15,000 கோடி ரூபாய் செலவில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க முடிவு

15,000 கோடி செலவில் ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கும் பரிசீலனையை மத்திய அமைச்சரவைக் குழு நேற்று பரிசீலனை செய்து நிறைவேற்றியது. இதன் மூலம் ராணுவத்திற்கு ஆயிரக்கணக்கில் ஆயுதங்களும் புதிய தளவாடங்களும் வாங்கப்படவுள்ளது. இதன் மூலம் அதிக அளவு ஆயுதங்களை கையிருப்பில் வைப்பதோடு மட்டுமல்லாமல் போர் சமயத்தில் அதிக நாட்கள் போரிடவும் முடியும்.

இந்த ஆயுதக் கொள்முதலில் ராணுவ தரைப்படையினர் அதிகமாக பயன்படுத்தும் கார்ல் குஸ்தாவ் என்னும் ராக்கெட் வீசும் துப்பாக்கிக்கு அதிக அளவில் குண்டுகள் வாங்கப்படவுள்ளது. இந்த துப்பாக்கியை ஒருவர் தோளில் சுமந்து செல்ல முடியும், அதில் குண்டு நிரப்ப இன்னொருவர் தேவைப்படுவர். பல்வேறு வகையான குண்டுகளை இந்த துப்பாக்கி செலுத்தும். இதன் குழல் விட்டம் 83mm ஆகும். இது சுவீடனில் தயாரிக்கப்பட்டு பின்பு இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கியை இந்தியாவின் அனைத்து ராணுவப் பிரிவினரும் எல்லாவித சண்டைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிக்கு சுமார் 65,000 குண்டுகள் வாங்க அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது. இதற்காக 1200 கோடி ருபாய் செலவிடப்படவுள்ளது.

சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் 5000 எதிரி டாங்குகளை அழிக்கும் சிறிய ஏவுகணைகளையும் வாங்க அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது. இது வீரர்களால் எடுத்து செல்லப்பட்டு. எதிரி டாங்குகளை அழிக்க பயன்படுத்தப்படும். இந்த இரு ஒப்பந்தங்களின் மூலம் இந்தியாவின் ஆயுத இருப்பு தற்போதைய 20 நாட்களிலிருந்து அதிகரிக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதோடு கூட சுமார் 1400 கோடி செலவில் தரைப் படை வீரர்களுக்கு 4000 பல்நோக்கு பார்க்கும் கருவிகள் வழங்கப்படவுள்ளன. இவை மூலம் இருளில் மிக துல்லியமாக பார்க்கவும், இலக்கின் தூரத்தை சரியாக கணிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் ராணுவ வீரர்களின் கண்காணிக்கும் திறனையும் சூழ்நிலை விழிப்புணர்வையும் அதிகரிக்க முடியும்.

இதோடு கூட சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் 30 புதிய ராடர்களை வாங்கவுள்ளது இந்திய ராணுவம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுவாதி என்று அழைக்கப்படும் இந்த ராடர், எதிரிகளின் ஆயுதங்கள் சுடும் தன்மையை வைத்து அவை எங்கிருந்து இயக்கப்படுகிறது என்று துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும்.

போர் சமயங்களில் எதிரிகளின் தொலை தூர ஆர்டில்லரிகள் கடும் சேதத்தை விளைவிக்கும், அதோடு அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அழிப்பது என்பது மிகக் கடினம். ஆனால் இந்த ராடர்கள் அதன் இருப்பிடத்தை மிக சரியாக கணித்து அதை ராணுவத்திற்கு தெரிவித்து விடும்.

இதோடு கூட சுமார் 3300 கோடி செலவில் இரண்டு பினாக்கா ராக்கெட் ஏவும் அமைப்பையும், சுமார்  5000 கோடி செலவில் ஒரு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பையும் ராணுவம் கேட்டிருந்தது, ஆனால் அமைச்சரவைக் குழு இது பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்று அறிவித்தது.