ஈரான் நாட்டில் உள்ள சபார் துறைமுக பணிகளுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியது மத்திய அரசு

பிரதமர் தலைமையிலான காபினெட் அமைச்சர்கள் கூட்டம் ஈரான் நாட்டில் உள்ள சபார் துறைமுக பணிகளை ஆரம்பிக்க சுமார் 1000 கோடியை ஒதுக்கி அனுமதி அளித்துள்ளது. சபார் துறைமுகம் பெர்சிய வளைகுடா பகுதியில் உள்ளது, இதை விரிவுபடுத்தி இந்தியாவுடனான வணிகத்தை விரிவுபடுத்த ஈரான் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தது.

இந்த சபார் துறைமுகம் மூலம் இந்தியாவின் நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வணிகத்தை அதிகரிக்கவும், ஆப்கான் நாட்டுடன் கடல் வழி மற்றும் தரை வழியாக வாணிகம் செய்யவும் பொருட்களை எடுத்து செல்லவும் இந்த துறைமுகம் பெரிதும் பயன்படும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஈரானுடன் கையெழுத்தானது. இதன் மூலம் சபார் துறைமுகத்தின் முதல் தொகுதியில் உள்ள இரண்டு பகுதிகளை இந்தியாவே கையாளும், அதற்காக சுமார் $85 மில்லியன் பணத்தை அந்த துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்யும். மேலும் கிடைக்கும் லாபத்தில் சுமார் $20 மில்லியன் அளவு பணத்தை துறைமுக வளர்ச்சி பணிகளுக்காக செலவு செய்யவும் இந்தியா சம்மதித்துள்ளது. இந்த ஒப்பந்தின் குத்தகை காலம் சுமார் 10 ஆண்டுகள் ஆகும்.

பத்து வருடத்திற்கு பிறகு அந்த துறைமுகத்தையும் அதில் உள்ள கருவிகளையும் ஈரான் அரசுக்கே இந்தியா கொடுத்து விடும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்காக சுமார் $150 மில்லியன் அளவு பணத்தை ஈரானின் சபார் துறைமுகத்தில் முதலீடு செய்ய ஈரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தியா $150 மில்லியன் அல்லது 1000 கோடி ரூபாயை அந்த பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது.

இந்த துறைமுகம் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான முதல் 18 மாதங்களில் திறக்கப்பட்டு, ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடைபெறும். துறைமுகத்தின் இரு படுக்கைகளையும் இந்தியாவின் தனியார் நிறுவனமான India Ports Global Private லிமிடெட் –  கவனித்துக் கொள்ளும்.

இந்த சபார் ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு நிதி அமைச்சகத்தையும், வெளியுறவு அமைச்சகத்தையும், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தையும், பிரதமர் தலைமையிலான மந்திரிகள் கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.