அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை, ராணுவ கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தார், கோவாவில் உள்ள கப்பல் படை விமான தளமான ஹன்சாவில் தரை இறங்கிய அவரை கப்பல் படை அதிகாரிகள் அமெரிக்க தூதர் வர்மா ஆகியோர் வரவேற்றனர், பயணத்தின் முக்கிய அம்சமாக அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்கள் வாங்குவது குறித்தும், அமெரிக்க இந்திய ராணுவ நடவடிக்கைகளை ஒன்றுபடுத்தும் திட்டங்கள் குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படவுள்ளது.

விமானப்படை போர் விமானங்களின் எண்ணிகையை அதிகரிக்க இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இறுதி செய்யப்பட்ட ரபேல் போர் விமானத்தின் ஒப்பந்த தொகை அதிகமாக இருப்பதால் அது இது வரை கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் அதை விட குறைந்த செலவில் F 18 போர் விமானங்களை  இந்தியாவிலேயே உருவாக்கி இந்திய விமானப் படைக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்காவின் போயிங்க் நிறுவனம் அறிவித்தது.

அது குறித்து போயிங் நிறுவன அதிகாரிகள் இந்திய அரசுடனும் விமானப் படை அதிகாரிகளுடனும் கடந்த சில நாட்களாக உயர்மட்ட பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அதன் இறுதி முடிவு குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் கலந்தாலோசித்து விட்டு அறிவிக்கவுள்ளது இந்தியா. இதை அடுத்த சில நாட்களுக்குள் இந்தியா அறிவிக்கும்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜப்பான் சென்றிருந்த போது அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலை சுற்றி பார்க்க அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்டர் கூட்டி சென்றார், அதைப் போல இந்தியா வந்துள்ள அவரை இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான விக்ரமாதித்யா- வில் வந்து சந்தித்து, அவருக்கு கப்பலையும் சுற்றி காட்டவுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர்.

அமெரிக்கா ராணுவ கூட்டமைப்பில் சேர இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்தது, இதற்கு தற்போதைய அரசும் முழு ஆதரவு அளித்து வருகிறது, இதன் மூலம் அமெரிக்க படைகள் இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த முடியும். இந்த ராணுவ கூட்டு ஒப்பந்தம் முக்கியமாக சீனாவை குறிவைத்தே நகர்த்தப்படுகிறது. சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமன்றி இந்தியாவின் தேச விரோத சக்திகளை தூண்டியும் விடுகிறது.

இந்த ஒப்பந்தம் ஏறத்தாழ தயாரகி விட்டது, சமீபத்திய ராணுவ தளபதிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அமெரிக்க பயணம் இதை குறித்தே அதிகம் விவாதித்தது. இந்த ராணுவ கூட்டு ஒப்பந்தத்தை பற்றியும் கார்டரிடம் கலந்து பேசவுள்ளது இந்திய ராணுவ குழு. இந்த மாத இறுதியில் நடைபெறும் முப்படை அதிகாரிகளின் கூட்டதிற்கு பிறகு இது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.