5-ம் தலை முறை போர் விமானத்தை சோதனை செய்தது ஜப்பான்

5-ம் தலை முறை நவீன போர் விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது ஜப்பான், இதன் மூலம் உள்நாட்டிலேயே நவீன போர் விமானங்களை தயாரிக்கும் நான்காவது நாடாக அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய நாடுகளுடன் சேர்ந்துள்ளது. அதிலும் விமானத்தின் எஞ்சின் முதல் ராடர் வரை தனது உள்நாட்டிலேயே தயாரித்து இந்த விமானத்தில் பொருத்தி முதல் பறக்கும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஜப்பானின் மிட்ஷுபிஷி  நிறுவனம் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள  இந்த X 2 விமானத்தில் அதி நவீன ராடர்கள், எதிரி ராடர்களை குழப்பும் நவீன நுண்ணலை உருவாக்கும் கருவிகள், பாதுகாக்கப்பட்ட ஏவுகணை வீசும் அமைப்பு, விமானத்தை கட்டுப்படுத்த பைபர் இழைகளால் ஆன வயர்கள், மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளது.

இந்த விமானத்தின் தொடர் சோதனைகள் வரும் ஆண்டுகளில் நிறைவு பெற்று, 2019 முதல் சிறு சிறு தொகுதிகளாக விமானப் படையில் சேர்க்கப்படும் என்று ஜப்பானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டு விமானப் படையில் சுமார் 90 அதி நவீன F2 போர் விமானங்கள் உள்ளன. இவற்றை நீக்கி விட்டு புதிய 5-ம் தலை முறை போர் விமானங்களை சேர்க்க ஜப்பான் பாதுகாப்புத் துறை முடிவெடுத்து ATD-X  என்ற பெயரில் புதிய விமானம் ஒன்றை உருவாக்க அது அனுமதியும் அளித்தது. ஜப்பானின் F 2 விமானம் அமெரிக்காவின் F 16 விமானத்தின் ஜப்பானிய வடிவம் ஆகும்.

இந்த நவீன விமானங்களை படையிலிருந்து நீக்கி விட்டு அதி நவீன 5-ம் தலைமுறை ராடார் கண்ணில் புலப்படாத விமானத்தை சேர்க்க திட்டமிட்டிருந்தது. அதன் படி F 2 விமானத்திற்கு பதிலாக ATD-X திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட X2 விமானமும். F4 விமானத்திற்கு பதிலாக அமெரிக்காவின் F35 விமானமும் சேர்க்கப்படவுள்ளது.

மேலும் ஜப்பானின் விமானப் படையில் சுமார் 150 அதி நவீன F15 போர் விமானங்களும் உண்டு, பசிபிக் நாடுகளிலேயே தலை சிறந்த போர் விமானங்களை வைத்துள்ளது ஜப்பானிய விமானப்படையே.