இந்தியாவின் T 72 டாங்கிகளை நவீனப்படுத்த ராணுவம் திட்டம்

இந்திய ராணுவத்தின் முன்னணி கவச வாகனமாக T 72  டாங்கி செயல்படுகிறது, தற்போது ராணுவம் சுமார் 2000 மேம்படுத்தப்பட்ட அஜேயா T 72 M2 டாங்கிகளை பயன்படுத்தி வருகிறது, அதன் வேகத்தையும் வலிமையையும் அதிகரிக்க தற்போதுள்ள 680 குதிரைத் திறன் உள்ள என்ஜினை மாற்றி 1000 குதிரைத் திறன் உள்ள என்ஜினை பொருத்த ராணுவம் முடிவெடுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற ரஷ்யாவும் இஸ்ரேலும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இதை இஸ்ரேலுக்கே கொடுக்க வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் இந்த டாங்கிகளில் உள்ள பல மின்னணு கருவிகள் இஸ்ரேல் நாட்டிடமிருந்து தான் வாங்கி பொருத்தப்பட்டது, மேலும் இஸ்ரேலின் நிம்டா என்ற நிறுவனம் ஏற்கனவே சீச் நாட்டின் T 72 டாங்கிகளை வெற்றிகரமாக மேம்படுத்தி 1000HP திறனுள்ள என்ஜினை பொருத்தியுள்ளது.

இஸ்ரேலின் நிம்டா நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் பெர்க்கின்ஸ் நிறுவனம் தயாரித்த கான்டோர் என்ஜினையும், அமெரிக்காவின் அல்லிசன் நிறுவனம் தயாரித்த கியர் தொகுதியையும் பயன்படுத்தி T 72 டாங்கின் வேகத்தையும் செயல் திறனையும் அதிகரிக்கும். இதே இஞ்சின் அமைப்பு தான் இங்கிலாந்து ராணுவத்தின் சலெஞ்சர் டாங்கிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

1978-இல் இந்திய ராணுவத்தின் அவசர பயன்பாட்டிற்காக இந்த டாங்கிகள் சோவியத் நாட்டிடமிருந்து வாங்கப்பட்டது, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சோவியத் தரம் குறைந்த குரங்கு வடிவம் என்று அழைக்கப்படும் T 72 M  என்ற டாங்கிகளை வழங்கியது. இதில் உள்ள குறைகளை பின்னாட்களில் கண்ட இந்திய ராணுவம் முறையான மேம்படுத்துதல் தேவை என்று அரசை அறிவுறுத்தியது, அதோடு மட்டுமல்லாமல் சோவியத் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவிலேயே மேலும் சுமார் 1500 டாங்கிகளை உருவாக்கும் ஒப்பந்தத்தையும் கைப்பற்றிக் கொண்டது.

நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்த டாங்கிகளின் ஒரு சில பார்க்கும் கருவிகள் ரஷ்யாவால் நவீனப்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்த டாங்கிகளால் இருளில் செல்ல இயலவில்லை, பிறகு இஸ்ரேலின் உதவியுடன் இந்த டாங்கிகளில்  இருளில் பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டன, இஸ்ரேல் அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமான ஆல்பா சிஸ்டம்-க்கும் கொடுத்து உதவியது. தற்போது வரை சுமார்  1000 டாங்கிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.