இந்தியாவில் துப்பாக்கி தொழிற்சாலை அமைக்கிறது இஸ்ரேல்

இஸ்ரேலிய அரசு நிறுவனமான IWI-இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலை, இந்தியாவின் தனியார் நிறுவனமான புஞ்ச் லாயிட்-டன் சேர்ந்து இந்தியாவில் துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் 51% பங்குகள் புஞ்ச் லாயிட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முதல் கட்டமாக துப்பாக்கிகளுக்கு தேவையான சிறிய உபகரணங்களை செய்து இஸ்ரேல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும். மேலும் இஸ்ரேலின் அடுத்த ஒவ்வொரு துப்பாக்கியிலும் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 80% ஆக இருக்கும்.

இந்திய ராணுவமும் இஸ்ரேலிய IWI நிறுவனம் தயாரித்த துப்பாக்கிகளை பயன்படுத்துகிறது. அதிலும் முக்கியமாக சிறப்பு அதிரடிப்படையினர் பயன்படுத்தும் TAR 21, சிறிய தானியங்கி துப்பாக்கியான Uzi மற்றும் தொலை தூரம் வரை குறிவைத்து தாக்கும் Galil போன்ற துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது.

மேலும் இந்தியாவில் இது போன்ற சிறந்த துப்பாக்கிகளை தயாரிப்பதன் மூலம், அதன் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து வரும் காலங்களில் அதை விட சிறந்த துப்பாக்கிகளை இந்தியாவிலேயே இஸ்ரேலின் உதவியுடன் செய்ய முடியும்.

மேலும் இந்திய பாதுகாப்பு துறை புதிய துப்பாக்கிகளை வாங்கும் போது அதன் விலையும் குறைவாக இருக்கும், மேலும் உதிரி பாகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது.

தற்போது துப்பாக்கி செய்யும் நிறுவனங்கள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிகளை தனியார் நிறுவனங்களில் செய்ய அரசு அனுமதி அளித்தது. தற்போதே முதல் முறையாக  தனியார் நிறுவனம் வெளி நாடுடன் சேர்ந்து தரத்தில் சிறந்த துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க உள்ளது.