கப்பல் படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகிறது ஹாரியர் போர் விமானம்

இந்திய கப்பல் படையின் விமானம் தாங்கி கப்பலான INS விராட் கப்பல் படையிலிருந்து ஓய்வு பெற்று விட்டது, மேலும் அந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹாரியர் போர் விமானத்திற்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படை இங்கிலாந்து நாட்டிடமிருந்து 30 ஹாரிரியர் போர் விமானங்களை வாங்கியது, அதில் தற்போது 11 தான் பயன்பாட்டில் உள்ளது, சுமார் ஏழு விமானங்கள் விபத்துக்குள்ளானது.

தனது கடைசி பயணத்தில் INS விராட் விமானம் தாங்கி கப்பல் தன்னுடன் 9 ஹாரியர் போர் விமானங்களை சுமந்து சென்றது, தற்போது அவை அனைத்தும் கப்பலிலிருந்து நீக்கப்பட்டு கோவாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து அவை நாட்டின் பல்வேறு அருங்காட்சியகங்களிற்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் அனுப்பப்படவுள்ளது.

இந்த ஹாரியர் போர் விமானங்கள் செங்குத்தாக மேலெழும்பும், அதே போல செங்குத்தாக தரையிறங்கவும் செய்யும், ஹெலிகாப்டர்கள் போலவே இவை செயல்படும் அமைப்புடையவை. இந்த விமானங்கள் கப்பல் படையின் வெள்ளைப் புலிகள் என்று அழைக்கப்படும் கப்பல் படை விமானப் பிரிவில் இருந்தவை.

தற்போது இந்த வெள்ளைப் புலிகள் பிரிவிடம் விமானங்கள் எதுவும் இல்லை, இருப்பினும் இந்த பிரிவிற்கு 2019-க்குள் புதிய போர் விமானங்கள் கொடுக்கப்பட்டு விடும் என்று கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானங்கள் சுமார் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியவை, ஏவுகணைகள், கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள், மற்றும் குண்டுகளை சுமந்து செல்லக் கூடியவை. உலகின் பல்வேறு நாடுகள் இவற்றை பயன்படுத்தியுள்ளன. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் அமெரிக்க கப்பல் படையால் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சில வருடங்ளுக்கு முன்பு தான் இஸ்ரேல் உதவியுடன் இந்த விமானங்கள் நவீனப்படுத்தப்பட்டது, இதில் நவீன ராடர்கள் ஏவுகணைகள், மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் சேர்க்கப்பட்டது.