பிரதமர் இஸ்ரேல் பயணம், 20,000 கோடி ரூபாய் அளவு ஆயுத பேரம்

இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக அரசு முறை பயணமாக இஸ்ரேல் செல்லவுள்ளார், அவர் அங்கு பல்வேறு இஸ்ரேல் தலைவர்களை சந்திக்கவும், ராணுவத்திற்கு தேவையான சுமார் 20,000 கோடி ருபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவார் என்றும் அரசு செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும், ஆனாலும் குஜராத் முதலமைச்சராக மோடி ஏற்கனவே இஸ்ரேலுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் சர்வதேச அளவில் மிக முக்கிய பயணமாக இருக்கும் என்பதும், இஸ்ரேலுடன் அரசு மிக நெருங்கி பழகுவதை உலகிற்கு காட்டவும் இந்த பயணம் முக்கியமானது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவிற்கு அடுத்ததாக இந்தியாவிற்கு அதிக அளவு ஆயுதங்களை இஸ்ரேல் தான் தருகிறது, முக்கியமாக நவீன ராடர்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள், கண்காணிக்கும் கருவிகள் போன்ற அதி உயர் ராணுவ தொழில் நுட்ப சாதனங்கள் இஸ்ரேலிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதோடு இந்தியாவின் விவசாயத் துறையிலும் இஸ்ரேல் பெரும் பங்கு வகிக்கிறது, நாட்டின் பல கிராமங்களில் இஸ்ரேலின் விவசாய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாநில அரசுகளுடன் இணைந்து இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இஸ்ரேல் செல்லும் பிரதமர் முன்னிலையில், ராணுவத்திற்கு மற்றும் கப்பல் படைக்கு தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ராடர்கள், விமானப் படைக்கு தேவையான ஏவுகணைகள் வழிகாட்டும் அமைப்புகள், மற்றும் கண்காணிப்பு கருவிகள், கூடுதலான பறக்கும் ராடர்கள் போன்றவை வாங்கப்படவுள்ளது, இதற்கான மதிப்பு சுமார் 20,000 கோடிக்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.