தேஜாஸ் போர் விமான குறைகளை களைய சாப் நிறுவனத்தின் உதவியை நாடுகிறது DRDO

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் பல குறைபாடுகள் உள்ளதால் அதை படைகளில் சேர்க்க விமானப்படை தயக்கம் காட்டி வந்தது, இருப்பினும் குறைபாடுகளுக்கு மத்தியில் 20 விமானங்களை வாங்க ஒத்துக்கொண்டது. தேஜாஸ் விமானத்தில் மாறுதல்கள் செய்து அதை விமானப்படைக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தது DRDO, அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் வேறு வழியின்றி வெளி நாடுகளின் உதவியை கோரியுள்ளது DRDO.

தேஜாஸ் போர் விமானத்தின் முக்கிய குளறுபடிகளான, குறைந்த பறக்கும் தூரம், மின்னணு போர் கருவிகள் இல்லாதது, வானிலேயே எரிபொருள் நிரப்ப இயலா தன்மை மற்றும் ராடரால் கட்டுப்படுத்தும் ஏவுகணை வீசும் திறன், ஆகியவை கண்டறியப்பட்டு அதை களையுமாறு விமானப்படை கோரிக்கை வைத்தது, குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே அதிக அளவில் தேஜாஸ் விமானத்தை வாங்க முடியும் என்றும் திட்ட வட்டமாக அறிவித்து விட்டது.

மேற்கொண்ட குறைகளை களைந்து மார்க் 1 A என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்க DRDO மற்றும் ADA திட்டமிட்டது, அதன் படி இஸ்ரேல் நாட்டிலிருந்து அதி நவீன ராடர்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டிடமிருந்து வானில் எரி பொருள் நிரப்பும் அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட்டன.

இருப்பினும் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து முழு கட்டுப்பாடுடன் கூடிய போர் விமானத்தை உருவாக்க இயலவில்லை, அதனாலேயே அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டும் தேஜாஸ் போர் விமான திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை.

2018-க்குள் இந்த மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் விமானத்தை இந்திய விமானப்படைக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இருப்பினும் இதுவரை எந்த வேலைகளும் சரியாக நடக்கவில்லை, கால தாமதத்தை கருத்தில் கொண்டு வெளிநாட்டினரின் உதவியை கோரியுள்ளது DRDO.

சுவீடனின் சாப் நிறுவனம் உலகின் முன்னணி விமான மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும், அது தனது கிரிப்பன் விமானத்தை இந்திய விமானப்படைக்கு பரிந்துரைத்தது, அந்த விமானத்தை வாங்கும் பட்சத்தில் இந்திய தயாரிப்பான தேஜாஸ் மற்றும் AMCA  தயாரிப்பிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அறிவித்தது.

இருப்பினும் பிரான்ஸ் அரசின் ரபேல் போர் விமானத்தையே இந்திய விமானப் படை தேர்ந்தெடுத்தது. பிரான்ஸ் நாட்டின் டியசால்ட் நிறுவனமும் சாப் நிறுவனத்தின் அதே ஆபரை வழங்கியது, ஆனால் ரபேல் திட்டம் இதுவரை கையெழுத்தாகாததினால் தேஜாஸ் விமானத்திற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

எனவே இன்னும் காலம் தாழ்த்தாமல், வெளி நாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது DRDO, Saab நிறுவன அதிகாரிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள DRDO அதிகாரிகள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், அடுத்த சில நாட்களில் சுவீடன் அரசு மற்றும்  சாப் நிறுவன உயர் அதிகாரிகள் இந்தியா வரவுள்ளதாகவும்  எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.