PAK FA விமானம் திறன் குறைந்ததா, வாங்க தயக்கம் கட்டும் விமானப் படை

 

இந்திய விமானப் படை ரஷ்யாவுடன் சேர்ந்து 5-ம் தலை முறை போர் விமானங்களை தயாரிப்பதாக இருந்தது, ஆனால் அதன் மாதிரி விமானமான PAK FA நினைத்தது போல் இல்லை என்றும் விமானத்தில் பல குறைபாடுகள் உள்ளதையும், ரஷ்யா பணத்தின் மீது மட்டுமே குறியாக இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே பிரச்சனையைக் களைய இந்திய விமானிகளை வைத்து PAK FA விமானத்தை சோதனை செய்ய பாதுகாப்பு துறை சார்பில் ரஷ்யாவிடம் பரிந்துரை வைக்கப்பட்டது. இந்தியாவின் கோரிக்கையை மறுத்த ரஷ்யா 25,000 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே இந்திய விமானிகளை அனுமதிக்க முடியும் என்று கூறிவிட்டது.

அதோடு மட்டுமல்லாமல், ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணையான S400-யும் வாங்க இந்தியா ஆர்வம் தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யாவோ PAK FA  போர் விமான ஒப்பந்தத்தையும் S 400 ஏவுகணை ஒப்பந்தத்தையும் ஒன்றிணைத்து விட்டது. வாங்குவது என்றால் இரண்டையும் இந்தியா வாங்க வேண்டும் இல்லை என்றால் ஒன்றுமே கிடைக்காது என்றவாறு ரஷ்யா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு ஒப்பந்தங்களையும் கிடப்பில் போட்டுள்ளது மத்திய அரசு, அதிலும் முக்கிய காரணிகளாக PAK FA விமானத்தை வேறு நாடுகளுக்கு விற்பது மற்றும் சீனாவிற்கு S 400 ஏவுகணைகளை வழங்குவது குறித்து  மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

PAK FA விமான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் 15 பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதில் முக்கியமாக நம்பிக்கை இல்லாத எஞ்சின், அதிக ராடர் எதிரொளிக்கும் வடிவம், மற்றும் திறன் குறைந்த ராடர் ஆகியன அடங்கியுள்ளது . இது குறித்து விளக்கம் கேட்டு இந்தியா சார்பில் கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் படையை பொறுத்தவரையில், ரஷ்யாவிடம் வாங்கிய சுகோய் போர் விமானத்தின் கதையை போல் இதுவும் ஆகிவிடக் கூடாது என்று உறுதியாக உள்ளது.