அரசு முறை பயணமாக இஸ்ரேல் செல்கிறார் இந்திய விமானப்படை தளபதி

இந்திய விமானப் படை தளபதி அருப் ராஹா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அவரின் இந்த பயணம் இரு நாடுகளுக்குமிடையே உள்ள ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் செல்லும் அவர், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மோசே யாஅலோன், இஸ்ரேல் பாதுகாப்புப் படை தளபதி காடி ஐசன்காட், இஸ்ரேல் விமானப் படை தளபதி அமீர் எஷேல் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார், இந்த சந்திப்பில் தற்போது இரு நாடுகளுக்குமிடையில் உள்ள இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் அதை குறித்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் செல்லும் விமானப் படைத் தளபதி, இஸ்ரேல் நாட்டிலுள்ள பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று அங்குள்ள ராணுவ தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார், அதோடு அவர்களின் போர் நடவடிக்கை பற்றியும் கலந்தாலோசிக்கவுள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டின் சிறந்த விமானப் போர் பயிற்சி கல்லூரியான ஹட்சரீம் விமான தளத்திற்கும் செல்லவுள்ளார், அங்கு பல்வேறு நிகழ்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் செல்லும் அவர் முதலில் ஜெருசலேமில் உள்ள யாத் வஷீம் நினைவிடத்திற்கு செல்லவுள்ளார், அது இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவு சின்னம் ஆகும், மேலும் அதன் அருகே உள்ள மற்றொரு நினைவிடத்திற்கும் அவர் செல்லவுள்ளார். இது முதல் உலகப் போரில் இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபாவை மீட்டெடுத்த இந்திய வீரர்களின் நினைவு சின்னம் ஆகும்.

இந்த பயணம் இஸ்ரேல் மற்றும் இந்திய விமானப் படைகள் சேர்ந்து பணி செய்யவும், வரும் காலங்களில் விமானப் பயிற்சி மேற்கொள்ளவும், உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது