எல்லையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு மத்திய அரசு அனுமதி

இந்திய பாகிஸ்தான் எல்லையை முழுவதுமாக கண்காணித்து ஊடுருவலை முழுமையாக கட்டுப்படுத்த 5 அடுக்கு பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 2900 கிலோ மீட்டர்  நீளமுள்ள இந்திய பாகிஸ்தான் எல்லை 24 மணி நேர கண்காணிப்பிற்குள் வரவுள்ளது.

நவீன தொழில் நுட்பங்களான, CCTV கண்காணிப்பு காமிராக்கள், மனித உடலின் வெப்பத்தை வைத்து அடையாளம் காணும் கருவிகள், இரவில் பார்க்கும் கருவிகள், சிறிய ராடர் கருவிகள், மற்றும் லேசர் பாதுகாப்பு கருவிகள் ஆகிய அனைத்தையும் ஒரு சேர இணைத்து எல்லையை 24 மணி நேரமும் கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும், அதற்கு அடுத்து உள்ள உணரும் கருவிகள் எளிதாக கண்டுபிடித்து விடும். இந்திய பாகிஸ்தான் எல்லையில் முழுவதுமாக வேலி அமைக்க முடியாது, ஆகவே சுமார் 130 வேலி இல்லாத இடங்களில் லேசர் ஒளி கற்றைகளை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ச்சியாக பாய்ச்சப்படும் இந்த லேசர் கதிரில் ஏதாவது தடை ஏற்பட்டால், அது ஊடுருவலையையே சுட்டிக் காட்டும். இது மலை மற்றும் ஆற்று படுகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் இந்த பாதுகாப்பு அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படுத்தவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. CIBMS என்று அழைக்கப்படும் இந்த கட்டுப்பாட்டு அமைப்பு 24 மணி நேரமும் நடப்பதை கண்காணிப்பதோடு, குறிப்பிட்ட ராணுவ நிலைக்கும் உடனடியாக அனுப்பும். இதன் மூலம் ஊடுருவல் மற்றும் கடத்தல் இரண்டையும் கணிசமாக குறைக்க முடியும் என்று திட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த காட்டுப்பாட்டு அமைப்புகள் எல்லை அருகே பல இடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது, அதிலும் குறிப்பாக குஜராத் மற்றும் பஞ்சாப் பகுதிகளில்  முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது.