ரஷ்யாவும் சீனாவும் இணைந்து அணு ஆயுத ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகளை தயாரிக்க திட்டம்

உலகின் இரு மாபெரும் கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் இணைந்து புதிய அதி நவீன அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா ஊடகங்கள் தெரிவிக்கின்றன, இவை ரஷ்யா மற்றும் சீனாவை அமெரிக்கா மற்றும் இந்திய ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது, சீனா ஏற்கனவே ரஷ்யா தயாரிப்பான S 300 ஏவுகணைகளை இந்திய எல்லையோரம் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இஸ்ரேல் நாட்டு உதவியுடன் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது, அதன் முதல் கட்டமாக கப்பல் படையில் அதி நவீன பாரக் ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளது, தற்போது இரண்டாம் கட்டமாக விமானப்படைக்கு இந்த ஏவுகணைகளை கொடுக்க சோதனை செய்யப்பட்டு வருகிறது, இந்த ஏவுகணைகள் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரியின் அணு ஆயுத ஏவுகணைகளை தவிர அனைத்தையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

இவற்றை இந்திய எல்லைப்பகுதிகளில் நிலை நிறுத்தி சீனாவின் போர் விமானங்கள் மற்றும் அதன் அபரிமிதமான குரூஸ் ரக ஏவுகணைகளை நடுவானிலேயே தாக்கி அழிக்க முடியும். அணு ஆயுதங்களை சுமந்து வரும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மிக கனமானவை என்பதால் அவற்றை இதனால் அழிப்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் இஸ்ரேல் நாட்டு உதவியுடன் இந்தியா சொந்தமாக அணு ஆயுத ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகளை PAD & AAD என்ற பெயரில் தயாரித்து சோதனை செய்து வருகிறது.

சீனாவிடம் அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளது, அவையும் பாரக் ஏவுகணை போன்று அதிக செயல் திறன் வாய்ந்தது, இந்த ஏவுகணைகளை சீனாவிற்கு ரஷ்யா வழங்கியுள்ளது. ரஷ்யா தான் தயாரிக்கும் எந்த நவீன ஆயுதங்களையும் முதலில் தனது முதல் நட்பு நாடான சீனாவிற்கு தான் வழங்கும். அதற்கு சான்றாக முன்பு வழங்கிய S 300 ஏவுகணை, தற்போது வழங்கவுள்ள S400 ஏவுகணை, மற்றும் தற்போது பேச்சு வடிவில் இருக்கும் அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு ஏவுகணை.

சீனா இந்த ஏவுகணைகளை இந்திய எல்லையோரம் நிலை நிறுத்தியுள்ளது, இதன் மூலம் இந்திய போர் விமானங்களை எளிதில் தாக்க முடியும், அதோடு போர் வரும்போது சீனாவால் இந்திய எல்லை ஓரம் உள்ள வான் பரப்பையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இவை அனைத்தையும் சீனாவிற்கு வழங்கியது ரஷ்யா தான். இந்தியா இது போன்ற ஏவுகணைகளை ரஷ்யாவிடம் கேட்ட போது அதிக விலை மற்றும் தரம் குறைந்த மாதிரியை தர முன்வந்தது, அதனால் இந்தியா இவற்றை வாங்க மறுத்து விட்டது.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென் கொரியா அமெரிக்காவிடம் உதவி கோரியது, அமெரிக்கா அதற்காக அதி நவீன அணு ஆயுதங்களை நடுவானிலேயே அழிக்கும் THAAD எனப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணையை தென் கொரியாவில் நிலை நிறுத்தியுள்ளது. அது வட கொரியா மட்டுமன்றி ரஷ்ய சீன ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க வல்லது. அதோடு ஐரோப்பாவிலும் ரஷ்ய அணு ஆயுத ஏவுகணைகளை வானிலே தாக்கி அழிக்க அமெரிக்கா PAC, MEADS போன்ற நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் சீன, ரஷ்ய, வட கொரிய அணு ஆயுத ஏவுகணைகளிலிருந்து கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பாதுகாக்கப்படும்.

இதற்கு இணையாக இந்திய, அமெரிக்க அணு ஆயுத ஏவுகணைகளை வானிலே தாக்கி அழிக்கவே சீனாவுடன் ரஷ்யா கைகோர்த்துள்ளது, ஊக வடிவில் இருந்த இந்த பேச்சுவார்த்தைகள் ரஷ்ய ஊடக செய்திக்கு பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு S 500 என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் தெரிகிறது.