விமானப் படை போர் பயிற்சி Iron Fist-2016

இந்திய விமானப் படை தனது போர் திறனை பறை சாற்றும் வகையில் அயன் பிஸ்ட் என்ற பெயரில் தார் பாலைவனத்தில் மிகப் பெரிய போர் பயிற்சியை இந்த மாதம் 18-ம் தேதி தொடங்கவுள்ளது, இதில் இந்திய விமானப் படையை சேர்ந்த சுமார் 181 விமானங்கள் பங்கேற்கின்றன. இந்த தகவலை துணை விமானப் படை தளபதி டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த போர் பயிற்சி, விமானப் படையின் திறனை நாட்டு மக்களுக்கும், அதே நேரத்தில் எதிரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இருக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சுமார் 181 விமானப் படை விமானங்கள் இதில் பங்கேற்கும், இதில் போர் விமானங்கள், வீரர்களை கொண்டு செல்லும் விமானங்கள், சிறப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் அடங்கும்.

இந்த பயிற்சியின் போது உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட போர் தளவாடங்களின் சக்தியை வெளிப்படுத்த விமானப் படை திட்டமிட்டுள்ளது, அதிலும் குறிப்பாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை போன்றவையும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும் குறிப்பாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்களை தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை, வானிலிருந்து  தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் லேசர் வழிகாட்டுதலுடன் உள்ள குண்டுகள் போன்றவையும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.

இவை அனைத்துமே இரவு மற்றும் பகல் ஆகிய இரண்டு நேரங்களிலும் நடக்கும் ஒத்திகையில் பயன்படுத்தப்படும். இது விமானப்படை எந்நேரமும் எல்லா காலநிலையிலும் செயல்படக் கூடிய திறனை பெற்றுவிட்டது என்று உலகுக்கு பறை சாற்றும். கார்கில் போர் சமயத்தில் விமானப்படையால் இரவு நேரத்தில் செயல்படமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இத பயிற்சிகளின் கூடவே, விமானப் படை கமாண்டோக்களின் சிறப்பு ஒத்திகையும் நடை பெறவுள்ளது, அதிலும் குறிப்பாக போர் சமயத்தில் எதிரிகளின் நிலையை ரகசியமாக அழிப்பது, கடத்தலிலிருந்து மீட்பது, மேலும் போர் சமயங்களில் உதவி புரிவது போன்றவயும் செய்து காட்டப் படவுள்ளது.

இந்த விமானப் படை போர் ஒத்திகையை, இந்தியாவின் தலைமைக் கமாண்டர் மற்றும் இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர் ஆகியோர் நேரடியாகப் பார்வையிட உள்ளனர். நாட்டு மக்களும் இதை குறித்து அறிய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது