லட்ச தீவின் பாதுகாப்பை ஆராய்ந்தது இந்திய கப்பல் படைக் குழு

தெற்கு பிராந்திய கப்பல் படை தளபதி மற்றும் அதிகாரிகள் லட்ச தீவின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினர். இதில் லட்ச தீவில் மேலும் ஒரு கப்பல் படை உதவி தளத்தை அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அரபிக்கடலில் உள்ள லட்சத் தீவு அந்த வழியே நடக்கும் வர்த்தகத்திற்கு பெரும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது.

லட்ச தீவில் பல தீவுக் கூட்டங்கள் உள்ளன. இதில் ஒரு சில தீவுகளிலேயே மக்கள் வசிக்கின்றனர், சில தீவுகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி உள்ளது, ஆனால் பல தீவுகள் இந்திய கப்பல் படையின் கட்டுப்பாட்டின் கீழே உள்ளன. அங்கு பல வகையான கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் படை உதவி மையங்கள் உள்ளன.

இந்த மையங்கள், தொலை தூரம் செல்லும் போர்க் கப்பல்களுக்கு உதவியாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் கொடுக்கவும், அரபிக் கடல் பகுதியைக் கண்காணித்து கடற்கொள்ளையர்கள் மற்றும் பிற நாட்டு கப்பல் படை நடமாட்டத்தை பற்றியும் தகவல் கொடுக்கவும் செய்யும்.

லட்சத்தீவில் சுமார் நான்கு கப்பல் படை உதவி மையங்களும், சுமார் ஆறு கடல் வழிகாட்டி மற்றும் கண்காணிப்பு ராடர்களும் உள்ளன. இவை மூலம் இந்த பகுதியில் செல்லும் எல்லா கப்பல் மற்றும் படகுகளையும் கண்காணிக்க முடியும்.

லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள அகாட்டி தீவில் ஒரு சிறிய விமான தளமும் உள்ளது. இதன் ஓடுபாதை சுமார் 3500 அடி நீளம் கொண்டது, இதிலிருந்து கப்பல் படையின் சிறிய கண்காணிப்பு விமானமான டோர்னியர் விமானத்தையும், சிறிய பயணிகள் விமானத்தையும் இயக்க முடியும்.

இந்த பகுதிகளில் கடற்கொள்ளையை விட பெரிய ஆபத்து வேறு எதுவும் இல்லாததால், அங்கு குறைந்த அளவே படைகளும் கப்பல் படைக் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லட்ச தீவுகளை, அருகில் உள்ள மாலத்தீவு தான் இந்தியாவிற்கு அளித்தது, யூனியன் பிரதேசமாக உள்ள இந்த தீவுக் கூட்டங்கள் கேரளாவின் நீதித்துறையின் கீழ் வருகிறது.