வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க ஸ்வீடன் திட்டம்

 

ஸ்வீடன் நாட்டின் அரசு நிறுவனமான சாப் இந்தியாவின் தனியார் நிறுவனமான கல்யாணி குழுமத்துடன் கூட்டு சேர்ந்து கைகளில் ஏந்தி செல்லும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே சாப் நிறுவனம் இரு வகையான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயாரிக்க உள்ளது. ஒன்று கைகளில் எளிதாக எடுத்து செல்லும் வான் பாதுகாப்பு ஏவுகணை மற்றொன்று சிறிய வாகனத்தில் வைத்து ஏவும் அமைப்பு.

இந்திய ராணுவத்திற்கு இது போன்ற ஏவுகணைகள் அதிகம் தேவைப்படுகிறது. தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் Igla ஏவுகணை மிகவும் பழையதாகி விட்டது. நவீன கால போரில் இவற்றால் விமானங்களையோ, ஹெலிகாப்டர்களையோ சுட்டு வீழ்த்த முடியாது. எனவே அவற்றை நீக்கி புதிய ஏவுகணைகளை வாங்க பல முறை ஒப்பந்தம் வெளியிட்டது.

ஏற்கனவே இரு முறை இதே ஒப்பந்தம் வெளியிடப்பட்டு பின்பு பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதும் இதற்கான ஒப்பந்தம் இது வரை வெளியிடப்படவில்லை எனினும் சீக்கிரமே வெளியிட வாய்ப்புகள் அதிகம். இந்த ஒப்பந்தத்தை பெறவே ஸ்வீடன் உட்பட பல நாடுகள் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஸ்வீடன் பிரதமர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் சாப் நிறுவன அதிகாரிகளும் கல்யாணி நிறுவன அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். இந்திய ராணுவம் சாப் நிறுவனம் தயாரித்த RBS 70 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு செய்தால் அதை கல்யாணி இந்தியாவிலேயே தயாரித்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.