தாக்குதலுக்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாக திரும்புகிறது யூரி

மூன்று பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரால் சூழப்பட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டின் மிக அருகே இருக்கும் ஒரு சிறிய பகுதி தான் யூரி, தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு இரு பக்கமும் நடந்த சம்பவங்கள் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தினாலும், நிலைமை தற்போது அமைதியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். போர் நடந்தால் முதலில் தாக்கப்படும் சில பகுதிகளில் யூரி தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு இயல்பு நிலை திரும்பி வருவது அமைதியையே காட்டுகிறது.

சாதாரண கடைகள், வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, நேற்று முதல் பொது மக்கள் வீதிகளில் வரத்துவங்கியுள்ளனர், இருப்பினும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற ஒரு வித பயம் இருப்பதாகவும், மக்கள் இது குறித்து மற்றவர்களிடம் கேட்பதாகவும் பொதுமக்கள் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தனர்.

யூரி பள்ளத்தாக்கு தீவிரவாதிகளுக்கு எளிதில் ஊடுருவும் ஒரு இடமாக உள்ளது, அதற்கு அங்கு உள்ள நிலப்பரப்பே காரணம், இருப்பினும் 2003-க்கு பிறகு இங்கு பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் நடந்தது கிடையாது, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எல்லைப்பகுதி தொடர் கண்காணிப்பில் உள்ளது, இது யூரியின் பாதுகாப்பை உறுதி செய்துவருகிறது.

யூரி பகுதியில் பொது மக்கள் பதுங்க அதிக அளவில் நிலத்தடி பதுங்கு குழிகள் முன்பு இருந்தது, இதன் மூலம் பொது மக்கள் தங்கள் உயிர்களை பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும், ஆனால் இவை அனைத்துமே 2005-ல் நடந்த மிகப் பெரிய பூகம்பத்தால் அழிந்து விட்டது.

அரசு பூகம்பத்தால் அழிந்த வீடுகளை மீண்டும் கட்டிக் கொடுத்தது, ஆனால் பதுங்கு நிலைகளை மீண்டும் கட்டவில்லை, இதனால் போர் ஏற்பட்டால் பதுங்க கூட முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் பொது மக்கள் உயிர் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் யூரியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். அதனால் போர் நடக்கக் கூடாது என்று இறைவனை வேண்டுவதாகவும் கூறினார்.

யூரி நிலவரத்தை பார்க்கும் போது, இந்திய தரப்பிலிருந்து இதுவரை திருப்பி தாக்க எந்த வித திட்டமும் தற்போது இல்லை என்றே தெரிகிறது.