பாதுகாப்பிற்காக அரை ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கியது அமெரிக்கா

இந்த வருட பட்ஜெட்டில் சுமார் $583 பில்லியன் அளவு பணத்தை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது அமெரிக்கா. இது அந்த நாட்டு வருமானத்தில் சுமார் 1.7% ஆகும். இதில் ஆராய்ச்சிக்கு மட்டுமே சுமார் $71 பில்லியன் அளவு பணத்தை ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவின் மொத்த ராணுவ பட்ஜெட்டை விட அதிகம். மேலும் சுமார் $7 பில்லியன் அளவு பணத்தை ISIS தீவிரவாதிகளை ஒடுக்க பயன்படுத்தவுள்ளது. இது பாகிஸ்தானின் மொத்த ராணுவ பட்ஜெட்டை விட அதிகம்.

அமெரிக்காவின் முக்கிய எதிரிகளான சீனா மற்றும் ரஷ்யா முறையே $135 மற்றும் $70 பில்லியன் அளவு பணத்தை கடந்த ஆண்டு ராணுவத்திற்காக ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த ஆண்டு ராணுவ பட்ஜெட்டிலும் அதிக அளவு பணம் அமெரிக்காவின் விமானப்படையின் ரகசிய திட்டத்திற்கே  செலவிடப்படவுள்ளது. மேலும் அதிக அளவு பணம் அமெரிக்காவின் அடுத்த தலை முறை குண்டு வீசும் விமான தயாரிப்பிற்கு செலவிடப்படவுள்ளது. இதற்காக சுமார் $60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ISIS தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா இந்த முறை அதிக அளவு பணத்தை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார்  இரு மடங்கு ஆகும். அமெரிக்கா வான் வெளி மட்டுமல்லாது தரை வழியிலும் ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போர் புரிந்து வருகிறது. வரும் காலங்களில் மிகப் பெரிய அளவில் தரை வழி தாக்குதலை மேற்கொள்ள உத்தேசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருட பட்ஜெட்டிலும் அதி நவீன குண்டுகளையும் சிறப்பான ஏவுகணைகளையும் வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 45,000 புதிய குண்டுகள், சுமார் $2 பில்லியன் மதிப்பில் தோமாஹாக் ஏவுகணைகள் மற்றும் பல வகையான குண்டுகளும் இந்த முறையும் வாங்கப்படவுள்ளது. அமெரிக்காவின் ஆயுத குடோன்களில் இதை விட அதிக அளவு ஆயுதங்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் $8 பில்லயன் அளவிற்கு இரண்டு அதி நவீன நீர்மூழ்கி கப்பலை இந்த வருடம் கட்ட திட்டமிட்டு அதற்கான முழு தொகையையும் ஒதுக்கியுள்ளது. அதோடு புதிதாக விமானம் தாங்கி கப்பல், நவீன போர்கப்பல்கள், ரோந்து கப்பல்கள் ஆகியவும் வாங்கப்படவுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து ஆப்கான் அரசிற்கு உதவிகள் வழங்க பல பில்லியன் அளவு பணத்தை ஒதுக்கியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு துறை செயலர் கார்ட்டர் தெரிவித்துள்ளார். இந்த தொகை இந்தியாவுடன் சேர்ந்து ஆப்கான் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பிற்காக செலவிடுவதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சுமார் $583 பில்லியன் டாலர்களை செலவிட்டு. அதற்கு அடுத்த பத்து நாடுகளின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக செலவிட்டு வருகிறது அமெரிக்கா.