பாகிஸ்தானுடன் ராணுவ பயிற்சி மேற்கொள்கிறது ரஷ்யா

 

முதன் முறையாக பாகிஸ்தான் இராணுவத்தினருடன் போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது ரஷ்ய ராணுவம், மலைகளில் நடக்கும் யுத்தத்தை எவ்வாறு எதிர் கொள்ளுவது என்று இரு நாடுகளும் பயிற்சி மேற்கொள்கின்றன. இந்த வருடம் இதை ஆரம்பித்து தொடர்ச்சியாக வரும் வருடங்களிலும் நடத்த இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

ரஷ்யாவின் ராணுவ படைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ரஷ்யா இந்த வருடம் சுமார் 12 நாடுகளுடன் போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் இந்தியாவுடனான இந்திரா போர் பயிற்சி, மங்கோலியர்களுடனும், வியட்நாமியர்களுடனும் நடக்கும் போர் பயிற்சிகள் முக்கியமானது என்றும், பாகிஸ்தானுடன் முதல் முறை பயிற்சி மேற்கொள்ளவது புதிய அனுபவமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவும் பாகிஸ்தானும் தங்கள் ராணுவ உறவை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறார்கள், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் மீது போடப்பட்டிருந்த ஆயுத வியாபார தடையை ரஷ்யா நீக்கியது, அதன் பிறகு இருவரும் ராணுவம் சம்பந்தமாக பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தங்கள் ராணுவ உறவை மேம்படுத்தி வருகின்றனர்.

அதன் பலனாக பாகிஸ்தானிய ராணுவ தளபதி ரஷ்யா செல்வதும், ரஷ்யா அதிகாரிகள் பாகிஸ்தான் வருவதும் வாடிக்கையாகி விட்டது. மேலும் ராணுவ ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ரஷ்யா ஏற்கனவே துருப்புகளை சுமந்து செல்லும் Mi 17 ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது, தற்போது போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் சுமார் நான்கு Mi 35 என்னும் தாக்கும் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளது, மேலும் அதன் எண்ணிகையை வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது.

மேலும் ரஷ்யாவும் பாகிஸ்தானும் நவீன ரக போர் விமானமான Su35-ய், மற்றும் Tor M எனப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை விற்கும் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது