ராணுவத்தின் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நவீனப்படுத்த புஞ்ச் லாயிட் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம்

சுமார் 670 கோடி ரூபாய் செலவில் ராணுவத்தில் உள்ள பழைய Zu 23 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை இந்தியாவின் தனியார் நிறுவனமான புஞ்ச் லாயிட் மூலம் நவீனப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது, இதற்கான ஆரம்பகட்ட ஒப்புதலை அரசு ஏற்கனவே வழங்கிவிட்டது, இதற்கான இறுதி ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்து கையெழுத்திடவும் அரசு முன்வந்துள்ளது.

இந்திய ராணுவம் 1970-களில் சோவியத் நாட்டிடமிருந்து எண்ணூறுக்கும் மேற்பட்ட இரட்டை குழல் 23mm விட்டம் கொண்ட வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொள்முதல் செய்தது, இவை தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதில் சுமார் ஐநூறு துப்பாக்கிகளை ராணுவம் தற்போதும் பயன்படுத்தி வருகிறது, அவற்றில் நவீன கணினிகள், தானியங்கி கட்டுப்படுத்தும் அமைப்பும், தேடும் மற்றும் தொடரும் ராடார்கள் ஆகியவற்றை சேர்த்து நவீனப்படுத்த ராணுவம் முடிவு செய்தது. இதன் மூலம் வீரர்கள் எளிதில் சுடவும், இலக்கை சரியாக குறிவைக்கவும் முடியும், இதன் மூலம் இதன் துல்லியத்தன்மையை கணிசமாக அதிகரிக்கும், முன்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த அமைப்பு இனி தானியங்கி கணினியால் கட்டுப்படுத்தப்படும்.

இதற்கான ஒப்பந்தத்தை ராணுவம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டது, இந்தியாவின் முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டமிட்டன, ஆனாலும் தனியார் நிறுவனமான புஞ்ச் லாயிட் சுலோவோக்கியா நாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த ஒப்பந்தத்தில் போட்டியிட்டு முன்னிலை வகித்து வருகிறது, மேலும் அதோடு போட்டியிட்ட டாட்டா, L&T மற்றும் ஆல்பா சிஸ்டம்ஸ் ஆகிவையை முதலிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது, இதனால் புஞ்ச் லாயிட் நிறுவனத்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, தற்போது அரசின் அனுமதி மற்றும் ஒப்பந்தத்திற்காக அது காத்திருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் சுலோவோக்கியா நாட்டு தயாரிப்பில் உருவான கணினி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் சேர்க்கப்படவுள்ளது, இந்த திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தான முதல் நான்கு வருடத்திற்குள் அனைத்து வேலைகளையும் முடித்து ராணுவத்திற்கு சுமார் 468 துப்பாக்கிகளையும் புஞ்ச் லாயிட் வழங்கும், அதோடு இதன் பராமரிப்பு பணிகளை அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு புஞ்ச லாயிட் நிறுவனம் மேற்கொள்ளும். நவீனப்படுத்தப்படும் இந்த வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் எந்த சூழ்நிலையிலும் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் செயல்படவல்லது.

இந்த துப்பாக்கிகள் நீண்ட காலத்திற்கு முன்பே நவீனப்படுத்தியிருக்கப்பட வேண்டியவை என்றும், நவீனப்படுத்தலின் மூலம் துப்பாக்கிகளின் தாக்கும் திறன் அதிகரிப்பதோடு, எடை அதிகமான அதிக சேதத்தை விளைவிக்கும் குண்டுகளையும் பயன்படுத்த முடியும் என்று முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் தெரிவித்தார்.

வான் பாதுகாப்பு துப்பாக்கி நவீனப்படுத்தலின் அடுத்த கட்டமான சுவீடன் தயாரிப்பு L 70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளையும் இது போல தானியங்கி அமைப்பு மூலம் கட்டுப்படுத்தும் திட்டமும் விரைவில் கையெழுத்தாகவுள்ளது, அதோடு சுமார் 18,000 கோடி ருபாய் செலவில் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு துப்பாக்கி கொள்முதல் திட்டமும் கிடப்பில் உள்ளது, இது இரண்டிலும் புஞ்ச லாயிட் நிறுவனம் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.