விமானப்படையின் வரலாறை பிரதிபலிக்கும் புதிய பூங்கா, தலைநகர் டெல்லியில் அமைக்க அரசு முடிவு

இந்திய விமானப் படையின் சரித்திரத்தை பறை சாற்றும் விதமாக அதன் செயல்பாடுகள், வரலாறு, விமானப் படை பயன்படுத்தும் தளவாடங்கள், ஆயுதங்கள், விமானங்கள், போரில் பெற்ற வெற்றிகள், எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய 43 ஏக்கர் பரப்பில் மிகப் பெரிய பூங்காவை அமைக்க பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது, நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளில் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய பூங்கா டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் அமையவுள்ளது, திறந்த வெளியில் மிகப் பெரிய சரக்கு விமானங்களும், போர் விமானங்களும் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. மேலும் பூங்காவில் அமையவுள்ள கட்டடத்தில் விமானப்படையின் ஆயுதங்கள் போர் பற்றிய விரிவான விளக்கங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இந்த பூங்கா விமானப்படையின் பெருமையை கூறுவதோடு மட்டுமல்லாமல், இந்திய மக்களுக்கு விமானப்படையின் பணி குறித்த ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும், அதோடு டெல்லியில் இது முக்கிய ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பூங்காவில் குழந்தைகளுக்கான சிறப்பு இடமும் உள்ளது, இதில் சிறுவர்கள் போர் விமானங்களின் இருக்கையில் அமரவும், அதன் கட்டுப்பாடுகளை தொட்டு பார்க்கவும் முடியும்.

பூங்காவினுள்ளே ஒரு சிறிய அரங்கமும் அமைக்கப்படவுள்ளது, அதில் விமானப்படையின் சரித்திரம் மற்றும் பழைய விமானங்களின் காணொளி ஆகியவை காட்டப்படும்.

இந்த பூங்காவில், போர் அல்லாத சமயத்தில் பேரிடர்களில் விமானப்படை எவ்வாறு உதவியுள்ளது என்பதையும் காண முடியும், குறிப்பாக பெருவெள்ளம் பூகம்பம் போன்ற நேரங்களில் விமானப்படை எவ்வாறு உதவியுள்ளது என்பது குறித்தும் இங்கு காண்பிக்கப்படும்.

டெல்லிக்கு அருகில் பல்லம் விமான தளத்திற்கு பக்கத்தில் விமானப்படையின் பூங்கா ஏற்கனவே உள்ளது, 1967-இல் அமைக்கப்பட்ட இந்த பூங்காவிற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் 1932 முதல் இன்று வரை விமானப்படை தேசத்திற்கு ஆற்றியுள்ள பணிகள், பழைய விமானங்கள் ஆகியவையும் உள்ளன. இடப்பற்றாக்குறை காரணமாக அங்கு அதிக அளவு தளவாடங்களை வைக்க இயலாது, அதோடு அதிகப்படியான சுற்றுலா பயணிகளையும் சமாளிப்பது கடினம் , மேலும் அது விமான தளத்தின் அருகில் உள்ளது, எனவே தான் இந்த குறைகளை களைய புதிய பூங்காவை அமைக்கவுள்ளது பாதுகாப்புத் துறை.