பத்து நீர்மூழ்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களை நவீனப்படுத்த $294 மில்லியன் செலவிடுகிறது இந்தியா

இந்திய கப்பல் படை 1980-களில் சோவியத் நாட்டிடமிருந்து பத்து நீர்மூழ்கிகளை தேடி கண்டுபிடித்து அழிக்கும் ஹெலிகாப்டர்களை வாங்கியது, இவை போர்க்கப்பலிலிருந்து செலுத்தப்பட்டு அருகில் உள்ள நீர்ப்பரப்பின் ஆழத்தில் உள்ள நீர்மூழ்கிகளை கண்டுபிடித்து, தாக்கவும் செய்யும், ஆனால் போதிய உதிரிபாகங்கள் மற்றும் தொடர் பிரச்னை காரணமாக இந்திய கப்பல்படை இவற்றை பயன்படுத்தவே இல்லை, கடைசியாக நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட தகவல் படி நான்கு ஹெலிகாப்டர்கள் பறக்க தகுதியுடையவை என்றும், மற்றவை அதை விட மோசமான நிலையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் படை சார்பில் இந்த ஹெலிகாப்டர்களை பழுது நீக்கவும், நவீனப்படுத்தவும் அரசிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது, கப்பல் படையின் இந்த கோரிக்கையை கடந்த வருடம் பாதுகாப்பு கொள்முதல் கூட்டம் அங்கீகரித்தது, ஆனாலும் ஒப்பந்தம் இப்போது தான் கையெழுத்தாகியுள்ளது, மேலும் நவீனப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் 2020 வாக்கிலேயே கப்பல் படைக்கு கிடைக்கும். இதற்காக அதிகமான தொகை செலவிடப்படவுள்ளது, சுமார் $294 மில்லியன்கள் செலவில் இரு பகுதிகளாக நவீனப்படுத்தப்படவுள்ளது,

இந்த தொகை மிக அதிகமாக இருப்பினும், கப்பல் படைக்கு தேவையான ஒன்றாக உள்ளது, மேலும் கப்பல்படைக்கு சுமார் 12 அதி நவீன நீர்மூழ்கி அழிக்கும் ஹெலிகாப்டரான S 70B -யை அமெரிக்காவிடமிருந்து வாங்க திட்டமிட்டுள்ளது, ஒரு புதிய S 70B வாங்குவதற்கு சுமார் $40 மில்லியனுக்கும் குறைவாகவே ஆகும், ஆனால் ஒரு Ka 28 ஹெலிகாப்டரை நவீனப்படுத்த அரசு சுமார் $30 மில்லியன்கள் செலவிடுவதும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

இந்த $294 மில்லியன் தொகையில், ஆறு Ka 28 ஹெலிகாப்டர்கள் மொத்தமாக மாறுதல் செய்யப்பட்டு இத்தாலி நாட்டின் பின்மெக்கனியா நிறுவனத்தின் அதி நவீன ராடார் மற்றும் கட்டுப்பாடு அமைப்புகள் சேர்க்கப்படவுள்ளது, மீதம் நான்கு ஹெலிகாப்டர்களில் வெறும் என்ஜின் மற்றும் உதிரிபாகங்களே நவீனப்படுத்தப்படவுள்ளது, இந்த நவீனப்படுத்தும் பணி முதல்கட்டமாக ரஷ்யாவிலும் இரண்டாம் கட்டம் இந்தியாவிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்மெக்கனியா நிறுவனம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால் ( விஐபி ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்பதால் தடை ), அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முக்கியமான ராடார் மற்றும் கணினிகளை ரஷ்யா வாங்கி இந்த ஹெலிகாப்டர்களில் நிறுவும். இந்த பணிகள் இந்தியாவில் வைத்தே நடைபெறும், ஆனால் ஹெலிகாப்டரின் அடிப்படை அமைப்பு ரஷ்யாவில் வைத்தே நவீனப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் சேர்க்கப்படும் முக்கியமான ராடார் மற்றும் கணினிகளை, பின்மெக்கனியா நிறுவனத்தின் துணை நிறுவனமான செலக்ஸ் தயாரித்து வழங்கவுள்ளது, ஓஸ்ப்ரே என்னும் பெயர் கொண்ட அதி நவீன ராடார் இதில் பொருத்தப்படவுள்ளது, இது 360 டிகிரி கோணம் வரை திரும்பி நீரை ஊடுருவி பார்க்கும் தன்மை கொண்டது, மேலும் இதன் அலை நீளத்தை குறுக்கிடும் வாய்ப்பும் மிகக் குறைவு, இது உலகின் முதல் எடை குறைந்த ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்படும் ராடர் ஆகும்.

இதன் கணிப்பொறி அமைப்பும் நவீனமானது, இந்த கணிப்பொறி அமைப்பு ராடாரை எளிதாக கட்டுப்படுத்தவும், கட்டளைகளை வழங்கவும் வழி செய்யும். இந்த அமைப்பு ராடாரை பல பணிகளுக்கு ஈடுபடுத்தும், குறிப்பாக கண்காணிப்பு, நீர்மூழ்கி தேடுதல் மற்றும் அதை தொடர்ந்து செல்லுதல், சூழ்நிலையை கண்காணித்தல் மற்றும் எல்லைகளை வகுத்தல் போன்ற பணிகளையும் கூடுதலாக செய்யும்.

இந்த ராடாரை அமெரிக்காவின் கப்பல்படையில் உள்ள ஆளில்லா நீர்மூழ்கி அழிக்கும் ஹெலிகாப்டரான MQ 8C மற்றும் நார்வே நாட்டு கப்பல் படையும் ஏற்கனவே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய கப்பல் படையின் நீர்மூழ்கி எதிர்க்கும் அமைப்பு மிகவும் வலுவிழந்த நிலையிலேயே இருந்து வந்தது, சமீபத்தில் தான் சில முயற்சிகள் எடுக்கப்பட்டு புதிய கருவிகள் வாங்கப்பட்டும், பழைய கருவிகள் நவீனப்படுத்தப்பட்டும் வருகிறது, அதன் ஒரு பகுதியாகவே இந்த நவீனப்படுத்தலுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Ka 28 ஹெலிகாப்டரில் சேர்க்கப்படும் இந்த நவீன கருவிகள் கப்பல் படைக்கு கூடுதல் வலிமையை வழங்கும் என்றாலும், மிக பழமையான ஹெலிகாப்டர்கள் என்பதால் அதன் செயல்பாடு திருப்திகரமாக இருக்காது என்பது பல பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் கருத்து ஆகும். இதற்கு செலவிடும் தொகைக்கு பதிலாக புதிய S70B நீர்மூழ்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களையே வாங்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.