கப்பல் படையின் ஸ்கார்பியன் நீர்மூழ்கியின் மொத்த ரகசியமும் கசிந்தது

கப்பல் படையின் மிகப் பெரும் இழப்பாக, பிரான்ஸ் நாடு உதவியுடன் தற்போது கட்டப்பட்டு வரும் அதி நவீன ஸ்கார்ப்பியன் நீர் மூழ்கியின் மொத்த ரகசியங்களும், இணையத்தில் வெளிவந்ததால் அதன் மொத்த திறமையும் வீணாகியுள்ளது, இந்த கசிவிற்கு காரணம் இந்த கப்பலை கட்டும் பிரெஞ்சு நிறுவனமான DCNS ஆகும்.

இந்த கசிவு மொத்தம் 22,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கப்பலின் மொத்த தகவல்களையும் உள்ளடக்கிய குறிப்பேடு ஆகும். இந்த குறிப்பேட்டில் தான், கப்பலின் சத்தம், அது தகவல்களை பரிமாறும் அலை நீளம், ஆயுதங்களை கையாளும் அலை நீளம், அதன் மூழ்கும் ஆழம், எதிரி கப்பல்களை கண்டறியும் சோனாரின் அலை நீளம் ஆகிவை அடங்கும்.

இந்த தகவல்கள் எதிரியிடம் இருந்தால், எதிரியால் நீர்மூழ்கிகளை சுலபமாக கண்டுபிடிக்கவும், தாக்கி அழிக்கவும் முடியும், அதே நேரம் எவ்வளவு திறமையான அதி நவீன தொழில் நுட்பம் இருந்தாலும், தகவல் கசிந்த இந்த கப்பலால் போர்க்களத்தில் ஒன்றுமே செய்ய இயலாது.

மேற்கத்திய ஆராய்ச்சியாளர் கூறும் போது, இந்த கசிவினால் இந்தியாவின் $4 பில்லியன் மதிப்புள்ள இந்த நவீன கப்பல்களால் எதிரி கப்பல்களான சீன மற்றும் பாகிஸ்தானிய கப்பல்களை ஒன்றுமே செய்ய முடியாது, அடுத்த 30 வருடங்கள் வரை படையின் இருக்கும் இந்த கப்பலால் இந்தியாவிற்கு எவ்வித பயனும் இல்லை, மேலும் இது போர் சமயங்களில் பணியில் இருப்பது இந்தியாவிற்கு தான் மிகுந்த ஆபத்து என்றும் கூறினார்.

கசிவு குறித்து அமெரிக்கா கூறுகையில், ஆஸ்திரேலிய கப்பல் படைக்கு DCNS தான் சுமார் 12 நீர்மூழ்கிகளை கட்டவுள்ளது, ஆனால் அந்த கப்பல்களில் அமெரிக்காவின் அதி நவீன போர் கருவிகள் இணைக்கப்படவுள்ளது, இணையத்தில் வெளிவந்த தகவல்களால் DCNS மீதிருந்த நம்பிக்கை போய் விட்டதாகவும், அதனால் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பு தெரிவிக்கையில், இந்த தகவல் கசிவிற்கு DCNS தான் காரணம் என்று தெரிகிறது, ஆகவே DCNS -உடன் சேர்ந்து புதிய கப்பல் கட்டும் முடிவு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக கூறியது. மேலும் இது குறித்து ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்திய தரப்பு தெரிவிக்கும் போது, இது குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் கப்பல் படை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் பிரான்ஸ் நாட்டுடன் இது குறித்து பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கசிவிற்கு காரணமாக இருந்த DCNS கூறும்போது, நிறுவனம் முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளதாக கூறியுயள்ளது.

இந்த நீர்மூழ்கி குறித்த ரகசியங்களை பிரான்ஸ் தரப்பு கவனக்குறைவாக கையாண்டதாகவும், இந்த தகவல்களை தேவை இல்லாமல் பல நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும், மேலும் பாதுகாப்பில்லாத சாதாரண மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் ஆஸ்திரேலிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்கார்பியன் நீர்மூழ்கியின் இந்த தகவல்கள் மட்டுமன்றி, சிலி மற்றும் ரஷ்யா நாட்டிற்கு கட்டப்படவுள்ள கப்பல்கள் குறித்த தகவல்களும் கசிந்த அந்த மின்னஞ்சலில் உள்ளது. இருப்பினும் அதிகபட்ச தகவல்கள் இந்திய ஸ்கார்பியன் நீர்மூழ்கி குறித்தே உள்ளது. சாதாரண ஸ்கார்பியன் நீர்மூழ்கியிலிருந்து கொஞ்சம் மாறுபாடுடன் நவீன கருவிகளை புகுத்தி இந்த நீர்மூழ்கியை DCNS நிறுவனம் மும்பை கப்பல் கட்டும் தளத்தில் கட்டி வருகிறது.

இதே ஸ்கார்பியன் நீர்மூழ்கிகளை சிலி, மலேசியா மற்றும் பிரேசில் நாடுகளும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவின் மொத்த பாதுகாப்புமே கடும் பிரச்னையில் உள்ளது, ரஷ்யாவுடன் போடப்பட்ட பல ஒப்பந்தங்கள் குறித்து சீனா மிக நன்கு அறியும், குறிப்பாக விமானப்படையின் முதுகெலும்பான சுகோய் விமானம் குறித்து சீனா நன்கு அறியும், அது மட்டுமல்லாமல் ரஷ்யா உதவியால் அதே விமானங்களை சீனா சொந்தமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாகவே, இந்தியா மேற்கத்திய மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் ஆயுத ஒப்பந்தங்களை போட்டு வருகிறது. அந்த நாடுகள் நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு விற்பது கிடையாது, மேலும் தகவல்களையும் பிற நாடுகளுக்கு கொடுக்காது.

ஆனால் இந்த கசிவு கப்பல் படையை மிகுந்த சிக்கலில் உட்படுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டுடன் ஆயுத தளவாடங்கள் குறித்த ஒப்பந்தங்களை தொடர வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, இதனால் ரபேல் போர் விமான ஒப்பந்தம் மற்றும் மைத்ரி ஏவுகணை ஒப்பந்தம் ஆகிவை நிறுத்தப்படும் என்றும் தெரிகிறது.