மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் விமான தயாரிப்பை இரட்டிப்பாக்க அரசு அனுமதி

இந்திய விமானப் படையின் இலகு ரக விமானமான தேஜஸ் சிறிதளவு மேம்படுத்தப்பட்டு Tejas MK 1 A பெயரில் தற்போது சோதனையில் உள்ளது, இதன் கீழ் சுமார் எண்பது போர் விமானங்களை வாங்க விமானப் படை முடிவெடுத்து அதற்கான ஆர்டரை ஏற்கனவே கொடுத்து விட்டது. ஆனால் தற்போதைய சூழலில் விமான தயாரிப்பு நிறுவனமான HAL ஒரு வருடத்திற்கு எட்டு விமானங்களை மட்டுமே தயாரிக்க முடியும் என்றும், இந்த ஆர்டரை பூர்த்தி செய்ய பத்து வருடங்கள் ஆகும் என்றும் அறிவித்தது.

இதனால் அதிருப்தியடைந்த விமானப் படை தயாரிப்பை இரட்டிப்பாக்க HAL-இடமும், அரசிடமும் கோரிக்கை வைத்தது, அதன்படி தயாரிப்பை இரட்டிப்பாக்க தேவையான பணத்தை செலவிட அரசு முடிவெடுத்து, அதற்கான தொகையை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இதில் 50% தொகை HAL -இன் பட்ஜெட்டிலிருந்தும், மற்ற 50% விமானப் படை மற்றும் கப்பல் படையிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. பணம் ஒதுக்கீடு செய்த அடுத்த 36 மாதத்திற்குள் இரண்டாவது அலகிலிருந்து விமான தயாரிப்பு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில், நவீன AESA ராடர், தொலை தூரம் தாக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை, வானிலேயே எரிபொருள் நிரப்பும் அமைப்பு, மற்றும் மின்னணு போர்க்கருவிகளும் இருக்கும்.  மேம்படுத்தப்பட்ட முதல் விமானம் 2019-இல் வெளிவரும் என்றும் யூகிக்கப்படுகிறது.