ராணுவம் போருக்கு தயாராக இல்லை, அஜீத் தோவல்

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய தீவிரவாத தடுப்பு கருத்தரங்கில் கூறும் போது, இந்திய ராணுவம் போருக்கு தயாராக இல்லை என்றும் அதற்கு சரியான திட்டமிடல் இல்லாததும், அரசின் தவறான கொள்கைகளுமே காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார், அதற்கு ஆதாரமாக அவர் பல கருத்துக்களையும் முன்வைத்தார்.

கார்கில் யுத்தத்திற்கு பின்பு பாகிஸ்தானும் இந்தியாவும் தொலை தூரம் தாக்கும் ஆர்ட்டில்லரிகளை எல்லையிலிருந்து விலக்கிக் கொண்டன, ஆனால் பாகிஸ்தான் அதே நேரத்தில் தொடர்ந்து இந்தியாவை சீண்டும் நோக்குடன், ராணுவ பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை இந்தியாவில் தொடர்ந்து ஊடுருவ செய்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இந்தியாவிற்கு பல வழிகளில் தொல்லை ஏற்படுகிறது, பாதுகாப்பு முதல் வணிகம் வரை இதனால் பாதிக்கப்படுகிறது, அதை தடுக்க இந்தியா தவறான முடிவை எடுத்தது, ராணுவத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது, மேலும் எல்லையில் தடுப்பு வேலிகளை அமைத்து ஊடுருவலை தடுக்கலாம் என்று நினைத்தது, ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதற்கு பதிலாக, ராணுவம் சிறப்பு மாநில போலீஸ் பிரிவுக்கும் துணை ராணுவப் படைக்கும் பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், அதே நேரம் ராணுவம் எல்லையை கடந்து சென்று பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் நடந்து வரும் தீவிரவாத பயிற்சி முகாம்களை அழிக்க வேண்டும், சில சமயங்களில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளையும் கொலை செய்ய வேண்டும்.

எல்லையில் உள்ள தடுப்பு வேலி எந்த தீவிரவாதியையோ அல்லது பாகிஸ்தான் இராணுவத்தையோ தடுக்காது, அதற்கு உதாரணமாக  இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகள் பிரான்ஸ் நாட்டின் தடுப்பு வேலிகளை தகர்த்து முன்னேறியதை குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய ராணுவ தளபதிகள் எல்லோருமே போர் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்கள் சீக்கிரமே பணி ஓய்வு பெற்று விடுவார்கள், தற்போதைய இந்தியாவின் 80% ராணுவம் தீவிரவாதிகளை எதிர்க்கும் முறையில் கை தேர்ந்தவர்களே தவிர போர் புரிதலில் இல்லை, அடுத்த தலைமுறை ராணுவ தளபதிகள் போர்களில் ஈடுபடாதவர்களாக இருப்பார்கள், வெறும் தீவிரவாத எதிர்ப்பு படைகளில் பணியாற்றியவர்களாகவே இருப்பார்கள் என்றும் தோவல் கூறினார்.