கண்காணிப்பை அதிகரிக்க பறக்கும் ராடர்களை வாங்குகிறது விமானப்படை

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஊடுருவலைத் தடுக்கவும், வான் பரப்பு கண்காணிப்பை அதிகப்படுத்தவும் சுமார் எட்டு அதி நவீன ஏரோஸ்டட்-Aerostat எனப்படும் பறக்கும் ராடர்களை வாங்க விமானப் படை முடிவெடுத்துள்ளது. இந்த ராடர்கள் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களில் சுமார் 1000 முதல் 15000 அடி உயரத்தில் பறக்க விடப்பட்டு, மேலிருந்து கீழாக வான் பரப்பையும் நிலப் பரப்பையும் கண்காணிக்கும்.

இந்த வகை ராடர்களை வாங்க விமானப் படை பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டிருந்தது, இருந்தாலும் அரசினால் இதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவசரத் தேவைகளுக்காக இஸ்ரேல் நாட்டிலிருந்து இரண்டு ராடர்கள் வாங்கப்பட்டது. அதிலும் ஒன்று தரையிறக்கும் போது சேதமடைந்து விட்டது. ஒன்றே ஒன்று தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்த ராடர்கள் உயரத்திலிருந்து கீழே கண்காணிப்பதால், மிகத் தாழ்வாகப் பறக்கும் எதிரிகளின் ஏவுகணைகளையும் சிறிய உளவு விமானங்களையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும் தரை வழியே எல்லை தாண்டும் பயங்கரவாதிகளையும் இதில் உள்ள கண்காணிக்கும் கருவிகள் மூலமாக எளிதாக கண்டு பிடிக்கலாம்.

இந்திய விமானப் படையிடம் பல விமானங்கள் இது போன்ற கண்காணிக்கும் வேலைகளுக்காக பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலும் அவை ரா உளவுத் துறையாலே பயன்படுத்தப்படுகிறது, இந்த விமானங்களை பயன்படுத்த செலவு அதிகம், மேலும் ஒரே இடத்தில் வெகு நேரம் பறக்க இயலாது, சத்தம் மற்றும் விமானத்தின் குறைந்த பட்ச வேகம் போன்றவை இதன் செயல் திறனை குறைக்கும்.

ஆனால் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களில் இருக்கும் இந்த ராடர்களுக்கு செலவு குறைவு, அதிக நேரம் வானில் இருக்க முடியும். எவ்வித சத்தமும் இல்லாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து பல நாட்கள் பறந்து கண்காணிக்க முடியும்.

பல நாடுகள் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இவற்றை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவின் DRDO-வும் இது போன்ற ராடர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதன் தற்போதைய நிலை பற்றி தெரியவில்லை.