அதானி குழுமத்துடன் சேர்ந்து இந்தியாவில் ஆளில்லா உளவு விமானங்களை தயாரிக்கிறது இஸ்ரேல்

உலகின் ஆளில்லா விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள இஸ்ரேலின் எல்பிட், இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஆல்பா நிறுவனங்களுடன் சேர்ந்து ஹெர்மஸ் 450 மற்றும் ஹெர்மஸ் 900 என்னும் இரண்டு வகையான அதிக செயல் திறன் கொண்ட ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே கையெழுத்தாகி விட்டதாகவும், இறுதி செயல்வடிவ ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் கையெழுத்தாகும் என்றும் இஸ்ரேல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில் கூடிய, மூன்று மேற்கூறிய நிறுவனங்களின் அதிகாரிகள், இந்தியாவில் இதை தயாரிப்பது குறித்தும், தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ளுவது குறித்தும், மேலும் விமானத்தை மேம்படுத்தி ஆயுதங்களை சேர்ப்பது குறித்தும் விவாதித்ததாக ஆங்கில செய்தி நிறுவனமான ப்ளைட் குளோபல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு துறையில் இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான ஆளில்லா உளவு விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன, இந்தியா மேலும் அதிக அளவில் பல தரப்பட்ட வடிவில் உள்ள உளவு விமானங்களை வாங்க ஏற்கனவே டெண்டர் விடுத்துள்ளது.

இந்தியாவில் இஸ்ரேலின் உதவியுடன் தயாரிக்கப்படும் இந்த உளவு விமானங்கள் இந்தியா படைகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமின்றி, வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.