடந்தே திரும்பி வருவது அவ்வளவு எளிது இல்லை, அதுவும் ஏழு வித்தியாசமான இடங்கள். இங்கு உதவியது இஸ்ரோ, ராணுவ மற்றும் உளவு பயன்பாட்டிற்கு மட்டுமே பல செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது இஸ்ரோ. கடும் இரவு பனி அல்லது வேறு எந்த சூழ்நிலையிலும் மிக துல்லியமாக படமெடுக்கக் கூடியவை இந்த செயற்கைக்கோள்கள். அதனால் போகிற வழி வருகிற வழி நன்கு திட்டமிடப்பட்டு செயற்கைக் கோள் மூலம் உறுதி செய்யப்பட்டு பின்னர் அரங்கேற்றப்பட்டுள்ளது.

வீரர்களும் நவீன தொடர்பு கருவிகள், இருளில் பார்க்கும் நவீன கருவிகள், மணிக்கட்டில் வைக்கப்படும் சிறிய கணினிகள் என்று நவீனமாக சென்று வந்துள்ளனர். இந்த உதவிகள் மூலமே ராணுவத்தால் மிக நேர்த்தியாக இந்த திட்டத்தை முடிக்க முடிந்தது.

வெறும் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, வீரர்களின் திறமையுமே, நவீன தொழிநுட்பத்தை கையாள்வது, இருளில் எந்த சத்தமும் இல்லாமல் நடப்பது, இருளில் குறி பார்த்து நேர்த்தியாக சுடுவது என்று வீரர்களும் மேற்கு மற்றும் அமெரிக்கா வீரர்கள் அளவுக்கு முன்னேறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இது போன்ற சிறப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில், போலந்து நாட்டின் குரோம், இஸ்ரேலின் ஷயாதத், அமெரிக்காவின் சீல் மற்றும் இங்கிலாந்தின் SAS ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இந்த வரிசையில் ராணுவத்தின் பாரா கமாண்டோவும் இணைந்துள்ளது.