சியாச்சின் தளத்தை காலி செய்ய முடியாது, பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டம்

சியாச்சின் ராணுவ தளத்தை காலி செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், பாகிஸ்தானை நம்ப முடியாது என்றும், இந்தியா காலி செய்தால் பாகிஸ்தான் அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

சியாச்சின் தளத்தை காலி செய்தால், இந்தியாவிற்கு அது பேராபத்தாக முடியும் என்றும், 1984-இல் நடந்த கடும் சண்டையில் இந்திய வீரர்கள் தங்கள் உயிர்களை தந்து சியாச்சின் பிரதேசத்தை இந்தியாவிற்கு மீட்டுக் கொடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

சமீபத்தில் நடந்த பனிச்சரிவில் இந்திய வீரர்கள் சுமார் 10 பேர் உயிரிழந்தனர், அதனால் அந்த தளத்தை காலி செய்யலாம் என்று சில கருத்துகள் முன்வைக்கப்பட்டது, இருப்பினும் படை வீரர்களைக் கொண்டே அந்த முக்கியமான பகுதிகளை கட்டுக்குள் வைக்க முடியும் என்றும், அதற்காக உயிர் நீர்த்த வீரர்களை இந்தியா மறக்காது என்றும் அவர் கூறினார்.

1984-இல் சியாச்சின் பகுதி இந்தியாவிற்கு சொந்தமாக இருந்தது, ஆனால் இந்தியா அங்கு படைகளை நிலை நிறுத்தவில்லை, இதை அறிந்த பாகிஸ்தான் தனது படைகளுடன் சியாச்சின் பகுதியை கைப்பற்றிக் கொண்டது. பின்பு நடந்த கடும் சண்டையில் இந்தியா வென்று மீண்டும் சியாச்சின் பகுதியை தனதாக்கிக் கொண்டது. இன்று வரை அங்கு படைகளை நிறுத்தி கண்காணித்தும் வருகிறது.

அன்றிலிருந்து இன்று வரை பாகிஸ்தான் சியாச்சின் பகுதியை கைப்பற்ற பல முயற்சிகள் எடுத்த போதிலும், இந்தியா தொடர்ந்து சியாச்சின் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

கடந்த 32 வருட சியாச்சின் பணியில் 915 ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்துள்ளனர். தற்போதைய நாட்களில் உயிரிழப்பு வெகுவாகக் குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.